
புதுக்கோட்டை, அன்னவாசலில் சிறப்புப் பெற்ற விருத்தபுரீஸ்வரர் சமேத தர்மசம்வர்த்தினி கோயிலில் மாசி தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்தவகையில், நிகழாண்டும் திருவிழா கடந்த 3-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விழா நாள்களில் மண்டகபடிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழா நாள்களில் உபயதாரர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முதல் தேரில் சுவாமியும், இரண்டாவது தேரில் அம்பாளும் எழுந்தருளினார்கள்.
இதையடுத்து மேள, தாளம் மங்கள இசை முழங்க வானவேடிக்கையுடன் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள் சரண கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் முக்கிய வீதிகள் வழியாக ஆடி, அசைந்தபடி வலம் வந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் கூடி நின்று தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற தேங்காய், பூ, பழம் வைத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பல்வேறு வீதிகளில் வழியாக சுமார் 1.30 மணி நேரம் வலம் வந்த தேர் பின்னர் நிலையை வந்தடைந்தது.
தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அர்ச்சனை ஆராதனை நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி வழிபாடு செய்தனர் விழாவை ஒட்டி உபயதாரர்கள் சார்பில் ஆங்காங்கே பந்தல் அமைத்து நீர், மோர், இனிப்பு பானகம், தக்காளி சாதம், புளி சாதம், பொங்கல், சுண்டல் பக்தர்களுக்கு வழங்கினர்