இங்கிலாந்துக்கு எதிரான தோனியின் ஆட்டம் குறித்து நிபுணர்கள், ரசிகர்கள் அதிருப்தி!
என்னிடம் இதற்கான விளக்கம் கிடையாது. இந்த சிங்கிள் ரன்களை என்னவென்று விளக்குவது...


2019 உலகக் கோப்பையில் இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் தோல்வியைப் பரிசளித்தது இங்கிலாந்து.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய இங்கிலாந்து 337/7 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 306/5 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்வது தற்போது மேலும் கடினமாகிவிட்டது. 9 புள்ளிகள் கொண்ட பாகிஸ்தான் அடுத்ததாக வங்கதேச அணியைத் தோற்கடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணி நியூஸிலாந்திடம் தோற்கவேண்டும். இந்த இரண்டும் நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் 11 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெறமுடியும்.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் தோனியின் பேட்டிங் மற்றும் அவருடைய முயற்சி குறித்து கடும் விமரிசனங்கள் எழுந்துள்ளன. பாண்டியா ஆட்டமிழந்தபிறகு இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கிப் பயணிக்கவில்லை. இங்கிலாந்து அணி 13 சிக்ஸர் அடித்த நிலையில் இந்திய அணி 1 சிக்ஸர் மட்டுமே அடித்தது. கடைசி 5 ஓவர்களில் தோனியும் ஜாதவும் சேர்ந்து 20 சிங்கிள்கள், 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் மட்டுமே அடித்தார்கள். இங்கிலாந்து அணியின் இலக்கை நெருங்க இந்த வேகம் துளியும் போதவில்லை.
தோனியும் ஜாதவும் ஆடிய விதத்தைக் கண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பில் நாசர் ஹுசைனும் செளரவ் கங்குலியும் ஆச்சர்யப்பட்டார்கள். என்னிடம் இதற்கான விளக்கம் கிடையாது. இந்த சிங்கிள் ரன்களை என்னவென்று விளக்குவது? 338 ரன்களை விரட்டும்போது கைவசம் 5 விக்கெட்டுகளை வைத்திருந்து தோற்பதா என்று கேள்வியெழுப்பினார் கங்குலி. பந்து எப்படி வந்தாலும் நீங்கள் பவுண்டரி அடித்தாக வேண்டும் என்று தனது கோபத்தை மறைக்காமல் பேசினார்.
எனினும் தோனியை விட்டுக்கொடுக்காமல் பேசினார் கோலி. பவுண்டரி அடிக்க மிகவும் முயற்சி செய்தார் தோனி. ஆனால் அது முடியவில்லை. அவர்கள் நன்குப் பந்துவீசினார்கள். பந்து சீரான வேகத்தில் பேட்டை நோக்கி வரவில்லை. எனவே கடைசியில் அடிக்கமுடியாமல் போனது என்றார்.
தொலைக்காட்சியில் தோனி விளையாடிய விதத்தைக் கண்டு ரசிகர்கள் கடுப்பானார்கள். சமூகவலைத்தளங்களில் தங்களுடைய அதிருப்தியைப் பதிவு செய்தார்கள். கிரிக்கெட் நிபுணர்கள் தோனியின் பேட்டிங் குறித்து தங்களுடைய ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி அடைந்த தோல்வியை விடவும் தோல்வியடைந்த விதம் தான் இந்திய ரசிகர்களை மிகவும் காயப்படுத்தியுள்ளது.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...