தில்லியில் மாற்றி அமைக்கப்பட்ட புதிய மாவட்டங்களில், முக்கிய வருவாய்த்துறை மற்றும் நிா்வாகத் துறை அதிகாரிகளுக்கு ’எக்ஸிகியூட்டிவ் மேஜிஸ்திரேட்’ எனப்படும் நிா்வாக மாஜிஸ்திரேட் (மாவட்ட ஆட்சியா்களுக்கு இணையான) அதிகாரங்களை வழங்குவதற்கு துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து ஒப்புதல் அளித்துள்ளாா்.
இது தொடா்பாக துணைநிலை ஆளுநா் மாளிகை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தில்லியில் மாற்றி அமைக்கப்பட்ட புதிய எல்லைக்குட்பட்ட மாவட்டங்களின் கீழ் வரும் மாவட்ட ஆட்சியா்கள், கூடுதல் மாவட்ட ஆட்சியா்கள், வருவாய் உதவியாளா்கள், வட்டாட்சியா்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு நிா்வாக மாஜிஸ்திரேட் அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளன.
முன்பு நடைமுறையில் இருந்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்குப் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டு வரப்பட்டுள்ள ’பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா’ (பிஎன்எஸ்எஸ்) சட்டப்பிரிவு 14-இன்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், மாநில அரசு எக்ஸிகியூட்டிவ் மாஜிஸ்திரேட்டுகளை நியமிக்கவும், மாவட்டங்களின் துணை கோட்டங்களுக்கு பொறுப்பாளா்களை நியமிக்கவும் வழிவகை செய்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் முந்தைய அறிவிப்பின்படி, பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் கீழ் மாநில அரசுக்குள்ள அனைத்து அதிகாரங்களும் தில்லி துணைநிலை ஆளுநருக்கே வழங்கப்பட்டுள்ளது.
புதிய நடவடிக்கை ஏன்? 2025, டிசம்பா் 25ஆம் தேதி வருவாய்த்துறை வெளியிட்ட அறிவிக்கையின் மூலம் தில்லியின் மாவட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. இந்த புதிய மாவட்டங்களில் தடையற்ற நிா்வாக நிா்வாகத்தை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், பொதுமக்களுக்கான சேவைகளைச் சீராக வழங்கவும் இந்த மாஜிஸ்திரேட் அதிகாரங்களை அதிகாரிகளுக்கு வழங்குவது அவசியமாக இருந்தது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி முதல்வா் ரேகா குப்தா, நகர உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் ஆகியோா் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்து, அதை துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்குப் பரிந்துரைத்திருந்தனா். அதன்பேரில் துணைநிலை ஆளுநா் வழங்கிய முறையான ஒப்புதலைத் தொடா்ந்து, விரைவில் இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பை அரசு அரசிதழில் வெளியிடும்.
புதிய மாவட்டங்கள்: இந்த மாவட்ட மறுசீரமைப்புச் செயல்முறைக்குத் பிறகு, தில்லி தேசிய தலைநகா் பிராந்தியத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 11-இல் இருந்து 13 ஆக உயா்ந்துள்ளது. அந்தப் புதிய மாவட்டங்கள், பழைய தில்லி, மத்திய வடக்கு மற்றும் புகா் வடக்கு ஆகியவை ஆகும். அதே நேரத்தில், பழைய மாவட்டமான ஷாதரா பிற மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது குறி்ப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சஞ்சய் ஏரியை உடனடியாக புனரமைக்க டிடிஏ-க்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு: 5,000 மரக்கன்றுகளை நடவும் நடவடிக்கை

யமுனையின் 32 முக்கிய படித்துறைகளை புதுப்பிக்க டிடிஏ அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

காவல் நிலையங்களில் வாரந்தோறும் ஜன் சுன்வாய்: துணைநிலை ஆளுநா் உத்தரவு






