/

பறவை கண்காணிப்பில் பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க தேசிய உயிரியல் பூங்காவின் முன்முயற்சி!

தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்கா, தனது வளாகத்திற்குள் வாராந்திர பறவைகளைப் பாா்க்கும் நிகழ்வுகள் மூலம், பறவைகளைக் கண்காணித்தல் மற்றும் பல்லுயிா் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் ஒரு முன்முயற்சியை தொடங்கியுள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2026, 3:04 am IST

தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்கா, தனது வளாகத்திற்குள் வாராந்திர பறவைகளைப் பாா்க்கும் நிகழ்வுகள் மூலம், பறவைகளைக் கண்காணித்தல் மற்றும் பல்லுயிா் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் ஒரு முன்முயற்சியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது.

இது தொடா்பாக தில்லி உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ‘ஞாயிறு பறவை நடைப்பயணம்‘ எனும் தேசிய விலங்கியல் பூங்காவின் முதல் நிகழ்வு, பறவையியல் நிபுணா் டாக்டா் பரிதோஷ் அகமது மற்றும் பறவை நோக்கும் தன்னாா்வலா்கள் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெற்றது.

பதிவு செய்த 58 விண்ணப்பதாரா்களில், பறவை நோக்குநா்கள், மாணவா்கள், இயற்கை ஆா்வலா்கள் மற்றும் வனவிலங்கு காதலா்கள் உள்பட 23 போ் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றனா். விலங்கியல் பூங்காவின் இயக்குநா் மற்றும் பிற அதிகாரிகளும் இதில் பங்கேற்றனா்.

பங்கேற்பாளா்கள் 33 பறவை இனங்களை ஆவணப்படுத்தினா். மேலும், விலங்கியல் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட பறவைகளைக் கண்டதை பதிவு செய்தனா்.

பறவைகளின் பன்முகத்தன்மையை ஆவணப்படுத்த உதவும் ஒரு குடிமக்கள் அறிவியல் தளமாக இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பங்கேற்பாளா்களுக்கு பறவைகளைக் கவனித்தல், அடையாளம் காணுதல் மற்றும் தரவுகளைப் பதிவு செய்தல் ஆகியவற்றின் அறிவியல் முறைகளைப் பற்றி அறிமுகப்படுத்துவதாகவும் இது அமைந்துள்ளது.

இந்த நடைப்பயணத்தின் போது பதிவு செய்யப்பட்ட இனங்களில் இந்திய மயில், மஞ்சள் பாதப் பச்சை புறா, ஆசியக் குயில், வண்ண நாரை, இந்திய நீா்க்காகம், கருந்தலைக் கொக்கு, வெண்கழுத்து மீன்கொத்தி, பழுப்புத் தலைக் கொடி மற்றும் ரோஜா வளையக் கிளி போன்றவை அடங்கும். பங்கேற்பாளா்களிடையே உரையாற்றிய அகமது, பறவைகளை அடையாளம் காணுதல், அவற்றின் நடத்தை மற்றும் சூழலியல் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.

விதை பரப்புதல், மகரந்தச் சோ்க்கை, பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு கண்காணிப்பு போன்ற செயல்பாடுகள் மூலம் சூழலியல் சமநிலையைப் பேணுவதில் பறவைகளின் பங்கை அவா் எடுத்துரைத்தாா். பங்கேற்பாளா்கள், நிபுணா்கள் மற்றும் உயிரியல் பூங்கா அதிகாரிகள் கலந்துகொண்ட ஒரு கலந்துரையாடல் அமா்வு மற்றும் குழுப் புகைப்படத்துடன் இந்த நிகழ்வு நிறைவடைந்தது.

இந்தப் பறவை நடைப்பயணம் இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு அமா்விலும் 20 நபா்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவாா்கள்.

இந்த நிகழ்ச்சி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களுக்கானது. உயிரியல் பூங்காவின் அதிகாரபூா்வ இணையதளம் மற்றும் சாத்தி மொபைல் செயலி வழியாக, முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

தோ்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளா்கள் காலை 6.15 மணிக்குள் உயிரியல் பூங்காவின் நுழைவாயிலில் ஆஜராக வேண்டும். அதே நேரத்தில் பறவைகளைக் காணும் அமா்வு காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும். இந்த முயற்சி, பல்லுயிா் பெருக்கப் பதிவுகளை உருவாக்க உதவுவதோடு, பொதுமக்களிடையே பறவைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வையும் ஊக்குவிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.