/

கிரிக்கெட் திடலில் குழந்தை பெற்றெடுத்த ரசிகை! குவியும் வாழ்த்து!

கிரிக்கெட் போட்டி திடலில் குழந்தை பெற்றெடுத்த ரசிகைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

News image
கிரிக்கெட் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள திரையில் தோன்றிய வாழ்த்துப் பதிவு
Updated On :23 டிசம்பர் 2024, 12:35 pm

DIN

கிரிக்கெட் போட்டி திடலில் குழந்தை பெற்றெடுத்த ரசிகைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தலான சாதனையைப் படைத்தது.

அசத்தலாக விளையாடி சதம் அடித்த 22 வயதான பாகிஸ்தானைச் சேர்ந்த சைம் அயூப் தொடர்நாயகன் விருதை வென்றார்.

தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டி வெறும் கிரிக்கெட் போட்டியைவிடவுடம், கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி, மறக்கமுடியாத நாளாக அமைந்துள்ளது.

மார்பக புற்றுநோய்க்கு எதிராக ஆதரவு தெரிவித்து தென்னாப்பிரிக்க அணி ஒவ்வொரு ஆண்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடுவது வழக்கம்.

அதன்படி, நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க ரசிகர்கள் அனைவரும் பிங்க் நிற உடை அணிந்து அணிக்கு ஆதரவளித்தனர்.

போட்டியின் போது கிரிக்கெட் மைதானத்தில் இருந்த பெரிய திரையில் திடீரென, “வாழ்த்துகள் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் ரபெங். அவர்களுக்கு புதிதாக மகன் பிறந்துள்ளான்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், கிரிக்கெட் மைதானத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனால், ஆரவரமடைந்த ரசிகர்கள் கை தட்டி உற்சாகமாக சத்தமிட்டனர்.

தனது காதலை ஏற்றுகொள்ளுமாறு மோதிரம் அணிவித்து காதலை வெளிப்படுத்திய கிரிக்கெட் ரசிகர்

தனது காதலை ஏற்றுகொள்ளுமாறு மோதிரம் அணிவித்து காதலை வெளிப்படுத்திய கிரிக்கெட் ரசிகர்

அதுமட்டுமின்றி போட்டி இடைவேளையின் போது, ​​கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கையில் மோதிரத்துடன் மண்டியிட்டு, தனது காதலியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அவரது காதலை அந்தப் பெண் ஏற்றுக்கொண்ட போது கூட்டத்திலிருந்து ஆரவாரம் வெடித்தது. அப்போதும் ரசிகர் கைகளைத் தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

கிரிக்கெட்டில் சாதனைகள் மட்டுமின்றி இதுபோன்ற மறக்கமுடியாத மைல்கல் நிகழ்வுகளும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன என்று கிரிக்கெட் ரசிகர்களும், இணையவாசிகளும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.