

சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட வேண்டும் என இந்திய வீரர் யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் தங்களுக்குள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
நியூசிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடர் சஞ்சு சாம்சனுக்கு சிறப்பானதாக அமையவில்லை. முதல் நான்கு போட்டிகளிலும் பிளேயிங் லெவனில் இடம்பெற்று தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய அவர் 10, 6, 0 மற்றும் 24 ரன்கள் முறையே எடுத்தார். டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக சஞ்சு சாம்சனின் ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிப்பதாக உள்ளது.
இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாட முடியாததற்கு சஞ்சு சாம்சன் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் அழுத்தத்தைக் காரணமாக கூற முடியாது என இந்திய வீரர் யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: சஞ்சு சாம்சன் பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் மிடில் ஆர்டர் பேட்டராக களமிறங்கினார். அதன் பின், தொடக்க ஆட்டக்காரராக விளையாடினார். சர்வதேச கிரிக்கெட்டில் 10-12 ஆண்டுகள் விளையாடிய பிறகு, சரியாக விளையாட முடியாததற்கு ஒருவர் அழுத்தத்தைக் காரணமாகக் கூற முடியாது.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனுக்கு நான்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஓரிரு போட்டிகளில் சரியாக விளையாட முடியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், மூன்று அல்லது நான்கு போட்டிகளில் சரியாக விளையாடாததை ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்றாவது வீரராக களமிறங்கும் இஷான் கிஷன் நன்றாக விளையாடுகிறார் என்பது சஞ்சு சாம்சனுக்குத் தெரியும்.
தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்புக்காக இஷான் கிஷன் காத்திருக்கிறார் என்பதும் அவருக்குத் தெரியும். அதனால், சஞ்சு சாம்சன் வேறு யாரையும் குறை சொல்வதற்கில்லை. அவரையே அவர் குறைகூறிக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. கிடைத்த நான்கு வாய்ப்புகளையும் அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
டி20 உலகக் கோப்பைத் தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் நாள்கள் இருப்பதால், இந்த விஷயம் தொடர்பாக இந்திய அணி அதிகம் கவலைப்பட தேவையில்லை. நியூசிலாந்துக்கு எதிராக இன்னும் ஒரு டி20 போட்டி மீதமிருக்கிறது. முடிவு இந்திய அணி நிர்வாகத்தின் கைகளில் உள்ளது. தொடக்க ஆட்டக்காரராக சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்படத் தடுமாறுகிறார், இஷான் கிஷான் மூன்றாவது வீரராக நன்றாக விளையாடுகிறார் என அணி நிர்வாகம் நினைத்தால், நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனை சேர்க்காமல் இஷான் கிஷனை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்குவதே சரியான முடிவாக இருக்கும் என்றார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 31) திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.