புது தில்லி, அக்.8: உலக குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து விகாஸ் மேலும் கூறியது: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெல்டர்வெயிட் பிரிவில் முதல்முறையாக பங்கேற்ற நான், அனுபவமும், திறமையும் வாய்ந்த சவாலான போட்டியாளர்களைச் சந்தித்தேன். இதில் சிறப்பாக விளையாடியது மிகுந்த மனநிறைவு அளிக்கிறது. வெண்கலம் வென்றதில் எனக்கு மகிழ்ச்சியே என்றார்.
அரையிறுதி ஆட்டம் குறித்துப் பேசிய அவர், அடிக்கடி குதித்ததால் எளிதில் களைப்படைந்தேன். இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினேன். எல்லாமே கடவுளின் கையில்தான் உள்ளது. அவர் எனக்கு வெண்கலப் பதக்கத்தை கொடுத்துள்ளார். நான் அதைப் பெற்றுள்ளேன்.
அரையிறுதியில் என்னை எதிர்த்து விளையாடிய உக்ரைனின் டாராஸ் செலஸ்டியூக், மிகவும் முதிர்ச்சியடைந்த வீரர். அவரின் தாக்குதல் என்னுடைய ஆற்றலை நிலை குலையச் செய்தது. முதல் இரண்டு சுற்றுகளில் பதிலடி கொடுக்க கடுமையாகப் போராடினேன். இருப்பினும் அந்த நாள் என்னுடையதாக இல்லை.
இந்த ஆட்டம் மிகச்சிறந்த அனுபவம். இதனால் அடுத்த ஆண்டு இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாட முடியும். இந்தப் போட்டியின் மூலம் ஒலிம்பிக்கில் விளையாட தகுதிபெற்றுள்ளேன் என்றார்.
விகாஸ் கிருஷ்ணனுக்கு பாராட்டுத் தெரிவித்த பயிற்சியாளர் குர்பேக்ஸ் சிங் சந்து, "அவர் வருங்கால உலகச் சாம்பியன். விகாஸ், தேவேந்திரா சிங், ஜெய் பகவான், மனோஜ் குமார் என 4 வீரர்கள் ஒலிம்பிக்கில் விளையாட தகுதிபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் விகாஸ் வெண்கலம் வென்றார். இந்தப் போட்டியில் பதக்கம் வென்ற இரண்டாவது வீரர் விகாஸ். இதற்கு முன் 2009-ம் ஆண்டு விஜேந்தர் சிங் வெண்கலம் வென்றார்.
60 கிலோ எடைப் பிரிவில் விளையாடி வந்த விகாஸ் கிருஷ்ணன் 2 மாதங்களுக்கு முன்பு 69 கிலோ எடைப் பிரிவு போட்டிக்கு மாறினார். இதன்பிறகு அவர் பங்கேற்ற முதல் போட்டியிலேயே வெண்கலம் வென்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










