ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வெற்றியுடன் தொடங்கியது மும்பை இண்டியன்ஸ்

சென்னை, ஏப். 4: ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ûஸ வென்றது. முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவர்களில் அனைத்து

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 7:31 am

ஏ.வி. பெருமாள்

சென்னை, ஏப். 4: ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ûஸ வென்றது.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் 16.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வென்றது.

அந்த அணியின் தொடக்க வீரர் ரிச்சர்ட் லெவி 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். ஐபிஎல் 5-வது சீசனின் முதல் ஆட்டம் சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் முதலில் ஃபீல்டிங் செய்யத் தீர்மானித்தது. சூப்பர் கிங்ஸ் அணியின் பிளெஸ்ஸிஸ், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். முதல் ஓவரின் 4-வது பந்தில் பிளெஸ்ஸிஸ் 3 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து ரெய்னா களமிறங்கினார். ஸ்கோர் 38 ஆக இருந்தபோது முரளி விஜய் 10 ரன்களில் (17 பந்துகள்) ஆட்டமிழந்தார். தொடர்ந்து பிராவோ களம் கண்டார். 7.3 ஓவர்களில் சென்னை அணி 50 ரன்களை எடுத்தது. சிறப்பாக விளையாடிய ரெய்னா 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்ஸரும், 2 பவுண்டரிகளும் அடங்கும். சென்னை அணியில் அதிகபட்ச ரன் எடுத்ததும் ரெய்னாதான்.

சென்னை சரிவு: ரெய்னா அவுட் ஆனபின் சென்னை அணி சரிவுக்குள்ளானது. பிராவோ 19 ரன்கள், மோர்கல் 3 ரன்கள், கேப்டன் தோனி 4 ரன்கள், பத்ரிநாத் 10 ரன்கள், அஸ்வின் 3 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 3 ரன்கள், போலிங்கர் 3 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜகாதி 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சிறப்பான தொடக்கம்: பின்னர் பேட் செய்த மும்பை அணிக்கு ரிச்சர்டு லெவி-சச்சின் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தது. மும்பைக்கு முதல் சிக்ஸரை அடித்தார் சச்சின். இதன்பிறகு சென்னை பெüலர்களை பதம்பார்த்தார் லெவி. ஜடேஜா வீசிய 6-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியையும், அடுத்த பந்தில் சிக்ஸரையும் அடித்தார் லெவி. கடைசிப் பந்திலும் பவுண்டரி அடித்தார் லெவி. அந்த ஓவரில் மட்டும் 16 ரன்களை வாரி வழங்கினார் ஜடேஜா.



அறிமுக ஆட்டத்தில் அரைசதம்:
டுவைன் பிராவோ வீசிய 8-வது ஓவரில் சிக்ஸர் அடித்து 34 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார் லெவி. ஆனால் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார். முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரரான லெவி அறிமுக ஆட்டத்திலேயே அரைசதம் கண்டார்.

சச்சின் "ரிட்டையர்டு ஹர்ட்' இதையடுத்து களமிறங்கிய ரோஹித் சர்மா ரன் கணக்கைத் தொடங்காமலேயே வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். 3 பந்துகளைச் சந்தித்த அவர் போலிங்கர் பந்துவீச்சில் தோனியால் அற்புதமாகக் கேட்ச் செய்யப்பட்டார். இதையடுத்து சச்சினுடன் இணைந்தார் அம்பதி ராயுடு. ஆனால் சிறிது நேரத்திலேயே சச்சின் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். 15 பந்துகளைச் சந்தித்த அவர், 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ராயுடுடன் இணைந்தார் ஜேம்ஸ் பிராங்க்ளின். இதன்பிறகு இருவரும் நிதானமாகவே ஆடியதால் ஸ்கோர் வேகமும் குறைந்தது. 16-வது ஓவரின் 5-வது பந்தில் ராயுடு சிக்ஸர் அடிக்க 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. லெவி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மந்தமான ஆட்டம்: ரிச்சர்டு லெவி, ரெய்னாவைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ரன் எடுக்க சிரமப்பட்டனர். இதனால் விறுவிறுப்பின்றியே காணப்பட்டது. மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு கிரிக்கெட் ஆட்டத்தைவிட, ஒலித்த தமிழ் குத்துப்பாடல்கள்தான் விருந்தாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் மொத்தத்தில் 5 சிக்ஸர்கள் மட்டுமே அடிக்கப்பட்டன.

சென்னை 10 ஆயிரம்: இந்த ஆட்டத்தில் சென்னை அணி 95 ரன்களை எட்டியபோது ஐபிஎல் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது. 5-வது போட்டியில் விளையாடும் சென்னை அணி தனது 63-வது இன்னிங்ஸில் இந்த சாதனையை எட்டியுள்ளது.

12,000 இருக்கைகளுக்கு அனுமதியில்லை: மைதானத்தின் பெல்ஸ் ரோடு பகுதியில் உள்ள 3 கேலரிகள் காலியாக இருந்தன. அந்த கேலரிகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் அந்த கேலரிகளில் உள்ள 12 ஆயிரம் இருக்கைகள் காலியாகவே இருந்தன.

முதல் சிக்ஸர்: இந்த ஐபிஎல் போட்டியின் முதல் சிக்ஸரை ரெய்னா அடித்தார். அபு நெஹிம் அஹமது வீசிய 4-வது ஓவரின் 3-வது பந்தில் போட்டியின் முதல் சிக்ஸரை அடித்தார்.

பலத்த பாதுகாப்பு : மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அனைத்து நுழைவுவாயில்களிலும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கடும் சோதனைக்குப் பிறகே ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் லேப்டாப், கேமராக்கள் உள்ளிட்ட எவ்வித எலெக்ட்ரானிக் கருவிகளும் அனுமதிக்கப்படவில்லை. பல்வேறு நவீன யுக்திகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டே பலத்த சோதனை நடத்துவதாக வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர்.

கொடி, தொப்பி விற்பனை ஜோர்: போட்டி 8 மணிக்குத் தொடங்கினாலும், ரசிகர்கள் மதியம் 2 மணி முதலே மைதானத்திற்கு வரத் தொடங்கிவிட்டனர். மைதான வாயிலில் சென்னை அணியின் கொடி, தொப்பி, டி-சர்ட் உள்ளிட்டவற்றின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

அதிரவைத்த பாடல்கள்: வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழ் திரைப்படப் பாடல்கள் பிரத்யேக ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிபரப்பப்பட்டன. ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆட்டம் போட்டனர். சென்னை அணியின் ஆட்டம் எதிர்பார்த்த அளவு இல்லாததால் பின்னர் உற்சாகம் குறைந்தது. டிரம்ஸ் சிவமணி தன்னுடைய அதிரடி இசையால் மைதானத்தை அதிரவைத்தார்.

ரூ.10 கோடி போச்சே: இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் ரூ.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். இதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் ஒரு ஓவர் மட்டுமே வீசி 16 ரன்களை வாரி வழங்கினார். ரூ.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதால் அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால் "ரூ.10 கோடி போச்சே' என்று ரசிகர்கள் கிண்டலடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.