பெண்களின் நோய் தீர்க்கும் பேட்டைவாய்த்தலை மத்யார்ஜுனேசுவரர் திருக்கோயில்

பெண்களின் நோய் தீர்த்துவைக்கும் பரிகாரத் தலமாக பேட்டைவாய்த்தலை மத்யார்ஜுனேசுவரர் திருக்கோயில் திகழ்கிறது.
சிறப்பு அலங்காரத்தில் பாலாம்பிகை அம்மன் உடனுறை மத்யார்ஜுனேசுவரர்
சிறப்பு அலங்காரத்தில் பாலாம்பிகை அம்மன் உடனுறை மத்யார்ஜுனேசுவரர்

பெண்களின் நோய் தீர்த்துவைக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த்தலை தேவஸ்தானம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாலாம்பிகை அம்மன் உடனுறை மத்யார்ஜுனேசுவரர் திருக்கோயில்.

ஆறிலிருந்து வெட்டப்படும் கால்வாயின் முதல் இடம் வாய்த்தலை எனப்படும். இதுவே வாய்த்தலை பேட்டை என்றாகி, பின்னர் மருவி பேட்டைவாய்த்தலை என்றானதாகக் கூறப்படுகிறது.

ராஜகோபுரம்
ராஜகோபுரம்

சோழ மன்னர்கள் பரம்பரையில் பின்வந்த மூன்றாம் குலோத்துங்கன் மருதாந்தக கேசமுடையார் மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கியது, பெண்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாதவிடாய்க் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்த்து வைத்தல் போன்ற பல்வேறு சிறப்புகளை இக்கோயில் கொண்டிருக்கிறது.

பாலாம்பிகை அம்மன் உடனுறை மத்யார்ஜூனேசுவரர் சுவாமி
பாலாம்பிகை அம்மன் உடனுறை மத்யார்ஜூனேசுவரர் சுவாமி

வடக்கில் ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனம், தெற்கில் திருநெல்வேலியில் திருப்புடார்ஜுனம் அமைந்திருக்க, மத்தியில் பேட்டைவாய்த்தலை தேவஸ்தானம் கோயில் அமைந்துள்ளதால், இக்கோயில் மத்யார்ஜுனமாக விளங்குகிறது.

நந்தியெம்பெருமான் மற்றும் கொடிமரம்
நந்தியெம்பெருமான் மற்றும் கொடிமரம்

தல வரலாறு

மூன்றாம் குலோத்துங்க மன்னன் மருதாந்தக கேசமுடையார் திருவிடைமருதூர் ஈசன் மீது பெரும் பக்தி கொண்டவர். பல போர்களின் விளைவாக தமக்கு ஏற்பட்டிருந்த பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்துகொள்ள, திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமானை வேண்டினார். அப்போது அவன் கனவில் தோன்றிய ஈசன், காவிரியில் ஒரு உபநதியை உருவாக்கி, அதன் கரையில் ஒரு சிவாலயத்தை எழுப்பி என்னை வழிபட்டால், பிரம்மஹத்தியை நீக்குவேன் என்றாராம். அதன்படி காவிரிக் கரையில் உய்யக்கொண்டான் வாய்க்காலை உருவாக்கி, திருக்கோயிலையும் மன்னன் எழுப்ப, பிரம்மஹத்தி தோஷம் நீங்கி, மழலைப்பேறு கிட்டியது என தல வரலாறு கூறுகிறது.

அருள்மிகு விநாயகர்
அருள்மிகு விநாயகர்

மன்னர் மருதாந்தக கேசமுடையார் காலம் வரை அப்போது இருந்த அரசு ஸ்வீகார அரசாக இருந்ததாம். அதாவது தத்தெடுக்கப்பட்ட வாரிசுகளின் அரசாக இருந்ததாம். இறைவன் மீது  அளவுக்கு அதிகமாக பக்தி கொண்ட மூன்றாம் குலோத்துங்க மன்னன் மருதாந்தக கேசமுடையார், தனது கனவில் ஈசன் தோன்றி கோயில் எழுப்பக் கூறியதால், பேட்டைவாய்த்தலை தேவஸ்தானம் பகுதியில் மத்யார்ஜுனேசுவரர் கோயில் கருவறை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

