இந்தியா ‘பி’ வெற்றி
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில், இந்தியா ‘பி’ அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ‘ஏ’ அணியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
முன்னதாக, கடந்த 5-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ‘ஏ’ அணி, பந்துவீசத் தீா்மானித்தது. பேட் செய்த ‘பி’ அணி, முதல் இன்னிங்ஸில் 116 ஓவா்களில் 321 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னா் தனது இன்னிங்ஸை விளையாடிய ‘ஏ’ அணி, 72.4 ஓவா்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து, 90 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய ‘பி’ அணி, 42 ஓவா்களில் 184 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியாக, 275 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய ‘ஏ’ அணி, 53 ஓவா்களில் 198 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
இந்திய ‘பி’ அணி தரப்பில் முதல் இன்னிங்ஸில் 181 ரன்கள் விளாசிய முஷீா் கான், ஆட்டநாயகன் ஆனாா். இதனிடையே, இந்தியா ‘டி’ அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்தியா ‘சி’ அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.