
இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா விரைவில் ஓய்வை அறிவிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா 5 போட்டிகளிலும் விளையாடமாட்டார் எனவும், மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனவும் இந்திய அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையை குறைப்பதற்காகவே அவர் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதல் போட்டியில் விளையாடிய ஜஸ்பிரித் பும்ரா, இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. அதன் பின், லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் விளையாடினார். லார்ட்ஸில் இந்திய அணி தோல்வியடைந்ததால், மான்செஸ்டர் டெஸ்ட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலுக்கு இந்திய அணி தள்ளப்பட்டது.
மிக முக்கியமான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும், அவர் விளையாடுவதை போட்டிக்கு முந்தைய நாளில் சிராஜ் உறுதி செய்தார். ஆனால், மான்செஸ்டரில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ராவின் பந்துவீச்சு அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதாக இல்லை. 33 ஓவர்கள் வீசிய அவர், இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.
உடலுக்கு எதிரான போரில் பும்ரா தோற்றுவிட்டார்
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடி வரும் நிலையில், உடலுக்கு எதிரான போரில் பும்ரா தோற்றுவிட்டதாகவும், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் வரிசையில் பும்ராவும் விரைவில் ஓய்வை அறிவிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட விடியோவில் பேசியிருப்பதாவது: இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் என நினைக்கிறேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். தற்போது, ஜஸ்பிரித் பும்ரா ஓய்வு முடிவை எடுக்கும் நேரம் வந்துவிட்டதாகத் தெரிகிறது.
ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் இந்திய அணி விளையாடும் டெஸ்ட் போட்டிகளைப் பார்க்க ரசிகர்கள் பழகிக் கொள்ள வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை பும்ராவே பெரிதாக விரும்புவது போன்று தெரியவில்லை. அவருடைய உடலுக்கு எதிரான போராட்டத்தில் பும்ரா தோற்றுவிட்டார். அணிக்காக நன்றாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது. ஆனால், அவருடைய உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இந்த மாதிரியான சூழலில் ஒருவரால் என்ன செய்ய முடியும் எனப் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.