
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சாதனையை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் இந்திய ரவிச்சந்திரன் அஸ்வின் சமன் செய்துள்ளார்.
இந்தியா-வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று நிறைவடைந்தது. இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட போதிலும், அதிரடி காட்டிய இந்திய அணியினர் இரண்டு நாள்களில் ஆட்டத்தின் போக்கை மாற்றி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 107* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா, அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 72 ரன்களும், கேஎல் ராகுல் 68 ரன்களும், கோலி 47 ரன்களும், கில் 39 ரன்களும், கேப்டன் ரோகித் 23 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது.
வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்திய அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் விளாசிய இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்ததுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் தொடர் நாயகன் விருது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதின் மூலம் அஸ்வின் இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் சாதனை சமன் செய்துள்ளார்.
முத்தையா முரளிதரன் இதுவரை 11 போட்டிகளில் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இருப்பினும் இந்திய சார்பில் அதிக விருதுகளை வென்றவர்களின் பட்டியலிலும் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தவிர்த்து இதுவரை யாரும் 5 முறைக்கு மேல் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் அதிக தொடர்நாயகன் விருது வென்றவர்கள்
ரவிச்சந்திரன் அஸ்வின் -11
முத்தையா முரளிதரன் -11
ஜாக்குவஸ் காலிஸ் -9
சர் ரிச்சர்ட் ஹர்லி -8
இம்ரான் கான் -8
ஷேன் வார்னே -8
இந்திய அணிக்காக அதிக தொடர்நாயகன் விருது வென்றவர்கள்
ரவிச்சந்திரன் அஸ்வின் -11
சச்சின் டெண்டுல்கர் -5
ஷேவாக் -5
ராகுல் டிராவிட் -4
ஹர்பஜன் சிங்-4
கபில்தேவ் -4
அனில் கும்ப்ளே -4
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.