கால சர்ப்ப தோஷம் போக்கும் திருச்சி நாகநாத சுவாமி திருக்கோயில்

கால சர்ப்பதோஷம், ராது - கேது தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களைப் போக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது திருச்சியிலுள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை நாகநாத சுவாமி திருக்கோயில்.
அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை நாகநாதசுவாமி.
அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை நாகநாதசுவாமி.
Published on
Updated on
5 min read

கால சர்ப்பதோஷம், ராது - கேது தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களைப் போக்கும் பரிகார தலமாக விளங்கிவருகிறது திருச்சி, நந்திகோயில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை நாகநாத சுவாமி திருக்கோயில்.

திருச்சி திருவானைக்கா சம்புகேசுவரர் (நீர்), காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் (நிலம்), திருவண்ணாமலை அண்ணாமலையார் (நெருப்பு), சிதம்பரம் நடராசர் (ஆகாயம்), திருக்காளத்தி காளத்தீசுவரர் (வாயு) என பஞ்சப்பூதத் திருக்கோயில்கள் அமைந்திருப்பது போன்று,  திருச்சி மாநகரில் அமைந்துள்ள பஞ்சநாதர் திருக்கோயில்களில்  (திருச்சி நாகநாதர், காசி விசுவநாதர், கைலாசநாதர், பூலோகநாதர், வெளிகண்டநாதர்)  இத்தலமும் ஒன்று.

கோயில் நுழைவாயில்
கோயில் நுழைவாயில்

மேலும் இக்கோயிலுக்கு அருகிலேயே  மலைக்கோட்டையில் அருள்மிகு மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமான சுவாமி திருக்கோயிலும் உச்சிப் பிள்ளையார் சன்னதியும் அமைந்திருக்கின்றன.

சாரமாமுனிவர் சிவபெருமானை வேண்டித் தவமிருந்து, வரம் பெற்ற திருக்கோயில் இது. வயதான காலத்தில் மலைமேல் சென்று தாயுமானவரை வழிபட முடியவில்லை என்று சாரமாமுனிவர் வேண்டவே, தாயுமானவரே இங்கு வந்து  நாகநாதராகக் காட்சியளித்த திருக்கோயில் இதுவாகும்.

இங்குள்ள இறைவன் நாகநாத சுவாமியை சாரமாமுனிவர் வழிபட வந்தபோது, அம்மன் சன்னதியில் இருக்கும் நந்தி வழிவிட்டதாகத் திருக்கோயில் தலப் புராண தகவல்களில் கூறப்பட்டிருக்கின்றன.

நந்தியெம்பெருமானை வழிபடும் பக்தர்
நந்தியெம்பெருமானை வழிபடும் பக்தர்

இறைவன் நாகநாதர்

சிவவழிபாடின்றித் தம்முடைய கர்மசுத்தியாலேயே இறைநிலை அடைந்திடலாம் என இறுமாந்திருந்த முனிவர்களுடன் ஏற்பட்ட போரில், முனிவர்களால் ஏவிய நாகங்களை அணியாகப் பூண்டதாலும், நாககன்னியர்கள் வழிபட்டதாலும் இத்திருக்கோயில் இறைவன் நாகநாதர் என்றழைக்கப்படுகிறார்.

இறைவன் நாகநாதர் காட்சியளிக்கும் கருவறை சதுர வடிவிலும், கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது.  வாயு தலமான திருக்காளத்தி (காளஹஸ்தி)  திருக்கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் ராகு - கேது கிரகத்துக்காக இக்கோயிலுக்கு வந்து நாகநாதரை வழிபட்டுச் செல்கின்றனர்.

நாகநாதர் தாயுமானவரையும், தாயுமானவர் நாகநாதரையும் ஒருவரையொருவர்  பார்த்தவாறு நாகநாதர் கிழக்கு நோக்கியும், தாயுமானவர் மேற்கு நோக்கியும் அமர்ந்து காட்சியளித்து வருகின்றனர்.

கோயில் கொடிமரம்
கோயில் கொடிமரம்


இறைவி ஆனந்தவல்லி
 அம்மன் 

தெற்கு நோக்கிய சன்னதியில் சாந்தசொரூபியாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார் அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன். பக்தர்களுக்கு வேண்டும்வரம் தந்தருளும் அம்மனாக ஆனந்தவல்லி காட்சியளிக்கிறார்.

