சிறப்பு விளையாட்டு விடுதிகளின் அவலநிலை!
சென்னை, செப்.7: சென்னையில் உள்ள தமிழக அரசின் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் தரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி.) சார்பில


சென்னை, செப்.7: சென்னையில் உள்ள தமிழக அரசின் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் தரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி.) சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி சென்னை நேரு மைதானத்திலும், மாணவிகளுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி நேரு உள் விளையாட்டரங்கிலும் செயல்பட்டு வருகின்றன. இது தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமாகும்.
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லக்கூடியவர்கள் என்று கருதப்படும் திறமையான வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு இங்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
140 பேருக்கு பயிற்சி: மாணவர் விடுதியில் 80 பேர் உள்ளனர். இவர்கள் கல்லூரிகளில் படித்துக் கொண்டே தட களம், வாலிபால், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளுக்காக பயிற்சி பெற்று வருகிறார்கள். மாணவியர் விடுதியில் 60 பேர் தங்கியுள்ளனர். இவர்கள் தட களம், வாலிபால், கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவர்களில் ஒருவரின் உணவுக்காக மாதந்தோறும் ரூ.2,700-ம், சீருடை மற்றும் காலணி உள்ளிட்ட பயிற்சி உபகரணங்களுக்காக ஆண்டுக்கு ரூ.3 ஆயிரமும் அரசு வழங்குகிறது. மருத்துவ செலவுக்காக ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இவர்களுக்காக மேலும் சில நிதியுதவிகளையும் அரசு அளித்து வருகிறது.
அஜீரணக் கோளாறு: ஆனால் விளையாட்டு விடுதிகளில் தரமான உணவுகள் வழங்கப்படுதில்லை. காலையில் வழங்கப்படும் உணவுகள் சரியாக வேகாத நிலையில் உள்ளதாகவும், அதனால் அஜீரணக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாகவும் வீரர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக வீரர்கள் சிலர் மேலும் கூறியது: உணவே சில நேரங்களில் விஷமாகி (ஃபுட் பாய்சன்) விடுகிறது.
பழச்சாறு, பழவகைகள் உள்ளிட்டவை இப்போது வழங்கப்படுவதில்லை. முன்பெல்லாம் விடுதிக்கு 30 லிட்டர் பால் வாங்கினாலும், இரு வேளைகளிலும் வீரர்களுக்கு பால் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது நாள்தோறும் 40 லிட்டர் பால் வாங்குகிறார்கள். ஆனால் ஒரு வேளை மட்டுமே பால் கொடுக்கிறார்கள்.
மறுக்கப்படும் உணவு: மீன், ஆட்டிறைச்சி போன்றவை இப்போது வழங்கப்படுவதில்லை. மாட்டிறைச்சி, கோழியிறைச்சி, முட்டை ஆகியவையே வழங்கப்படுகின்றன. சில நாள்களில் கோழியிறைச்சிக்குப் பதிலாக முட்டையை வழங்கி ஏமாற்றுகிறார்கள். சுத்தம் செய்வதற்கு ஆள் இல்லாததால், நாங்கள் சாப்பிடும் அறை சுத்தம் செய்யாமல் எப்போதும் அசுத்தமாகவே காணப்படுகிறது.
சில நேரங்களில் போட்டிகளில் பங்கேற்றுவிட்டு இரவில் திரும்பி வந்தால் எங்களுக்கு உணவு இருப்பதில்லை. கேட்டால் வெளியில் சென்று சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். குடிநீர் வசதி போதுமான அளவில் இல்லை. இதனால் பெரும்பாலான நேரங்களில் காசு கொடுத்தே தண்ணீர் வாங்குகின்றோம்.
விளையாட்டுத் துறை அமைச்சர் சிவபதி இங்கு வந்து பார்வையிட்டார். அவர் வரும்போது எல்லாவற்றையும் சரியாக செய்திருந்தார்கள். அவரிடம் இங்குள்ள குறைகளைப் பற்றி சொல்லக்கூடாது என்றுகூறி இங்குள்ள நிர்வாக அலுவலர் எங்களைத் தடுத்துவிட்டார். அதையும் மீறி சிலர் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை.
நெருக்கடியான சூழல்: நேரு மைதானத்தில் ஏராளமான அறைகள் இருந்தும் 80 வீரர்களும் 3 அறைகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் நெருக்கடியான சூழலில் வீரர்கள் வசித்து வருகின்றனர்.
சூரிய ஒளி புகமுடியாமலும், காற்றோட்டமின்றியும் அறைகள் காணப்படுகின்றன.
வெப்பத்தை வெளியேற்றும் மின் விசிறிகள் (எக்ஸ்ஹாஸ்டிங் ஃபேன்) பழுதடைந்துவிட்டது. இதுவரை பழுது நீக்கப்படவில்லை. மின் சாதனங்கள் பழுதானால் பல முறை புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. கொசு மருந்தும் அடிக்கப்படுவதில்லை. இதனால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகிறோம்.
நோய் பரவும் அபாயம்: கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட வசதிகள் போதிய அளவில் இல்லை. விடுதி அருகில் உள்ள மற்ற கழிவறைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. அங்கு கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வீரர்களுக்கு தொற்றுநோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பில்லை: மருத்துவ வசதிகள் இல்லை. மருத்துவர் இல்லை. இதனால் வீரர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அரசு மருத்துவமனையையே நாட வேண்டியுள்ளது. விடுதிக்கென்று தனியாக பிசியாதெரபிஸ்டும் இல்லை. நாய் தொல்லை, எலி தொல்லையும் அதிகமாக உள்ளது. எவ்வித பாதுகாப்பும் இல்லை.
விளையாட்டு உபகரணங்களும் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. அவை பாதுகாப்பு கிடங்குகளில் தூங்குகின்றன. எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர்-செயலர் விடுதி பக்கம் வருவதேயில்லை என்று குற்றம்சாட்டினர்.
மாணவிகளின் நிலை: நேரு உள் விளையாட்டரங்கில் உள்ள விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகள் காய்கறி வெட்டித் தருமாறும், பாத்திரங்களை கழுவும்படியும் வற்புறுத்தப்படுவதாகக் கூறினர்.
இந்தப் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். உணவகத்துக்கு தனியாக ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும். மாதம் ஒரு முறை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் விடுதியில் உள்ள விளையாட்டு வீரர்களை சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
விரைவில் தீர்வு: விஜய குமார்
இதுதொடர்பாக எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலர் விஜய குமாரிடம் கேட்டபோது, "நேரு மைதானத்துக்கு விரைவில் புதிய அலுவலர் நியமிக்கப்படவுள்ளார். விடுதியில் உள்ள பிரச்னை தொடர்பாக அங்குள்ள மாணவர்களிடம் கலந்தாலோசித்து தீர்வு காணப்படும். தரமான உணவு வழங்கவும், மருத்துவர், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்டோரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவியர் விடுதியில் இருந்த சமையலர் திடீரென பணிக்கு வராததால், மாணவிகள் சமையல் வேலைகளை செய்தனர். இப்போது புதிய சமையல்காரரை நியமித்துவிட்டோம்' என்றார்.
சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள இவர்களின் திறமை, வசதிகள் இன்மையால் வீணடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் கருத்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...