/

கடக ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2020

கடக ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்துள்ளார். 

News image
கடக ராசி
Updated On :9 ஜூலை 2020, 11:30 pm

தினமணி


குரு, சனிப் பெயர்ச்சியை தொடர்ந்து மற்றொரு முக்கிய கிரகப் பெயர்ச்சியான ராகு - கேது பெயர்ச்சி 2020-இல் செப்டம்பர் மாதத்தில் நிகழ உள்ளது. 

சாயா கிரகங்களான ராகு - கேது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் தேதியும் பெயர்ச்சியாகிறார். ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர். 

கடக ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்துள்ளார். 

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பக்தி சிரத்தையுடன் வாழும் கடக ராசி அன்பர்களே, எந்த விஷயமாக இருந்தாலும் நீதி நேர்மையுடன் இருக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

தன்னைப்போல மற்றவர்களும் இருக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். பசி பொறுக்காதவர்கள். நல்ல உழைப்பும் பொருளாதார உயர்வும் உள்ளவர்கள். மற்றவர்களைப் புரிந்து நடப்பவர்கள். கடல்கடந்து சென்று வேலை செய்வார்கள். உயர்கல்வி கற்றவர்கள்.

கிரகநிலை:

அயன சயன போக விரைய ஸ்தானத்தில் இருந்த ராகு லாப ஸ்தானத்திற்கும், ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்த கேது பஞ்சம பூர்வ ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள்.

கடக படம்

Story image

இந்த ராகு கேது பெயர்ச்சியால், விடாமுயற்சியுடன் செயல்படுவதால் மட்டுமே வாழ்வில் வளர்ச்சியைத் தக்கவைக்க முடியும். வெளியூர் பயணத்தை பயனறிந்து மேற்கொள்வது அவசியம். வீடு வாங்க தடை, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் இருந்து வந்த தடை இனி மாறும். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். சிலர் கடன் பெற்று புதிய வீடு, வாகனம் வாங்குவர். புத்திரர்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைச் செய்து மகிழ்வீர்கள். 

படிப்பு, வேலைவாய்ப்பில் அவர்களின் செயல்பாடு சிறப்பாக அமையும். பூர்வ சொத்தில் சுமாரான அளவில் வருமானம் உண்டு. உடல் நிலை திருப்திகரமாக இருக்கும். இதனால் சிரமம் குறைந்து நடைமுறை வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சமரச தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. கணவன், மனைவி தங்களுக்குள் கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவர். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. 

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். 

தொழிலதிபர்கள் தொழிலில் வளர்ச்சி பெற கடின உழைப்பு தேவைப்படும். மிதமான லாபம், சீரான வளர்ச்சி என்ற நிலை தொடரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தமும், நடைமுறைச் செலவில் சிக்கனமும் லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு செய்யாமல் இருப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் செயல்பட்டால் லாபத்தை தக்க வைக்க இயலும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும். தொழில் சார்ந்த வகையில் இலக்கை அடைய கூடுதல் முயற்சி தேவைப்படும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும். மன அமைதியை பாதுகாக்க தியானம், தெய்வ வழிபாடு ஆகியவை உதவும். 

அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதத்தைச் சந்திப்பர். சிலர் பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவதால் பிரச்னையில் இருந்து விடுபடலாம். சகபணியாளர்களால் பணிச்சுமை ஏற்படும். இருந்தாலும் அதற்கேற்ப வருமானம் கூடும். சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதத்தில் ஈடுபடுவது கூடாது. சலுகை பற்றிய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. 

அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் நேர்மை குணத்துடன் செயல்படுவதால் மட்டுமே அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். 

கலைத்துறையினருக்கு மிகுந்த சந்தோஷங்கள் வந்து சேரும். வெளியூர் பயணங்கள் அதிகம் இருக்கும். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.

பெண்கள் பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம். 

மாணவர்கள் வெளிவட்டாரப் பழக்கத்தைக் குறைப்பது நல்லது. ஆரம்ப, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம். சக மாணவர்களின் உதவியால் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு்.

புனர்பூசம் - 4:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் தடைபட்ட பணவரத்து தடைநீங்கி கைக்கு வந்து சேரும். மேலும் மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். பிள்ளை பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

பூசம்:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். 

ஆயில்யம்:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும் போது ஆலோசித்து செய்வது நல்லது. பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. 

பரிகாரம்: அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். 

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6

மலர்பரிகாரம்: மல்லிகை மலர்களை அம்மனுக்கு மாலை கட்டிப் போட நன்மை பெருகும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீமாத்ரே நம: என்று தினமும் 21 முறை கூறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.