நாக மன்னன், சப்தநாக கன்னியர்கள், நாகர்களின் குரு சாரமாமுனிவர் முதலானவர்கள் நாகநாதரைக் குலதெய்வமாக வழிபட்டதால், இத்திருக்கோயில் இறைவன் நாகநாதர், இறைவி ஆனந்தவல்லி அம்மனை வழிபாடு செய்தால், நாகதோஷம் நீங்கி, நற்பலனைப் பெறுவர் என்பது ஐதீகம். மேலும் மகாமண்டபத்தில் நின்று ஒரே நேரத்தில் சுவாமி, அம்மனைத் தரிசிக்கலாம்.

திசைமாறிய நிலையில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி.
திசைமாறிய நிலையில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி.


இரு தட்சிணாமூர்த்திகள்

வழக்கமாக சிவாலயங்களில் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்த நிலையிலோ அல்லது நின்ற கோலத்திலோ பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆனால், இத்திருக்கோயிலில் இரு தட்சிணாமூர்த்திகள் எழுந்தருளியிருக்கின்றனர்.

ஒருவர் தெற்கு நோக்கி பாம்பின் மீது அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். மற்றொரு தட்சிணாமூர்த்தி திசைமாறி, கிழக்கு நோக்கி அமைந்துள்ளார்.

தெற்குநோக்கின் பாம்பின் மீது அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி 
தெற்குநோக்கின் பாம்பின் மீது அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி 

அமர்ந்த நிலையில் சர்ப்பங்கள் மீது இடதுகாலை வைத்து எழுந்தருளியுள்ள அருள்மிகு தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் நெய்விளக்கேற்றி, வழிபாடு செய்து வந்தால் நாகதோஷம் நீங்குதல், புத்திரபாக்கியம், கல்வி ஞானம், கடன் தொல்லை விலகுதல், நோய் நிவாரணம், திருமணத் தடை தோஷ நிவர்த்தி பெறுதல் போன்ற பலன்களை பெறலாம் என்பது ஐதீகமாக உள்ளது.

சந்தனம் பூசி பக்தர்கள் வழிபடும் ஜுரஹரேசுவரர் சன்னதி
சந்தனம் பூசி பக்தர்கள் வழிபடும் ஜுரஹரேசுவரர் சன்னதி


ஜுரஹரேசுவரர் சன்னதி

அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் ஜுரஹரேசுவரர் சன்னதி அமைந்துள்ளது. உடலிலுள்ள தீராத நோய்கள் தீர,  இவருக்கு  சந்தனம் சாத்தி வழிபடுவது சிறப்பாகும். இன்றும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஜுரஹரேசுவருக்கு சந்தனம் சாத்தி, தங்களது வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயிலிலுள்ள நவக்கிரகங்கள்
கோயிலிலுள்ள நவக்கிரகங்கள்


சிறப்பு வாய்ந்த நவக்கிரகங்கள்

கோயிலில் சுவாமி சன்னதிக்கு இடதுபுறத்தில் நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது. எல்லா கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறு அமைந்துள்ள நிலையில், சூரியபகவான் தனது தேவியர்களுடன் காட்சியளித்து வருகிறார்.

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப் பெயர்ச்சியின் போது, சனி பகவான் காக்கை வாகனத்தில் திருவீதியுலா வருவது இத்திருக்கோயிலின் தனிச் சிறப்பாகும். மேலும் இக்கோயிலில் குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராது - கேது பெயர்ச்சி போன்ற வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

கோயிலின் பிரகாரம்
கோயிலின் பிரகாரம்

ஒரே சன்னதியில் சக்தி தெய்வங்கள்

இக்கோயில் மற்றொரு சிறப்பையும் கொண்டிருக்கிறது. கோயிலின் கருவறை சன்னதிக்குப் பின்புறப் பகுதியில் துர்க்கை, லட்சுமி, சரசுவதி என மூவரும் ஒரே சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

ஒரே சன்னதியில் அமைந்துள்ள துர்க்கை, சரசுவதி - லட்சுமி அம்மன்கள்
ஒரே சன்னதியில் அமைந்துள்ள துர்க்கை, சரசுவதி - லட்சுமி அம்மன்கள்

மேலும் அருள்மிகு வள்ளி-தெய்வசேனா சமேத சுப்பிரமணியர் சன்னதி, பழநி தண்டாயுதபாணி சன்னதிகளும் அருகருகே அமைந்துள்ளன. இதைத் தவிர பிச்சாண்டவர், சண்டிகேசுவரர் உள்ளிட்ட கோஷ்ட தெய்வங்களின் சன்னதிகளும் கோயிலில் அமைந்துள்ளன.

