

அடுத்தடுத்து 3 தோல்விகளுக்குப் பிறகு சென்னைக்கு கிடைத்த 7 நாள் இடைவெளி, அணியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அணிக்கு வெற்றித் தேடித் தந்துள்ளது.
13-வது ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் பெற்ற வெற்றிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்தது. இதனால், வயதான வீரர்களைக் கொண்ட அணி, ஓய்வு பெற்ற வீரர்களைக் கொண்ட அணி, யாருமே ஃபார்மில் இல்லாத அணி என பல்வேறு விமரிசனங்களுக்கு உள்ளானது.
இந்த 3 தோல்விகளுக்குப் பிறகு சென்னைக்கு மிக முக்கியமான ஒரு வார இடைவெளி கிடைத்தது. இந்த இடைவெளி நிச்சயம் பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் பலனளித்துள்ளது.
7 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்திலும் சென்னை அணி தோல்வியடைந்தது. இருந்தாலும், முந்தைய போட்டிகளைப் போல் இருந்த பிரச்னைகள் இல்லை.
சென்னை அணிக்குத் தேவையான மாற்றங்கள் குறித்து ஏற்கெனவே குறிப்பிடப்பட்டது. ( படிக்க: நம்ம சென்னை டீமுக்கு என்னதான் ஆச்சு..?)
எதிர்பார்த்ததைப்போல் 7 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு சென்னை அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. முரளி விஜய், ருதுராஜ் கெய்க்வாட், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் நீக்கப்பட்டு காயத்திலிருந்து மீண்ட அம்பதி ராயுடு மற்றும் டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்குர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்த மாற்றங்களால் ஏற்பட்ட மாற்றம்:
தொடக்க வீரராக நல்ல நிலையிலிருந்த பாப் டு பிளெஸ்ஸி களமிறக்கப்பட்டார். இவர் தடுமாற்றமான தொடக்கத்தைத் தடுக்கலாம். 5 பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே களமிறங்கிய சென்னை அணிக்கு கூடுதலாக 1 பந்துவீச்சாளர் இருந்தார்.
இந்த மாற்றங்கள் ஹைதராபாத் அணிக்கு எதிராகவே நேர்மறையாக அமைந்தது. ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை பின்னடைவைச் சந்தித்தது பேட்டிங்கிலும், கடைசி கட்ட பந்துவீச்சிலும்தான்.
ஹைதராபாத் டாப் ஆர்டரை சரியாக விளையாட விடாமல் கட்டுப்படுத்தியது சென்னை. ஹைதராபாத்தின் பலமும் டாப் ஆர்டர்தான்.
ஆனால், கடைசி கட்ட பந்துவீச்சில் பிரச்னை ஏற்பட்டது. 15 ஓவர்களில் 100 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஹைதராபாத் அணி கடைசி 5 ஓவர்களில் 64 ரன்கள் குவித்தது. சாம் கரண் வீசிய 17-வது ஓவரில் மட்டும் ஹைதராபாத்துக்கு 22 ரன்கள் கிடைத்தன.
பேட்டிங்கில் சென்னை அணிக்கு மீண்டும் சரியான தொடக்கம் அமையவில்லை. இதனால், பின்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு மீண்டும் நெருக்கடி அதிகரித்தது.
பஞ்சாப்புக்கு எதிரான வெற்றி:
நேற்றைய ஆட்டம் துபையில் நடைபெற்றது. நடப்பு சீசனில் துபையில் 2-வது பேட்டிங் செய்த அணி ஒருமுறைகூட வெற்றி பெறவில்லை. இதனால், டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ராகுல் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
பஞ்சாப்புக்கு வழக்கம்போல் ராகுல் மற்றும் அகர்வால் நல்ல தொடக்கம் தந்தனர். பவர் பிளேவில் விக்கெட்டுகளை வீழ்த்தும் சஹாரால் நேற்றைய ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இரண்டு பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஃபார்மில் உள்ளனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், பெரிதளவில் துரிதமாக ரன் சேர்க்க அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா அவரது முதல் ஓவரின் முதல் பந்திலேயே அகர்வாலை ஆட்டமிழக்கச் செய்தார். ஆனால், அடுத்து களமிறங்கிய மந்தீப் சிங் சாவ்லாவின் அடுத்த ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்தார். எனினும், அதற்கு அடுத்த ஓவரிலேயே ஜடேஜாவிடம் ஆட்டமிழந்தார் மந்தீப் சிங்.
