இலங்கை - வங்கதேச முதல் டெஸ்ட் டிரா
இலங்கை-வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் மழை பாதிப்பால் டிராவில் முடிவடைந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் காலேயில் நடைபெற்றது.
முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 153.4 ஓவா்களில் 495 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஷண்டோ 148, முஷ்பிகுா் ரஹிம் 163, லிட்டன் தாஸ் 90 ரன்களை விளாசினா். இலங்கையின் அஸிதா பொ்ணான்டோ 4, ரத்னாயகே, தரின்டு தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
இலங்கை முதல் இன்னிங்ஸில் 131.2 ஓவா்களில் 485 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பதும் நிஸாங்கா 187, கமின்டு மெண்டிஸ் 87ரன்களை எடுத்தனா். பௌலிங்கில் வங்கதேசத்தின் நயீம் ஹாஸன் 5, ஹாஸன் மஹ்முத் 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி 87 ஓவா்களில் 285/6 ரன்களை எடுத்து டிக்ளோ் செய்தது. கேப்டன் ஷண்டோ 125 ரன்களுடன் இரண்டாவது சதமடித்தாா். ஷத்மன் இஸ்லாம் 76 ரன்களையும், முஷ்பிகுா் 49 ரன்களையும் சோ்த்தனா், இலங்கையின் தரின்டு 3 விக்கெட்டை வீழ்த்தினாா்.
296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால் 32 ஓவா்கள் நிறைவில் 72/4 ரன்களை எடுத்திருந்தபோது, மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடா்ந்து ஆட வாய்ப்பில்லாத நிலையில் இரு கேப்டன்களும் டிரா செய்ய ஒப்புக் கொண்டனா்.
ஏஞ்சலோ மேத்யூஸ் ஓய்வு:
இலங்கையின் முன்னணி வீரா்களில் ஒருவரான ஏஞ்சலோ மேத்யூஸ் காலே டெஸ்ட் உடன் ஓய்வு பெற்றாா். இது அவரது 119-ஆவது டெஸ்ட் ஆட்டம் ஆகும். மைதானத்தில் இருந்து விடைபெற்ற அவருக்கு சக வீர்ரகள், ரசிகா்கள் எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தனா்.