பைரவருக்கு முதல் பூஜை 

நாகநாத சுவாமி திருக்கோயிலில் காலையில் நடைதிறந்ததும்  பைரவருக்கு பூஜை நடத்தப்பட்ட பின்னர்தான், பள்ளியறை பூஜை  உள்ளிட்ட இதர பூஜைகளும் நடைபெறுகின்றன. இரவு பள்ளியறை பூஜைக்குப் பின்னர் பைரவர் பூஜை நடத்தப்பட்டே, திருக்கோயில் நடைசாத்தப்படும்.

சாரமாமுனிவர்
சாரமாமுனிவர்


மேற்கு நோக்கிக் காட்சியளிக்கும் சாரமாமுனிவர்

நாகர்களின் குருவான சாரமாமுனிவர்  திருமேனி திருக்கோயிலில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வந்து சுவாமியை வழிபடுவர்கள் சாரமாமுனிவரையும் தவறாமல் வணங்கிச் செல்கின்றனர்.

சாரமாமுனிவர், நாககன்னிகள், நாகநாதரை முள்செவ்வந்தி பூக்களால் பூஜை செய்ததாக ஐதீகம். இந்த வைபவம் மாசி முதம் பூரம் நட்சத்திரத்தன்று நடத்தப்பட்டு வருகிறது.

சாரமாமுனிவர், நாககன்னிகள் முள்செவ்வந்தி பூக்களால் நாகநாதரை வழிபடும் ஐதீக நிகழ்வை விளக்கும் படம்
சாரமாமுனிவர், நாககன்னிகள் முள்செவ்வந்தி பூக்களால் நாகநாதரை வழிபடும் ஐதீக நிகழ்வை விளக்கும் படம்

தனி சன்னதியில் பஞ்சமூர்த்திகளுடன் அறுபத்து மூன்று நாயன்மார்களும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்றனர். இந்த சன்னதிக்கு அருகில் சிவனடியார்கள் சிவபுராணத்தை வாசித்து, இறைவனை வேண்டிச் செல்கின்றனர்.

விரைவில் திருமணம் கைகூடும்

சிவபெருமான் ஆகாய கங்கையாகத் தோன்றி, ஆனந்தவல்லியை சிவகங்கை கரையில் திருமணம் செய்து கொண்டதால், இக்கோயிலின் தலத் தீர்த்தமான சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடி, நாகநாதரை வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதை இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் கூட்டமே உணர்த்துகிறது.

வீரமகேந்திரர், வில்வநாதர், விசாலாட்சி அம்மன்
வீரமகேந்திரர், வில்வநாதர், விசாலாட்சி அம்மன்


பஞ்சமி திதி  வழிபாடு

மாதந்தோறும் வளர்பிறை பஞ்சமி திதியில் இக்கோயிலில் பஞ்சமி திதி வழிபாடு, ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. ரூ.150-ஐ கட்டணமாக செலுத்தி, பக்தர்கள் இந்த ஹோமம் மற்றும் வழிபாட்டில் பங்கேற்கலாம். நாக தோஷ நிவர்த்தி, புத்திரபாக்கியம், திருமணத்தடை நீங்குதல், நோய் நிவாரணம், கடன்தொல்லை விலகுதல், சகல தோஷ நிவர்த்தி  உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற, பக்தர்கள் இந்த வழிபாட்டில் பங்கேற்கின்றனர்.

கிழக்குப் பகுதி நுழைவுவாயில்
கிழக்குப் பகுதி நுழைவுவாயில்

திருவிழாக்கள்

இக்கோயிலில் மாசிமக உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். மாசி மக உற்சவத்தில் அறுபத்து மூவர் மற்றும் பிச்சாண்டவர் உடன் மோகினி புறப்பாடு நடைபெறும்.