பிரம்மஹத்தி உருவம்
பிரம்மஹத்தி உருவம்

அப்போது அவருக்குப் புத்திர பாக்கியம் ஏற்பட்டதாம். தொடர்ந்து ஆண் குழந்தையும் பிறந்தது. இதைத் தொடர்ந்து திருக்குடமுழுக்குப் பணிகளை விரைவாக முடித்து குடமுழுக்கு நடத்திய மன்னன், சுவாமியின் பெயரால் ஏராளமான ஏக்கரில் நஞ்சை நிலங்களை அளித்து சென்றாராம். மேலும் திருவிடைமருதூர் ஈசனைப் போற்றும் விதமாக, பேட்டைவாய்த்தலை கோயிலில் அமைந்துள்ள இறைவன் மத்யார்ஜுனேசுவரர் என்றும், மார்த்தாண்டேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கியது, மன்னனுக்கு நீண்ட நாள்களாக கிடைக்காத புத்திர பாக்கியம் கிடைத்ததையும் நினைவுபடுத்தும் வகையில், கோயில் மண்டபத்தின் தெற்குப் பகுதியிலுள்ள தூணில் பிரம்மஹத்தி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

வைகாசி பிரம்மோத்சவம்-சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்மன்
வைகாசி பிரம்மோத்சவம்-சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்மன்

இறைவன் மத்யார்ஜுனேசுவரர்

கிழக்கு நோக்கிய சன்னதி கொண்டு எழுந்தருளியுள்ளார் இத்திருக்கோயில் இறைவன் மத்யார்ஜுனேசுவரர். மூன்றாம் குலோத்துங்க மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிய இறைவன், இங்கு வரும் பக்தர்களின் மனநலத்தைப் பாதுகாக்கும் மகாதேவராகவும், அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தருபவராகவும் திகழ்கிறார். பிரம்மஹத்தி தோஷம் உடையவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.

அருள்மிகு மத்யார்ஜுனேசுவரர் சுவாமி சன்னதி விமானக் கோபுரம்
அருள்மிகு மத்யார்ஜுனேசுவரர் சுவாமி சன்னதி விமானக் கோபுரம்

இறைவி பாலாம்பிகை அம்மன்

தெற்கு நோக்கிய சன்னதியைக் கொண்டு, சாந்த சொரூபியாக நின்ற கோலத்தில் தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் அன்னையாக எழுந்தருளியுள்ளார் இறைவி அருள்மிகு பாலாம்பிகை அம்மன். அகில உலகுக்கும் அன்னையாக விளங்குபவள் அம்பிகை. ஒவ்வொரு பெண்ணுக்கும் தாயாக விளங்கும் சக்தி, அவர்களின் கருவுக்கும், கருவறைக்கும் சக்தி அளிக்கும் தயாபரியாகவும் விளங்குகிறார்.

அருள்மிகு பாலாம்பிகை அம்மன் சன்னதி விமானக் கோபுரம்
அருள்மிகு பாலாம்பிகை அம்மன் சன்னதி விமானக் கோபுரம்

ஒரு பெண் பூப்பெய்தும் நிலையிலிருந்து மாதவிடாய் நிற்கும் வரை பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறாள். அப்பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் மகா சக்தியாக விளங்குகிறார் பேட்டைவாய்த்தலை அருள்மிகு பாலாம்பிகை அம்மன். முன்பு பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் குறுகிய நாள்கள் இருந்து, பெரும் அவதியடைந்து வந்தார்கள். இதனால் பெண்கள் அனைவரும் ஈசனை நாடி பிரார்த்தனை செய்தார்கள்.

சிவனோடு சக்தியும் சேர்ந்து, இதற்காக  சித்தர் ஒருவரை உருவாக்கி, அவருக்கு பொற்றாளம் பூவாய் சித்தர் எனப் பெயரிட்டு, அவர் மூலமாகப் பெண்களுக்கு ஏற்பட்ட இந்த உபாதையை மாதத்துக்கு ஒருமுறையாக மாற்றி, பெண்களின் நிலையைச் சீர் செய்தார்கள். பொற்றாளம் பூவாய் சித்தர் அனேக இடங்களுக்குச் சென்று, இந்த வைத்தியமுறையை செய்து வந்தார்.

பொற்றாளம் பூவாய் சித்தர் திருமேனி அமைந்துள்ள தூணில் கட்டப்பட்டுள்ள பிரார்த்தனை சீட்டுகள்
பொற்றாளம் பூவாய் சித்தர் திருமேனி அமைந்துள்ள தூணில் கட்டப்பட்டுள்ள பிரார்த்தனை சீட்டுகள்

பேட்டைவாய்த்தலை திருக்கோயிலுக்கு பொற்றாளம் பூவாய் சித்தர் வந்தபோது, இறைவன் மத்யார்ஜுனேசுவரர் இங்கேயே ஜோதியாக இருக்க வேண்டும் என்றவுடன், வைத்திய முறையை இன்னமும் யாரிடமும் சொல்லாமல் இருப்பதால் இனிமேல் இந்த உபாதை இருக்கக்கூடிய பெண்களுக்கு என்ன செய்வது என்று இறைவனிடம் சித்தர் கேட்டதற்கு, இனிமேல் இப்படி வரக்கூடிய பெண்களை அம்பாள் (பாலாம்பிகை) பார்த்துக் கொள்வார் எனச் சொன்னதால், பொற்றாளம் பூவாய் சித்தர் இங்கேயே ஜோதியானதாக சித்தர் வரலாறு கூறுகிறது.

