
முதல்தரப் போட்டிகளில் அதிவேக இரட்டைச்சதம் அடித்து நியூசிலாந்து வீரர் சாட் போவ்ஸ் சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்தில் நடைபெற்ற முதல்தரப் போட்டியில் 103 பந்துகளில் இரட்டைச்சதம் விளாசி, தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீசன், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சாதனைகளை முறியடித்தார் சாட் போவ்ஸ்.
தென்னாப்பிரிக்காவில் பிறந்த நியூசிலாந்து வீரரான சாட் போவ்ஸ் காண்டர்பெரி அணிக்காக விளையாடிவருகிறார். அவர் ஒடாகா அணிக்கு எதிரான 50 ஓவர் போட்டியில் அதிவேகமாக இரட்டைச்சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
110 பந்துகளில் 205 ரன்கள் விளாசிய சாட் போவ்ஸ் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதற்கு முன்னதாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீசன், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் இருவரும் 114 பந்துகளில் இரட்டைச்சதம் விளாசியிருந்ததே சாதனையாக இருந்தது.
2021 ஆம் ஆண்டு மார்ஷ் கோப்பைக்கான போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக விளையாடி டிராவிஸ் ஹெட் குயின்ஸ்லாந்துக்கு எதிராக 230 ரன்களும், 2022 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே கோப்பையில் அருணாசலப் பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் ஜெகதீசன் 227 ரன்களும் குவித்தனர்.
இலங்கைக்கு எதிரான தொடருக்கு நியூசிலாந்து அணியில் இடம்பெறாத சாட் போவ்ஸ், 26 பந்துகளில் அரைசதத்தையும் 53 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார்.
இதற்கு முன் 49 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லரில் சாதனையை அவரால் முறியடிக்க முடியவில்லை. தனது 100-வது முதல்தரப் போட்டியில் விளையாடிய சாட் போவ்ஸ் தன் இன்னிங்ஸில் 27 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் விளாசினார்.
காண்டர்பெரி அணி 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 343 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஒடாகா அணி 103 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் காண்டர்பெரி அணி 240 ரன்கள் வித்தியாத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.
32 வயதான சாட் போவ்ஸ் தென்னாப்பிரிக்காவின் பெனோனியில் பிறந்தவர். சாட் போவ்ஸின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக 126 ரன்கள் எடுத்திருந்தார். இவர் நியூசிலாந்திற்காக சில ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.