
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று (டிசம்பர் 6) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி 42 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கே.எல்.ராகுல் 37 ரன்களும், ஷுப்மன் கில் 31 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலாண்ட் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!
டிராவிஸ் ஹெட் அதிரடி
இந்திய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 86 ரன்கள் எடுத்திருந்தது. நாதன் மெக்ஸ்வீனி 38 ரன்களுடனும், மார்னஸ் லபுஷேன் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவைக் காட்டிலும் 94 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மெக்ஸ்வீனி 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் நீண்ட நேரம் களத்தில் நீடிக்கவில்லை. அவர் 2 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, லபுஷேன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை அபாரமாக விளையாடியது. லபுஷேன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார். நிதானமாக விளையாடிய லபுஷேன் அரைசதம் எடுத்தார். அவர் 126 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சதம் விளாசி அசத்தினார். அவர் 141 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின், மிட்செல் மார்ஷ் (9 ரன்கள்), அலெக்ஸ் கேரி (15 ரன்கள்), பாட் கம்மின்ஸ் (12 ரன்கள்), மிட்செல் ஸ்டார்க் (18 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவைக் காட்டிலும் 157 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்தியா திணறல்
இதனையடுத்து, 157 பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்தும், விராட் கோலி 11 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். ஷுப்மன் கில் 28 ரன்கள், கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலாண்ட் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
இதையும் படிக்க: தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் விலகல்; காரணம் என்ன?
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
ரிஷப் பந்த் 28 ரன்களுடனும், நிதீஷ் குமார் ரெட்டி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 29 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.