விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஓய்வுபெறும் எண்ணமில்லை

சென்னை, ஜூன் 3: செஸ் போட்டியிலிருந்து ஓய்வுபெறும் எண்ணமில்லை என்று உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார். போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்றதன் மூலம் தொடர்ந்து சிறப்பாக விளை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:03 am

ஏ.வி. பெருமாள்

சென்னை, ஜூன் 3: செஸ் போட்டியிலிருந்து ஓய்வுபெறும் எண்ணமில்லை என்று உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.

போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்றதன் மூலம் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் 5-வது முறையாக பட்டம் வென்ற ஆனந்த், சனிக்கிழமை இரவு சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் தன்னுடைய நீண்ட கால ஸ்பான்ஸரான என்.ஐ.ஐ.டி. சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தனது உலக சாம்பியன்ஷிப் போட்டி பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியது:

ஓய்வுபெற மாட்டேன்: இனி வரும் நாள்களில் செஸ் போட்டியை ரசித்து மகிழ்ச்சியோடு விளையாடுவேன். ஓய்வுபெறுவதற்கு எந்த அவசியமும் இல்லை. எனவே ஓய்வுபெறும் திட்டம் இல்லை. 5-வது முறையாக பட்டம் வென்றுள்ளது மன ரீதியாக நல்ல ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வெற்றிபெறுவதற்காக காத்திருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் எத்தனை பட்டங்கள் வெல்ல வேண்டும் என்ற இலக்கு எதுவும் கிடையாது. ஒவ்வொரு சாம்பியன்ஷிப்பும் சிறப்பானது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவேன். அதற்கு முடிவு என்பதே கிடையாது.

3 மாத பயிற்சி: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக கடந்த ஜனவரி 15 முதல் ஏப்ரல் 15 வரை 3 மாதங்கள் ஜெர்மனியில் தீவிர பயிற்சி மேற்கொண்டேன். அதன்பிறகே உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட மாஸ்கோ சென்றேன்.

கெல்ஃபான்டை 1989-ல் இருந்தே எனக்குத் தெரியும். அவர் மிகச்சிறந்த வீரர் மட்டுமல்ல, செஸ் பற்றிய ஆழ்ந்த ஞானம் உள்ளவரும்கூட.

கெல்ஃபான்ட், சோவியத் யூனியன் செஸ் கலாசாரத்தில் இருந்து வந்தவர் என்பதால், இந்தப் போட்டிக்கு மிகச்சிறப்பாக தயாராகி வருவார் என்று எனக்கு ஏற்கெனவே தெரியும். சிறப்பாக விளையாடி அதை அவர் நிரூபித்துவிட்டார். கெல்ஃபான்ட் கடுமையான போட்டியாளர் என்பதால் எல்லா வகையிலும் அவருக்கு ஈடுகொடுத்து விளையாடும் வகையில் நான் தயாராகிச் சென்றிருந்தேன்.

தூக்கத்தை இழந்தேன்: 7-வது சுற்றின் ஒரு பகுதியில் நான் தடுமாறியதால், அதில் தோல்வி கண்டேன். தோல்வியால் அன்றிரவு முழுவதும் தூங்கவில்லை. மனதளவில் கடும் பாதிப்புக்குள்ளானேன். அந்தநேரத்தில் அதுதான் போட்டியின் திருப்புமுனை என்று நான் எனக்குள் சொல்லிக்கொள்ளவில்லை.

8-வது சுற்றில் சிறப்பாக ஆடியதால் வெற்றிபெற்றேன். கெல்ஃபான்டை நெருக்கடிக்குள் தள்ளியதாலேயே அந்த சுற்றில் திருப்புமுனை ஏற்பட்டதாக நினைக்கிறேன். அவர் காய்களை நகர்த்துவதில் தவறுகளை செய்தார்.

அதை சரியாகப் பயன்படுத்தியதால் பின்னடைவில் இருந்து மீண்டேன். 8-வது சுற்றில் கெல்ஃபான்டை சமன்செய்தபிறகு அடுத்த சுற்றுகளை எவ்வித பதற்றமும் இன்றி எதிர்கொண்டேன் என்றார்.

