உள்ளூர் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட வேண்டும்; பயிற்சியாளர் கருத்து!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என அவரது குழந்தைப் பருவ பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா
ரோஹித் சர்மாபடம் | AP
Published on
Updated on
1 min read

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என அவரது குழந்தைப் பருவ பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ளார்.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை முழுமையாக இழந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. இருப்பினும், இறுதியில் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தொடரை இழந்ததுடன் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் கனவும் தகர்ந்தது. இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக, மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், முன்னாள் வீரர்கள் பலரும் மூத்த வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கு தயாரவதற்கு ரோஹித் சர்மா உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என அவரது குழந்தைப் பருவ பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மாவுக்கு இரண்டு இலக்குகள் மட்டுமே இருந்ததாக நினைக்கிறேன். முதலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெல்ல வேண்டும். இரண்டாவது, இந்திய அணிக்கு இரண்டாவது முறையாக 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றுக் கொடுப்பது. டி20 உலகக் கோப்பை முடிவடைந்தவுடன் அவர் அனைத்து வடிவிலான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர் ஒருவர் மட்டுமா ரன்கள் குவிக்கத் தடுமாறுகிறார். மற்ற வீரர்களும் ரன்கள் எடுக்கத் தடுமாறுகிறார்கள். டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராவதற்கு ரோஹித் சர்மா, ஒன்று அல்லது இரண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்.

டி20 கிரிக்கெட்டின் தாக்கத்தால் பேட்ஸ்மேன்களின் மனநிலை மாறிவிட்டது. ரோஹித் சர்மா மிகச் சிறந்த வீரர். இங்கிலாந்துக்கு எதிராக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தார். இந்திய அணி வெற்றி பெற்றால், ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் என்கிறோம். ஆனால், தோல்வியடைந்தால் ரோஹித் சர்மாவுக்கு அணியைக் கேப்டனாக வழிநடத்தத் தெரியவில்லை என்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.