ஆஸி. ஆதிக்கம்..! சொந்த மண்ணில் மே.இ.தீவுகள் அணிக்கு தொடரும் சோகம்..!

சொந்த மண்ணில் டி20 தொடரை முழுமையாக இழந்த மேற்கிந்திய தீவுகள் அணியைப் பற்றி...
தொடரை வென்ற மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியினர்.
தொடரை வென்ற மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியினர்.
Published on
Updated on
2 min read

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஏற்கனவே நடைபெற்ற டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக வென்ற நிலையில், டி20 தொடரிலும் 4-0 என்ற கணக்கில் வென்று முன்னிலையில் இருந்தது.

இந்த நிலையில், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்போடு மேற்கிந்திய தீவுகள் அணி 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இவ்விரு அணிகள் மோதிய போட்டி செயிண்ட் கிட்ஸ் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ், மேற்கிந்தியத் தீவுகள் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஹெட்மையர் 52 ரன்களும் (3 பவுண்டரி, 3 சிக்ஸர்), ரூதர்போர்டு 35 ரன்களும், ஹோல்டர் 20 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலிய அணித் தரப்பில் துவார்ஷியஸ் 3 விக்கெட்டுகளும், நாதன் எல்லீஸ் 2 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல், ஸாம்பா, அப்பார்ட், ஆரோன் ஹார்டி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர், 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஓவன் 37 ரன்களும் (3 பவுண்டரி, 3 சிக்ஸர்), கிரீன் 32 ரன்களும், டிம் டேவிட் 30 ரன்களும், ஆரோன் ஹார்டி 28 ரன்களும், கேப்டன் மார்ஷ் 14 ரன்களும் எடுத்தனர்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணித் தரப்பில் அக்கீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளும், அல்ஜாரி ஜோசப், ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

3 விக்கெட்டுகள் வீழ்த்திய பென் துவார்ஷியஸ் ஆட்டநாயகன் விருதையும், கேமரூன் கிரீன் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

ஆறுதல் வெற்றி பெறும் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசிப் போட்டியிலும் தோல்வியைத் தழுவியது. ஏற்கனவே, டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றிருந்த ஆஸ்திரேலிய அணி, டி20 தொடரையும் 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளுக்கு எதிராக 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெல்வது இதுவே முதல் முறையாகவும், உலகளவில் இரண்டாவது முறையாகவும் பதிவானது. முன்னதாக, 2020 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

Summary

Australia''s Caribbean cricket tour ends with a perfect record in T20s

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com