பும்ராவிடம் பேச கான்ஸ்டாஸுக்கு உரிமையில்லை: கௌதம் கம்பீர்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிடம் பேச சாம் கான்ஸ்டாஸுக்கு உரிமையில்லை என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
பும்ராவிடம் பேச கான்ஸ்டாஸுக்கு உரிமையில்லை: கௌதம் கம்பீர்
படம் | AP
Published on
Updated on
1 min read

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிடம் பேச சாம் கான்ஸ்டாஸுக்கு உரிமையில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் இடையே சிறிய மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டோனால்டும் பேசியிருந்தார்.

கான்ஸ்டாஸ் பேச உரிமையில்லை

சிட்னி டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பிறகு பும்ரா - கான்ஸ்டாஸ் இடையேயான மோதல் தொடர்பாக பேசிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், பும்ராவிடம் பேச கான்ஸ்டாஸுக்கு உரிமையில்லை எனத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கௌதம் கம்பீர்
கௌதம் கம்பீர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடினமான விளையாட்டினை கடினமான வீரர்கள் விளையாடுகிறார்கள். உங்களால் எல்லா நேரங்களிலும் மென்மையாக இருக்க முடியாது. இந்த விஷயத்தில் எதுவும் யாரையும் அச்சுறுத்துவது போன்று இருப்பதாக நினைக்கவில்லை. உஸ்மான் கவாஜா ஆடுகளத்தில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கும்போது, கான்ஸ்டாஸ் பும்ராவிடம் பேசுவதற்கு எந்த ஒரு உரிமையும் இல்லை. பும்ராவிடம் பேச வேண்டியது நடுவர்களின் வேலை, கான்ஸ்டாஸின் வேலையல்ல.

டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஒவ்வொரு நாளும் தங்களை எவ்வாறு மேம்படுத்திக் கொள்கிறோம் என்பதை பொருத்தே அமையும். சில நேரங்களில் உங்களால் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாட முடியாது. டெஸ்ட் போட்டிகளுக்கான மரியாதையை ஒருவர் கொடுக்க வேண்டும். கான்ஸ்டாஸ் அவரது அனுபவத்திலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார் என நம்புகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.