விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?

முதற்கடவுளான விநாயகர் வினை தீர்ப்பவர். விநாயகர் அனைவராலும் போற்றப்படும் கடவுள். விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. 
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?
Published on
Updated on
2 min read

முதற்கடவுளான விநாயகர் வினை தீர்ப்பவர். விநாயகர் அனைவராலும் போற்றப்படும் கடவுள். விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. 

விநாயகர் பெயர் காரணம்
'வி" என்றால் 'இதற்கு மேல் இல்லை" எனப் பொருள். 'நாயகர்" என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது. 

கணபதி - 'க" என்பது ஞானத்தைக் குறிக்கிறது.  'ண" என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. 'பதி" என்னும் பதம் தலைவன் எனப் பொருள்படுகிறது.

விநாயகர் வடிவ விளக்கம்
யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். பெரும் வயிற்றைக் கொண்டதால் பூதர்களை உள்ளடக்கியவர். அவரே அனைத்தும் என்பதே இந்தத் தத்துவம்.

விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?
அதிகாலையிலேயே எழுந்து, குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலை தோரணம் கட்டலாம். பூஜையறையில் சுத்தம் செய்து ஒரு மணையை வைக்க வேண்டும்.

அதன்மேல் கோலம் போட்டு, ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருக்க வேண்டும். இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும். 

பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம் பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என 21 பூக்கள் வகைளையும், 21 வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். அன்றைய தினம் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை செய்வது சிறப்பு.

விநாயகரைப் பூக்களால் அலங்காரம் செய்து, பிறகு விநாயகர் பாடல்கள் பாடலாம். விநாயகருக்குக் கொழுக்கட்டை மட்டுமில்லாமல் எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம்.

விநாயகர் சதுர்த்தி அன்று மேற்கொள்ளும் விரதம், காலையில் இருந்து உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். விரதத்துக்குப் பிறகு விநாயகரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் கரைப்பது வழக்கம். 

விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும், அதனால் அங்கே நீர் நிலத்தில் இறங்காமல் ஓடிக் கடலை அடையும். ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீர் கீழே பூமியில் இறங்கும். அதனால் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள். ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் என்பதற்காக விநாயகரை நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com