
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நிதானமாக இலக்கை நெருங்கி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கும், தென்னாப்பிரிக்கா 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.
74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் முக்கிய வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்காத நிலையில், ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 136 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
நிதானமாக இலக்கை நெருங்கும் தென்னாப்பிரிக்கா
ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணிக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டான் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன் பின், அய்டன் மார்க்ரம் மற்றும் வியான் முல்டர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறிது நேரம் தாக்குப் பிடித்தது. நிதானமாக விளையாடிய வியான் முல்டர் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும்.
இதனையடுத்து, கேப்டன் டெம்பா பவுமா மற்றும் மார்க்ரம் ஜோடி சேர்ந்தனர். மார்க்ரம் களமிறங்கியது முதலே மிகவும் நேர்த்தியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார். சிறப்பாக விளையாடிய மார்க்ரம் அரைசதம் கடந்து அசத்தினார். அவருக்கு உறுதுணையாக கேப்டன் டெம்பா பவுமா நிதானமாக விளையாடி வருகிறார்.
மார்க்ரம் 80 ரன்களைக் கடந்தும், டெம்பா பவுமா 40 ரன்களைக் கடந்தும் விளையாடி வருகின்றனர். தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இன்னும் 110 ரன்களுக்கும் அதிகமாக தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.