கெல்ஃபான்ட் சிறந்த வீரர்: டைபிரேக்கர் சுற்று குறித்துப் பேசிய ஆனந்த், "டைபிரேக்கர் சுற்றை கறுப்புக் காய்களுடன் தொடங்கியதால், அசாதாரணமாக உணர்ந்தேன்.

இந்த சுற்றின் 2-வது ஆட்டத்தில் கடுமையான உத்திகளோடு விளையாடினேன். அதேநேரத்தில் தான் கடுமையான போட்டியாளர் என்பதை கெல்ஃபான்டும் காட்டினார். இருப்பினும் கடைசிக் கட்டத்தில் அவரால் காயை சரியாக நகர்த்த முடியாமல்போனது.

போட்டியில் நான் வெற்றிபெற்றாலும், செஸ் போட்டியில் நாங்கள் இருவருமே சிறந்த வீரர்கள் என்று கருதுகிறேன். சோதனையைத் தாண்டி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டதில் மகிழ்ச்சி. இறுக்கம் தளர்ந்து அமைதியாக இருக்கிறேன்.

என்னுடைய மனைவி அருணா, எனக்கு மிகுந்த உதவியாக இருக்கிறார். நாங்கள் இருவரும் 1996-ல் திருமணம் செய்துகொண்டபோது, அருணாவுக்கு செஸ் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் இப்போது அவர் சிறப்பாக விளையாடுகிறார். எனக்கு ஏற்படும் சுமைகளில் பெரும்பகுதியை அவர் தாங்கிக்கொள்கிறார் என்றார்.

புதினின் செஸ் ஆர்வம்: ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடனான சந்திப்பு குறித்துப் பேசிய அவர், "30 நிமிடங்கள் அந்த சந்திப்பு நடந்தது. அவர் செஸ்ûஸப் பற்றி மிக ஆழமாக தெரிந்து வைத்திருக்கிறார். ரஷிய கலாசாரத்தில் செஸ் போட்டி எவ்வளவு முக்கியமானது என்பது பற்றியும் அவர் பேசினார்.

முதல்வருக்கு நன்றி: சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு வந்திறங்கியபோது பிரமாண்ட வரவேற்பு கொடுத்த ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு ரூ.2 கோடி ரொக்கப் பரிசை அறிவித்தது மட்டுமின்றி, பள்ளிகளில் செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தியதற்காகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிகளில் செஸ் போட்டியை சேர்த்திருப்பது மாணவர்களின் வளர்ச்சியில் பங்கு வகிக்கும். இதன்மூலம் மாணவர்கள் நினைவாற்றல் உள்ளிட்ட திறன்களைப் பெறுவார்கள். மேலும் அடுத்த தலைமுறையில் தமிழகத்தில் இருந்து ஏராளமான செஸ் வீரர்கள் உருவாகுவார்கள் என்று நம்புகிறேன்.

உங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே என்று கேட்டபோது, "இது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது' என்றார். சச்சினுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளதைப் போன்று உங்களுக்கும் வழங்கினால் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு, அது முதலில் வரட்டும் அதன்பிறகு பார்க்கலாம்' என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் என்ஐஐடியின் சார்பில் "தி டர்னிங் பாயிண்ட் ஸ்காலர்ஷிப்பை' சண்முகப் பிரியா என்ற பெண்ணுக்கு ஆனந்த் வழங்கினார்.

காஸ்பரோவுக்கு பதிலடி: ரஷிய செஸ் ஜாம்பவானான கேரி காஸ்பரோவ், ஆனந்த் உத்வேகமின்றி காணப்படுவதாகக் கூறியிருந்தார். ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் ஆனந்த் பட்டம் வென்றார். அது குறித்து கேட்டபோது, "காஸ்பரோவ் 2005-ல் ஓய்வு பெற்றுவிட்டார். 2011-ம் ஆண்டில் இருந்தே என்னை ஓய்வுபெற வைக்க முயற்சித்து வருகிறார்' என்றார் ஆனந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.