ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நவ.24, 25 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகளுக்கு 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக லக்னௌ அணி இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தை சுமார் ரூ.27 கோடி வாங்கியுள்ளது.
மற்றுமொரு சிறப்பாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக விளையாடப் போகும் முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் - பேட்டர் ராபின் மின்ஸ் பெற்றுள்ளார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.65 லட்சத்துக்கு எடுத்துள்ளது.
அதே ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான எம்.எஸ். தோனியின் தீவிர ரசிகரான ராபின் மின்ஸ், தோனியின் பயிற்சியாளரான சஞ்சால் பட்டாச்சார்யாவின் வழிகாட்டுதலில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஜார்க்கண்ட் தலைநகரான ராஞ்சியில் உள்ள கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த மின்ஸ் இதுவரை ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகவில்லை. ஆனாலும், ஜார்க்கண்ட்டின் 19, 25 வயதுக்குள்பட்டவர்களுக்கான அணியில் விளையாடி உள்ளார்.
இவரது தந்தை ஓய்வுபெற்ற ராணுவ வீரர். தற்போது ராஞ்சி பிர்சா முண்டா விமான நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். மின்ஸ்க்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஏலத்தில் பேசிய ராபின் உத்தப்பா அவரை, ‘இடது கை கீரன் பொலார்ட்’ என்று கூறினார்.
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தில் குஜராத் டைடன்ஸ் அணியால் ரூ.3.60 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ராபின் மின்ஸ், ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பைக் விபத்தில் சிக்கியதால் அந்தத் தொடரில் விளையாட முடியாமல் போனது. இருப்பினும் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.65 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
22 வயதான ராபின் மின்ஸ் ஜார்க்கண்ட்டின் கிறிஸ் கெயில் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சிகே நாயுடு டிராபியில் ஹரியாணாவுக்கு எதிரான போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் 80 பந்துகளில் 77 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். மேலும், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், ஜார்க்கண்ட் விக்கெட் கீப்பர்களான தோனி, இஷான் கிஷன் வரிசையில் அவரும் மிகப்பெரிய நட்சத்திரமாக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.