

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ரோஹித் சர்மாவைப் பின்னுக்குத் தள்ளி நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள், டி20, டெஸ்ட் தொடருக்கான தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுகிறது. அதன்படி, இந்த வாரத்துக்கான ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியல் இன்று (ஜன.14) வெளியிடப்பட்டது.
இந்தியா - நியூசிலாந்து தொடருக்கான முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி 93 ரன்கள் விளாசிய விராட் கோலி, 4 ஆண்டுகளுக்கு (சுமார் 1403 நாள்கள் கழித்து) பின் முதலிடம் பிடித்துள்ளார்.
முதல் போட்டியில் 26 ரன்களில் ஆட்டமிழந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டு இடங்கள் சரிந்து மூன்றாவது இடத்துக்கு இறங்கியுள்ளார்.
முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி 84 ரன்கள் குவித்த டேரில் மிட்செல் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடங்கிய ரன் வேட்டையைத் தொடரும் விராட் கோலி, தொடர்ச்சியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு சதங்கள் என கடந்த ஐந்து போட்டிகளில் 469 குவித்திருக்கிறார்.
2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின்னர் சுமார் 1403 நாள்கள் கழித்து தற்போது முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் விராட் கோலி. 2013 ஆம் ஆண்டில் முதல்முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்த விராட் கோலி, 825 நாள்கள் முதலிடத்தில் இருந்துள்ளார். எந்தவொரு இந்திய வீரரும் இல்லாத சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
மொத்த வீரர்களில் 10 வது இடத்தில் உள்ளார். மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் 2306 நாள்கள் முதலிடத்தில் இருந்ததே இதுவரை சாதனையாகத் தொடர்கிறது.
ஐசிசி தரவரிசைப் பட்டியல்
விராட் கோலி - 785 புள்ளிகள்
டேரில் மிட்செல் - 784 புள்ளிகள்
ரோஹித் சர்மா - 775 புள்ளிகள்
இப்ராஹிம் ஜத்ரன் - 764 புள்ளிகள்
ஷுப்மன் கில் - 725 புள்ளிகள்
பாபர் அசாம் - 722 புள்ளிகள்
ஹாரி டெக்கர் - 708 புள்ளிகள்
ஷாய் ஹோப் - 701 புள்ளிகள்
சரித் அசலங்கா - 690 புள்ளிகள்
ஷ்ரேயஸ் ஐயர் - 682 புள்ளிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.