டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரரான கே.எல்.ராகுலுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
கே.எல்.ராகுல்
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடைபெற்ற போட்டியில் சதம் அடித்திருந்தார். அதன் பின், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ராகுல் 86 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால், இந்த இரண்டு சிறப்பான ஆட்டங்களுக்கு முன்பாக விளையாடிய 12 இன்னிங்ஸ்களில் கே.எல்.ராகுல் ஒரு அரைசதம் மட்டுமே எடுத்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு காயம் காரணமாக அவர் அணியில் விளையாடவில்லை.
ரோஹித் சர்மா நம்பிக்கை
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம், டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இணைந்துள்ள கே.எல்.ராகுலுக்கு அதிக அளவிலான வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என அவருக்கு ஆதரவாக கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது: கே.எல்.ராகுல் எப்படிப்பட்ட சிறந்த வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய அணியின் தரப்பிலிருந்து அவர் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம். அவருடைய சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர உதவிபுரிய நாங்கள் விரும்புகிறோம். அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர்வது எங்களது கடமை.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் சதம் அடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 80 ரன்கள் குவித்தார். அதன் பின் அவருக்கு காயம் ஏற்பட்டது. துரதிருஷ்டவசமாக, அவரால் அதன் பின் நடைபெற்ற போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஹைதராபாதில் எந்த மாதிரியான ஃபார்மில் விட்டுச் சென்றாரோ, அதே ஃபார்மில் அவர் வங்கதேசத்து எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என நம்புகிறேன்.
வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்
சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் வேகப் பந்துவீச்சாளர்கள் என இருவருக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடும் திறன் கொண்டவர் கே.எல்.ராகுல். அதனால், அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்க முடியும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். தற்போது, அவருக்கு வாய்ப்புகளும் இருக்கின்றன. தொடர்ச்சியாக அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 19) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.