நிறம் மாறும் புற்று மண்! பல மர்மங்கள் நிறைந்த அதிசய கோயில்!!

இறைவழிபாட்டில் ஒருவகை தான் இயற்கை வழிபாடு. இயற்கை வழிபாட்டில் பலவகை உண்டு. இதில் ஒரு பிரிவுதான் விலங்கு வழிபாடு.
நிறம் மாறும் புற்று மண்! பல மர்மங்கள் நிறைந்த அதிசய கோயில்!!

இறைவழிபாட்டில் ஒருவகை தான் இயற்கை வழிபாடு. இயற்கை வழிபாட்டில் பலவகை உண்டு. இதில் ஒரு பிரிவுதான் விலங்கு வழிபாடு. பசுவை கோமாதாவாக வழிபடுகின்றனர். கருடனை திருமாலின் வாகனமாக வழிபடுகின்றனர். பாம்பைத் தெய்வத்தின் அம்சமாகக் கருதி வழிபடுகின்றனர். அந்த வரிசையில், பாம்பு மனிதனுக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும், பல நாடுகளில் பாம்பை தெய்வமாகக் கருதி இன்றும் வழிபட்டு வருகின்றனர். 

நாடு முழுவதும் நாக வழிபாடு நடைபெற்றாலும் இந்தியாவில் பாம்பையே மூலவராகக் கொண்டு வழிபடும் ஒரே கோயில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா திருக்கோயில் தான். மற்ற கோயில்களில் நாகராஜா சிலைகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கும். 

மிகப் பழமையான இக்கோயில் எப்போது யாரால் கட்டப்பட்டது என்பது பற்றி தகவல் இல்லை. எனினும் இந்தக் கோயிலுக்கென ஒரு பழமையான கதை உள்ளது. கோயில் இருக்கும் இடம் பண்டைய காலத்தில் புல்லும், புதரும் நிறைந்த இடமாக இருந்தது. இங்கு இளம்பெண் ஒருவர் புல் அறுத்துக் கொண்டிருந்த போது அவரது அரிவாள் ஐந்து தலை நாகத்தின் தலையில் பட்டு ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இதைக் கண்டு அஞ்சிய பெண் கிராம மக்களை அழைத்து வந்தார். அங்கு வந்து பார்க்கும் போது ஐந்து தலை நாகத்தின் சிலை காணப்பட்டது. 

உடனே மக்கள் அங்குத் தென்னங்கீற்றால் வேயப்பட்ட கூரையில் கோயில் கட்டி அன்று முதல் வணங்கத் தொடங்கிவிட்டனர். பிற்காலத்தில் களக்காடு மன்னரின் தீராத தொழு நோய் இந்தக் கோயில் வழிபாட்டின் மூலம் குணம் அடைந்ததாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது. தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிவர்த்தி தலமாகவும் இது விளங்குகிறது. 

இந்தக் கோயிலின் உள்ளே செல்லும் போது உள்வாசலின் இருபுறமும் அமைந்திருக்கும் ஐந்து தலை நாகத்தின் படம் எடுக்கும் வடிவிலான சிலை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இவை தர்னேந்திரன் என்ற நாகராஜன் என்றும், பத்மாவதி என்ற நாகராணி எனவும் நம்பப்படுகிறது. ஒருநாள் மன்னர் கனவின் நாகராஜர் தோன்றி ஓலைக்கூரையாலான இருப்பிடத்தையே நான் விரும்புகிறேன் அதை மாற்ற வேண்டாம் என்று கூறியதால் இன்றும் இந்தக் கோயிலின் கருவறை மேல்கூரைத் தென்னை ஓலையால் வேயப்பட்டே இருக்கும். 

இந்தக் கூரையில் ஒரு பாம்பு காவல் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஓலைக்கூரை மாற்றிக் கட்டும் போது ஒரு பாம்பு வருவது வழக்கமாக உள்ளது. மூலவர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாக இருக்கும். மூலவர் இங்குத் தண்ணீரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்தத் தண்ணீர் ஊற்றில் இருந்து எடுக்கப்படும் மண்தான் இக்கோயிலின் முக்கிய பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. 

இந்த மணலானது ஆடி முதல் மார்கழி வரை கருப்பு நிறத்திலும், தை முதல் ஆனி வரை வெள்ளை நிறத்திலும் என ஆறு மாதத்திற்கு ஒருமுறை நிறம் மாறி காட்சியளிக்கிறதாம். இங்கிருந்து மண் அள்ள அள்ளக்  குறையாமல் இருப்பது அதிசயமாகும். இக்கோயில் ஒரு நாகதோஷ பரிகார தலமாகும். திருமணம் நடக்க வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும் பெண்கள் இங்கு நாகருக்கு பால் அபிஷேகம் நடத்துகின்றனர். 

ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குப் பெண்கள் கூட்டம் அலை மோதும். தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெண்கள் வரிசையாக நின்று நாகருக்கு பால் ஊற்றுவதைக் காணமுடியும். ஆண்டு தோறும் தை மாதம் பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நாகராஜனுக்கு பால் வார்ப்பது புனிதமாக கருதப்படுகிறது. திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை விழாவும், கந்தசஷ்டி விழாவும் இங்கு நடக்கும் இதர முக்கிய விழாக்களாகும்.

முகவரி: அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில், நாகர்கோயில் - 629 001. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com