தனிப்பட்ட சாதனைகளை விட அணியின் வெற்றியே முக்கியம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில், 15 வயதே பூர்த்தியான வைபவ் சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை, 15 போட்டிகளில் ஆடியதன் மூலம், 680 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.
மேலும், இந்த ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை முறியடித்த இவரை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலர் பாராட்டி வருகின்றனர். வைபவ் சூர்யவன்ஷி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
இதற்கெல்லாம் காரணம் என் தந்தைதான். சிறுவயதிலிருந்தே என்னை அந்த அளவுக்குப் பயிற்சி செய்ய வைத்திருக்கிறார். ஒரு நாள் நான் பயிற்சி செய்யவில்லை என்றால்கூட, என் வாழ்க்கை சற்று மெதுவாக நகர்வது போல் உணர்கிறேன். அதனால், நான் மிக நீண்ட ஓய்வு எடுக்கத் தேவையில்லை. ஒரு நாள் ஓய்வே போதுமானது.
ஐபிஎல் நெருங்கி வந்ததாலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடிவிட்டுதான் மீண்டும் அணிக்குத் திரும்பியதாலும், நான் பயிற்சி செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன். போட்டியின் வடிவத்திலும் மாற்றம் இருந்ததால், நான் சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தினேன்.
இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நான் வீட்டிலிருந்து தங்கி விளையாடி வந்தபோது, ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கார்ட்டூன்களைப் பார்த்து மகிழ்வேன்.
இப்போதும்கூட, நான் எப்போதெல்லாம் ஓய்வையும் அமைதியையும் விரும்புகிறேனோ என் அறையில் வசதியாக அமர்ந்து கார்ட்டூன்களைப் பார்ப்பேன். இது என்னுடைய வீட்டை அதிகம் நினைவூட்டுகிறது.
சிறுவயது காலத்தில் என்னுடைய தந்தை அடிக்கடி கூறுவார். அது என்னவென்றால், ‘நீ என்னதான் நூறு, இருநூறு மற்றும் முந்நூறு என ரன்களைக் குவித்தாலும் உன்னுடைய அணி வெற்றி பெறவில்லை என்றால் அந்த ரன்களுக்கு மதிப்பில்லை. அது உன்னுடைய தனிப்பட்ட சாதனைகளுக்காக மட்டுமே இருக்கும். அதனால், அணிக்கு எந்தப் பயனும் இல்லை’
ஆகவே, நான் நூறு ரன்களுக்குப் பதிலாக 80 ரன்கள் எடுத்து, என் அணி வென்றாலும், நான் சதம் அடித்த பிறகும் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்றால், எனக்கு அந்த நூறு ரன்களை விட 80- ரன்களே அதிகம் மதிப்பு வாய்ந்தது.
என் அணி இந்தத் தொடரில் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, மேலும் நாங்கள் பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகளில் எவ்வளவு தூரம் முன்னேறுகிறோமோ, அந்த அளவுக்கு நூறு ரன்கள் எடுக்கவும், நான் முறியடிக்க விரும்பும் சாதனைகளை அடையவும் எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். எனவே, இது தனிப்பட்ட முறையில் எனக்கும் அணிக்கும் நன்மை அளிக்கிறது என்று வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
Summary
Rajasthan Royals star player Vaibhav Suryavanshi has stated that the team's victory is more important than individual achievements.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