நாகநாதசுவாமி திருக்கோயில் - தலத் தீர்த்தம் - சிவகங்கைத் தீர்த்தம்
நாகநாதசுவாமி திருக்கோயில் - தலத் தீர்த்தம் - சிவகங்கைத் தீர்த்தம்

இதுபோல, நவராத்திரித் திருநாள் விஜயதசமியன்று தாயுமானவர் இக்கோயிலுக்கு காலையில் வந்து தங்கி, மாலையில் அம்பு போடுதல் உற்ஸவமும், பிறகு நாகநாதர் அம்புபோடுதல் உற்சவமும் வழக்கமாக நடைபெறுவது சிறப்புக்குரியதாகும்.  இதைத் தவிர பிரதோஷ, பௌர்ணமி போன்ற வழிபாடுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

தல விருட்சம்

நாகநாத சுவாமி திருக்கோயிலின் தல விருட்சமாக வில்வமரமும், தீர்த்தமாக சிவகங்கைத் தீர்த்தமும் அமைந்துள்ளது.  தலம், தீர்த்தம், மூர்த்தம் என அனைத்திலும் விசேஷங்களைக் கொண்டது நாகநாத சுவாமி திருக்கோயில்.

அருள்மிகு வள்ளி - தெய்வசேனா சமேத சுப்பிரமணியர்
அருள்மிகு வள்ளி - தெய்வசேனா சமேத சுப்பிரமணியர்

இக்கோயில் இறைவன் நாகநாத சுவாமிக்கு வில்வம் சாத்தி வேண்டிக் கொண்டால், சகல தோஷங்களும், சர்ப்ப பாவங்களும் விலகும். சந்தோஷம் பெருகும் என்பது பலனடைந்த பக்தர்களின் கூற்று.

சுப்பிரமணியர் சன்னதி எதிரிலுள்ள மயில்வாகனம்.
சுப்பிரமணியர் சன்னதி எதிரிலுள்ள மயில்வாகனம்.

கோயில் நடைதிறப்பு

காலை 6 மணி முதல் பிற்பகல் 12 வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

திருச்சி நாகநாதசுவாமி திருக்கோயில் மேற்குப் பகுதி நுழைவுவாயில் 
திருச்சி நாகநாதசுவாமி திருக்கோயில் மேற்குப் பகுதி நுழைவுவாயில் 

பூஜை காலங்கள்

உஷத் காலம் - காலை 6-7
காலசந்தி - காலை 8.30 - 9.30
 உச்சிக்காலம்- முற்பகல் 11.30 - 12.00
சாயரட்சை - மாலை 5 - 6
அர்த்தசாமம் - இரவு 8.30

பழநி தண்டாயுதபாணி சுவாமி சன்னதி
பழநி தண்டாயுதபாணி சுவாமி சன்னதி

எப்படிச் செல்வது?

திருச்சி மாநகரில் மலைக்கோட்டைக்கு அருகில் நந்திகோயில் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வெகு அருகிலும் கோயில் அமைந்துள்ளது.

கோயில் உள்மண்டபம்
கோயில் உள்மண்டபம்

தென் மாவட்டங்கள், டெல்டா, மேற்கு மாவட்டங்களிலிருந்து மத்திய பேருந்து நிலையம், பாலக்கரை அல்லது தில்லைநகர் அல்லது உறையூர் வழியாக வரும் பேருந்துகளில் வருபவர்கள் மெயின்கார்டு கேட் பேருந்து நிறுத்தம் அல்லது சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி நடந்து வரலாம். கார் மற்றும் ஆட்டோக்களிலும் இக்கோயிலுக்கு வரலாம். ரயில் மற்றும் விமானம் மூலம் வருபவர்கள் கோயிலுக்கு வருவதற்கு உரிய போக்குவரத்து வசதிகள் உள்ளன.

தொடர்பு முகவரி 

செயல் அலுவலர்,
அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை நாகநாதசுவாமி திருக்கோயில்,
நந்தி கோயில் தெரு,
திருச்சி -  620002

படங்கள் : எஸ். அருண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.