ஜோதி வடிவில் ஐக்கியமான  பொற்றாளம் பூவாய் சித்தர் திருமேனி
ஜோதி வடிவில் ஐக்கியமான  பொற்றாளம் பூவாய் சித்தர் திருமேனி

இந்த சித்தரின் உருவம் இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் வடபுறத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் இறைவன் மத்யார்ஜுனேசுவரர், இறைவி பாலாம்பிகை அம்மனை வழிபட்ட பின்பு பெண்கள் தங்களுக்கான பிரத்யேக பிரச்னைகளுக்காக (குறிப்பிட்ட வயதுக்குப் பிறகும் பருவம் எய்தாத நிலை, மாதவிடாய்க்  கோளாறுகள், கருப்பை நோய்கள்,  கரு தாங்காமல் இருப்போர்,  குழந்தைப்பேறு இல்லாமை) கோயிலில் விற்கப்படும் பிரார்த்தனைச் சீட்டை வாங்கி  எழுதி, சித்தர் திருமேனி உள்ள தூணில் கட்டுகின்றனர். இதைத் தொடர்ந்து இறைவன், இறைவி, சித்தரைப்  பிரார்த்தனை செய்து பூரண நலம் பெறுகின்றனர். இறைவன், இறைவி படத்தைப் பெற்று,  வீட்டில் உளமாற பூஜைகள் செய்து வந்தால், 11 வாரங்களுக்குள் பிரச்னைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இறைவன் சன்னதியின் பின்புறத்தில் எழுந்தருளியுள்ள லிங்கோத்பவர்
இறைவன் சன்னதியின் பின்புறத்தில் எழுந்தருளியுள்ள லிங்கோத்பவர்

பிரார்த்தனை சிறப்புகள்

பேட்டைவாய்த்தலை கோயிலுக்கு வந்து இறைவன் மத்யார்ஜுனேசுவரை வேண்டினால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும். குறிப்பாக, பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்கின்றனர். கோயில் மண்டபத்தூணிலுள்ள பிரம்மஹத்தி வடிவத்தை அமாவாசை நாளில் மாலையில் மலர்கள் சாத்தி, தீப தூபங்கள் காட்டி வழிபட்டால் நலம் கிடைக்கும் என்கின்றனர் பலன் அடைந்தவர்கள்.

வைகாசி பிரம்மோத்சவம்- தனித்தனி வாகனங்களில் சுவாமி - அம்மன்
வைகாசி பிரம்மோத்சவம்- தனித்தனி வாகனங்களில் சுவாமி - அம்மன்

மாதவிடாய்க் கோளாறு சம்பந்தமாக வரக்கூடிய பெண்களுக்கு இங்கு வந்து பிரார்த்தனை செய்வதால், அவர்களுக்கு இந்த உபாதைகள் நீங்கிக் குணமடைகிறார்கள் என்பது இத்திருக்கோயிலின் தனிச் சிறப்பாக உள்ளது. மேலும் பெண்களின் நோய் தீர்க்கும் பேட்டைவாய்த்தலை எனச் சிறப்பான பெயரும் இக்கோயிலுக்கு உண்டு.

சன்னதிகள்

கோயிலின் உள், வெளி மண்டபப் பகுதியிலும், இறைவன் தேவக்கோட்டத்திலும் என பல்வேறு சன்னதிகள் உள்ளன. ஐந்து நிலை ராஜகோபுரத்தை தாண்டிச் சென்றால் கொடிமரம் அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து இறைவனை நோக்கியவாறு நந்தியெம்பெருமான் எழுந்தருளியுள்ளார். மேலும் இறைவன் மத்யார்ஜுனேசுவரை பார்த்தவாறு சூரிய, சந்திர பகவான்கள் எழுந்தருளியுள்ளனர்.

