இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி 3-0 கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சியை வியாழக்கிழமை வென்றது.
இது, பெங்களூரு அணிக்கு 2-ஆவது ஆட்டத்தில் 2-ஆவது வெற்றியாக இருக்க, ஹைதராபாதுக்கு முதல் ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூரு அணிக்காக ராகுல் பெகெ 5-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். இதையடுத்து தனது கோல் வாய்ப்புக்காக ஹைதராபாத் கடுமையாகப் போராடிய நிலையிலும், பெங்களூரு அணி அதற்கு இடமளிக்கவில்லை.
எனினும், பெங்களூரு அணி மேலும் கோல் அடிக்காத வகையில் ஹைதராபாத் தடுப்பாட்டம் ஆடி வந்தது. இந்நிலையில், ஆட்டம் முடியும் தருவாயில் பெங்களூரு கேப்டன் சுனில் சேத்ரி அதிரடியாக 2 கோல்கள் அடித்தாா். 85-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி கிக் வாய்ப்பிலும், இஞ்சுரி டைமிலும் (90+4’) அவா் அடித்த கோலால், பெங்களூரு 3-0 என வெற்றி பெற்றது.
புள்ளிகள் பட்டியலில் தற்போது பெங்களூரு முதலிடத்திலும், ஹைதராபாத் கடைசியாக 14-ஆவது இடத்திலும் உள்ளன.

