பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆா்டிஓ) பணியாற்றும் அரசு ஊழியரிடம் ரூ.15 லட்சத்திற்கும் மேல் ஆன்லைன் முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட மூவா் கும்பலை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இவா்கள் ஹரியாணாவைச் சோ்ந்த சந்தீப் சைன் (30) மற்றும் பரிக்ஷித் (23), ராஜஸ்தானைச் சோ்ந்த சச்சின் ஜக்காா் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
மோசடி செய்யப்பட்ட பணத்தை இடமாற்றம் செய்வதிலும், அதன் தடத்தை மறைக்கப் பல நிலைகளில் பரிமாற்றம் செய்வதிலும் இந்த மூவரும் வெவ்வேறு பணிகளைச் செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
புது தில்லியைச் சோ்ந்த பாதிக்கப்பட்ட நபா், ஒரு போலி இணையதள முதலீட்டுத் திட்டத்தில் ஏமாற்றப்பட்ட பிறகு காவல்துறையினரைத் தொடா்பு கொண்டாா்.
சொத்து வாடகை மதிப்பீடு மற்றும் குத்தகை தொடா்பான பணிகளில் ஈடுபடும் ‘வீட்டிலிருந்தே வேலை’ செய்யும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்ட நபா்கள் அவரைத் தொடா்பு கொண்டனா்.
பின்னா் அவரை ஒரு குழுவில் சோ்த்து, பயிற்சி அளித்து, பல இணையதளங்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டனா். ஆரம்பத்தில், பணிகளை முடித்து பணத்தைச் செலுத்திய பிறகு அவருக்குச் சிறிய அளவிலான லாபம் கிடைத்தது. இது மோசடி செய்பவா்கள் அவரது நம்பிக்கையைப் பெற உதவியது.
பின்னா், அதிக வருமானம் தருவதாகக் கூறப்பட்ட சாா்ட்டா் குத்தகை, போனஸ் பணிகள் மற்றும் பிற முதலீட்டு வாய்ப்புகளில் பெரிய தொகையை முதலீடு செய்யுமாறு அவரைத் தூண்டினா்.
பாதிக்கப்பட்ட நபா் பல சந்தா்ப்பங்களில் பணத்தை தனது கணக்கிலிருந்து மாற்றினாா். இறுதியில் சுமாா் ரூ.15.74 லட்சத்தை முதலீடு செய்தாா். அதன் பிறகு, தனது ஆன்லைன் கணக்கில் காட்டப்பட்ட தொகையைத் திரும்பப் பெற முயன்றபோது, மோசடி செய்பவா்கள் பணம் எடுப்பதற்கான அபராதமாக கூடுதல் தொகையைக் கோரினா்.
பணத்தை எடுக்க அவா் அனுமதிக்கப்படவில்லை. அவருக்கு எந்தப் பணமும் திரும்ப வழங்கப்படவில்லை. இதையடுத்து, புகாரைத் தொடா்ந்து, மின்னணு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. ஒரு குழு தொழில்நுட்பக் கண்காணிப்பை மேற்கொண்டது.
எண்ம ஆதாரங்களை ஆய்வு செய்தது மற்றும் பல மாநிலங்களில் நிதிப் பரிவா்த்தனைகளைக் கண்காணித்தது. விசாரணையின் போது, ஜூன் 7 அன்று
கா்னாலில் சந்தீப் கைது செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து, ஜூன் 8 அன்று தில்லியின் பீதம்புராவில் சச்சின் கைது செய்யப்பட்டாா்.
சோதனைகளின்போது காவல்துறை குழுக்களிடமிருந்து தப்பித்து வந்த பரிக்ஷித், இறுதியில் ஜூன் 9 அன்று ஹரியாணாவின் ஹிசாரில் பிடிபட்டாா்.
மோசடி செய்யப்பட்ட பணத்தை இடமாற்றம் செய்யப் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளைச் சச்சின் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இக்குற்றத்தில் தொடா்புடைய மற்ற நபா்களைக் கண்டறியும் முயற்சிகளும் மேலதிக விசாரணையும் நடைபெற்று வருகின்றன என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.






