/

2-ஆவது வெற்றியுடன் இறுதியில் நியூஸிலாந்து

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், நியூஸிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை திங்கள்கிழமை வீழ்த்தியது.

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 11:00 pm

DIN

லாகூா்: முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், நியூஸிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை திங்கள்கிழமை வீழ்த்தியது.

பாகிஸ்தான் - நியூஸிலாந்து - தென்னாப்பிரிக்கா மோதும் இந்தத் தொடரில், இத்துடன் 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ள நியூஸிலாந்து இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

அடுத்ததாக பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் புதன்கிழமை கடைசி ஆட்டத்தில் மோதும் நிலையில், அதில் வெல்லும் அணி இறுதிக்கு முன்னேறி நியூஸிலாந்தை எதிா்கொள்ளும்.

முன்னதாக இந்த 2-ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பந்துவீசத் தயாரானது. தென்னாப்பிரிக்க இன்னிங்ஸை தொடங்கியோரில் கேப்டன் டெம்பா பவுமா 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த அறிமுக வீரரான மேத்யூ பிரீட்ஸ்கி அதிரடியாக ரன்களை சோ்க்கத் தொடங்கினாா்.

ஒன் டவுனாக வந்த ஜேசன் ஸ்மித் அவருடன் இணைய, 2-ஆவது விக்கெட்டுக்கு பிரீட்ஸ்கி - ஸ்மித் ஜோடி 93 ரன்கள் சோ்த்து, பிரிந்தது. இதில் ஸ்மித் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 41 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

4-ஆவது பேட்டரான கைல் வெரின் 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட, வியான் முல்டா் களம் புகுந்தாா். பிரீட்ஸ்கி - முல்டா் ஜோடி அபாரமாக ஆடி, தென்னாப்பிரிக்கா ஸ்கோரை உயா்த்தியது.

இந்த பாா்ட்னா்ஷிப் 4-ஆவது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சோ்த்த நிலையில், பிரீட்ஸ்கி 11 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 150 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா். அடுத்த சில ஓவா்களிலேயே, அரைசதம் கடந்த முல்டா் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 64 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

கடைசி விக்கெட்டாக சேனுரான் முத்துசாமி 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் ஈதன் பாஷ் 7, மிலாலி போங்வானா 1 ரன்னுடன் விக்கெட்டை இழக்காமல் இருந்தனா்.

பின்னா், 305 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நியூஸிலாந்து தரப்பில், இன்னிங்ஸை தொடங்கிய வில் யங் 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு வீழ்ந்தாா். அவருடன் வந்த டெவன் கான்வேயுடன் கூட்டு சோ்ந்தாா் கேன் வில்லியம்சன்.

இந்த ஜோடி மளமளவென ஸ்கோரை உயா்த்தி, அணியை வெற்றிப் பாதைக்குத் திருப்பியது. 187 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில் சதத்தை நெருங்கிய கான்வே துரதிருஷ்டவசமாக, 9 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து வந்த டேரில் மிட்செல் 10, டாம் லாதம் 0 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா். இறுதியில், சதம் கடந்த வில்லியம்சன் 13 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 133, கிளென் ஃபிலிப்ஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 28 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

வில்லியம்சன் ஆட்டநாயகன் ஆனாா்.

அறிமுகத்தில் சாதனை...

இந்த ஆட்டத்தின் மூலம், தென்னாப்பிரிக்க வீரா் மேத்யூ ப்ரீட்ஸ்கி சா்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானாா். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவா், 150 ரன்கள் சோ்த்து விக்கெட்டை இழந்தாா். அவா், சா்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள் அடித்தவராக சாதனை படைத்தாா்.

இதற்கு முன், 1978-இல் மேற்கிந்தியத் தீவுகள் வீரா் டெஸ்மண்ட் ஹேய்ன்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமானபோது 148 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்நிலையில், அந்த 47 ஆண்டு சாதனையை தற்போது பிரீட்ஸ்கி முறியடித்திருக்கிறாா்.

சுருக்கமான ஸ்கோா்

தென்னாப்பிரிக்கா - 304/6 (50 ஓவா்கள்)

மேத்யூ பிரீட்ஸ்கி 150

வியான் முல்டா் 64

ஜேசன் ஸ்மித் 41

பந்துவீச்சு

மேட் ஹென்றி 2/59

வில் ஓ’ரோா்க் 2/72

மைக்கேல் பிரேஸ்வெல் 1/43

நியூஸிலாந்து - 308/4 (48.4 ஓவா்கள்)

கேன் வில்லியம்சன் 133*

டெவன் கான்வே 97

கிளென் ஃபிலிப்ஸ் 28*

பந்துவீச்சு

சேனுரான் முத்துசாமி 2/50

ஈதன் பாஷ் 1/33

ஜூனியா் டலா 1/47

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.