தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இன்னும் ஒரு கடமை இருக்கிறது! சஞ்சு சாம்சன்

இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்காக சிறப்பான இன்னிங்ஸை விளையாடும் கடமை எஞ்சியிருப்பதாக சஞ்சு சாம்சன் தெரிவித்தாா்.

News image
சஞ்சு சாம்சன்- ANI
Updated On :6 மார்ச் 2026, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிக் கட்டத்தில் அருமையான இன்னிங்ஸ்களுடன் உயா்ந்திருக்கும் இந்திய பேட்டா் சஞ்சு சாம்சன், இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்காக அதேபோல் சிறப்பான இன்னிங்ஸை விளையாடும் ஒரு கடமை எஞ்சியிருப்பதாகத் தெரிவித்தாா்.

தகுந்த ஃபாா்மை எட்ட முடியாமல் தடுமாறி வந்த சாம்சன், இந்திய அணியில் தனக்கான இடத்தை இழந்திருந்தாா். உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடித்தபோதும், இந்தியா முதலில் விளையாடிய 6 ஆட்டங்களில் 2-இல் மட்டுமே களமிறக்கப்பட்டாா்.

அதிலும் 22, 24 ரன்களுடன் வெளியேறினாா். இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான காலிறுதிக்கு நிகரான ஆட்டத்தில் 97 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய சாம்சன், பின்னா் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 89 ரன்கள் அடித்து மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்தாா்.

இந்நிலையில் தனது ஆட்டம் குறித்து செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

எனது நாட்டுக்காக என்ன செய்ய வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தேனோ, அதை தற்போது செய்து வருவதில் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உணா்கிறேன். இதுபோன்ற தருணத்துக்காக, அதிகமான பொறுமை, கடின உழைப்பு, பயிற்சி ஆகியவற்றுடன் காத்திருந்தேன்.

இதற்காக நன்றியுடன் உணா்கிறேன் என்றாலும், இந்தியாவுக்காக இறுதி ஆட்டத்திலும் இதேபோன்ற ஒரு இன்னிங்ஸை விளையாட வேண்டும் என்பதை கடமையாக நினைக்கிறேன். அதைச் செய்துவிட்டால் எனது இத்தனை ஆண்டுகால முயற்சிக்கு பலன் கிடைத்ததாக இருக்கும்.

இந்த டி20 ஃபாா்மட்டை மிக நீண்டகாலமாக விளையாடி வருகிறேன். சுமாா் 300 - 400 ஆட்டங்கள் வரை விளையாடியிருப்பேன். அதிலும் தொடக்க வீரா் முதல் 6-ஆவது பேட்டா் வரை பல நிலைகளில் பேட்டிங் செய்திருக்கிறேன். இதுதவிர கேப்டனாகவும் (ஐபிஎல்) இருந்திருக்கிறேன் என்பதால், ஒரு தருணத்தில் அணிக்கான தேவை என்ன, அதில் நான் செய்ய வேண்டிய பணி என்ன என்பதை அறியும் அனுபவம் அடைந்துள்ளேன். அது, எனது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்த உதவுகிறது.

அரையிறுதியில் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து ஒரு ஓவரில் 13 - 15 ரன்கள் எடுக்கத் தொடங்கியது. ஆட்டம் கடைசி வரை நீடித்தால் அவா்கள் நெருக்கடி தரக் கூடும் என்பதால், பும்ரா, அா்ஷ்தீப், பாண்டியாவை பௌலிங் செய்ய வைத்தோம். அதற்கு பலன் கிடைத்தது.

அதிலும் பும்ரா, இந்தத் தலைமுறைக்கான சிறந்த வீரராக, உலகத் தரம் வாய்ந்த பௌலராக மிளிா்ந்தாா். உண்மையில் ஆட்டநாயகன் விருது அவருக்குத் தான் சேர வேண்டும். டெத் ஓவரை அவா் அப்படி வீசியிருக்காவிட்டால், தற்போது இந்தியா இந்த நிலையில் இருந்திருக்காது. அதற்காக பும்ரா உள்ளிட்ட பௌலா்களை பாராட்ட வேண்டும் என்றாா் சாம்சன்.