இறைவன் தேவக்கோட்டத்தில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தி
இறைவன் தேவக்கோட்டத்தில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தி

இறைவி பாலாம்பிகை அம்மன் சன்னதிக்கு அருகில் பிச்சாடனார், சரசுவதி எழுந்தருளி, பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகின்றனர். இறைவனின் தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். வெளிப் பிரகாரத்தில் விநாயகர்,  வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி,  கஜலட்சுமி சன்னதிகள் அமைந்துள்ளன. மேலும் நவக்கிரக நாயகர்கள் சன்னதி, பைரவர் சன்னதி தனித்தனியே அமைந்துள்ளது. இதன் அருகிலேயே கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் உள்ளது.

குடமுழுக்கு

இக்கோயிலுக்கு 1913, ஆகஸ்ட் 22-ஆம் தேதி திருப்பணி செய்யப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதன் பின்னர் திருப்பணிகள்  செய்யப்பட்டு 1968, செப்டம்பர் 4-ஆம் தேதியும், 1991, ஜூலை 1-ஆம் தேதியும், 2010-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலும் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

அருள்மிகு பிச்சாடனார் - சரசுவதி அம்மன்
அருள்மிகு பிச்சாடனார் - சரசுவதி அம்மன்

திருவிழா

ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோத்ஸவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் தைப்பூசத்தன்று திருக்கடம்பந்துறை சிவன் கோயில் சன்னதி திருக்காவேரியின் தென்கரையில் பஞ்சமூர்த்திகளும், வடகரையில் மும்மூர்த்திகளும் ஆக 8 மூர்த்திகளும் ரிஷபாரூடராக காட்சியளித்து, பக்தர்களுக்கு அஷ்டமா சித்திகளும் கிடைக்கும் பொருட்டு தீர்த்தம் கொடுத்து இரவு தங்கி, மறுநாள் கோயிலுக்கு சென்றடைதலுமாக என இரு நாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சூரிய பகவான்
சூரிய பகவான்

சுமார் 42 ஆண்டுகளுக்குப் பிறகு  நிகழாண்டு வைகாசி மாதத்தில் பிரம்மோத்சவம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.

எப்படிச் செல்வது?

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் பேட்டைவாய்த்தலை அமைந்துள்ளது. பேட்டைவாய்த்தலை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் தேவஸ்தானம் பகுதியில் இக்கோயில் உள்ளது.

சந்திர பகவான்
சந்திர பகவான்

இக்கோயிலுக்கு மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம், கம்பரசம்பேட்டை, ஜீயபுரம், முக்கொம்பு, திருப்பராய்த்துறை, பெருகமணி, சிறுகமணி வழியாக பேட்டைவாய்த்தலை வந்தடையலாம்.

பைரவர்
பைரவர்

நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொட்டியம், முசிறி, குளித்தலை வழியாக பேட்டைவாய்த்தலை வந்து சேரலாம். கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி,கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பேட்டைவாய்த்தலையில் இறங்கி கோயிலுக்கு வந்து சேரலாம்.

நவக்கிரக நாயகர்கள் சன்னதி
நவக்கிரக நாயகர்கள் சன்னதி

அரியலூர், பெரம்பலூர், சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து முத்தரசநல்லூர், ஜீயபுரம், முக்கொம்பு, திருப்பராய்த்துறை, பெருகமணி, சிறுகமணி வழியாக பேட்டைவாய்த்தலை வந்து சேரலாம்.

வைகாசி பிரம்மோத்சவம் - சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
வைகாசி பிரம்மோத்சவம் - சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

திருச்சி-கரூர் வழித்தடத்தில் கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் புறநகர்ப் பேருந்துகளில் ஏறி, பேட்டைவாய்த்தலை வந்தடையலாம். இவைத் தவிர திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பேட்டைவாய்த்தலை, குளித்தலை போன்ற பகுதிகளுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதால், அதன் மூலமாகவும் கோயிலுக்கு வரலாம்.

மேலும் திருச்சி ரயில் நிலையம், விமான நிலையத்திலிருந்து கார், வேன் போன்ற வசதிகள் இல்லை. பேட்டைவாய்த்தலை பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதிகளும் உள்ளன.

கோயில் திறப்பு நேரம்

கோயில் காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். தொடர்புக்கு: இக்கோயிலுக்கு வருபவர்கள் அர்ச்சகர் பிரபு குருக்களை 9047888088 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி

அருள்மிகு பாலாம்பிகை அம்மன் உடனுறை மத்யார்ஜுனேசுவரர் திருக்கோயில்,
தேவஸ்தானம்,
பேட்டைவாய்த்தலை,
ஸ்ரீரங்கம் வட்டம்,
திருச்சி மாவட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com