இதன்பிறகு நிகோலஸ் பூரன் களமிறங்கினர். 2 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தாலும் அதன்பிறகு சாவ்லாவிடம் பந்தைக் கொடுக்கவில்லை தோனி. அவருடைய பணி விக்கெட்டை வீழ்த்துவது. அதற்கேற்ப, முதல் விக்கெட் பாட்னர்ஷிப்பை வீழ்த்தினார்.
6-வது பந்துவீச்சாளர் இருந்ததால், இந்த முடிவு எடுக்க முடிந்தது. இல்லையெனில், பூரன் மற்றும் நல்ல நிலையில் உள்ள ராகுல் இவரது ஓவரைப் பயன்படுத்தியிருக்கக் கூடும்.
விக்கெட் வீழ்ச்சி நேரம்:
அகர்வால் மட்டுமின்றி சென்னை வீழ்த்திய விக்கெட்டுகள் அனைத்தும் சரியான நேரத்தில் வீழ்த்தப்பட்டன. பவர்பிளே வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்ட ராகுல், அகர்வால் பெரிய ஸ்கோரை நோக்கி நகரத் தொடங்கினர். இந்த நிலையில், அகர்வால் ஆட்டமிழந்தார்.
ஒரு முனையில் விக்கெட்டைப் பார்த்துக்கொண்டு மறுமுனையில் உள்ள வீரரை ரன் குவிப்பில் ஈடுபடச் செய்யும் வியூகத்துடன் ராகுல் விளையாடி வந்தார். இதேபோல், அகர்வாலுக்குப் பிறகு மந்தீப் சிங்கும் 2 சிக்ஸர்கள் அடித்து பெரிய ஸ்கோரை நோக்கி நகரத் தொடங்கினார். இந்த நிலையில், ஜடேஜா சுழலில் ஆட்டமிழந்தார் மந்தீப்.
அடுத்து பூரன் மற்றும் ராகுல் பாட்னர்ஷிப் அமைத்தனர். பூரன் இமாலய சிக்ஸர்கள் அடித்து ரன் குவிக்க, ஒரு கட்டத்தில் ராகுலும் அதிரடிக்கு மாறினார். இந்த நேரத்தில் பூரன் மற்றும் ராகுலை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார் ஷர்துல் தாக்குர்.
இந்த 2 விக்கெட்டுகளை வீழ்த்தவில்லையெனில், சென்னை 190 ரன்களுக்கு மேலான இலக்கை நோக்கி களமிறங்க நேரிட்டிருக்கும்.
ஒவ்வொரு பேட்ஸ்மேனும் சரியான தொடக்கம் அமைத்து, அதைப் பெரிய இன்னிங்ஸாக மாற்றும் தருணத்தில் சென்னை பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இதனால், கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் அணி 48 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதேசமயம், கடைசி 5 ஓவர்களில் மைதானத்தின் அளவைப் பயன்படுத்தி சென்னை அணி சரியான யார்க்கர் பந்துகளை வீசினர். இது ஆட்டத்தில் மிகப் பெரிய தாக்கத்தையும், பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
பேட்டிங்:
அணியில் மாற்றம் கிடைத்தவுடன் பேட்டிங்கில் தேவைப்பட்டது நேர்மறையான நம்பிக்கை எண்ணம் தான். வாட்சன் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை சரியாக அடித்து படிப்படியாக நேர்மறை எண்ணத்தை உயர்த்தினார். 2-வது ஓவரில் ஷமி சிறப்பாக வீசினாலும், ஒரு பந்து வைடாக வீச பவுண்டரியும் கிடைத்தது. இதனால், அந்த ஓவரில் ரன் ரேட் குறித்த அழுத்தம் ஏற்படவில்லை. இதையடுத்து, ஓவருக்கு ஒரு பவுண்டரி அடித்து சேஸிங்குக்கு சரியான தொடக்கத்தை அமைத்து வந்தனர்.
இந்த நிலையில், பவர் பிளேவின் கடைசி ஓவரை கிறிஸ் ஜோர்டன் வீசினார். இந்த ஓவரில் டு பிளெஸ்ஸி 4 பவுண்டரிகள் அடித்து மிரட்டினார். இதனால், பவர் பிளே முடிவில் சென்னை அணி 60 ரன்கள் எடுத்தது. குறிப்பாக விக்கெட் இழப்பின்றி. சென்னை பேட்டிங்கில் இந்த ஓவர், கியர் மாற்றும் ஓவராக அமைந்தது.
இந்த ஓவருக்குப் பிறகு இருவரது உடல்மொழியும் முற்றிலுமாக மாறியது. நேர்மறை எண்ணம் அதிகரித்தது அவர்களது ஷாட்களிலும், உடல்மொழியிலும் தென்பட்டது. இதனால், வாட்சன் மற்றும் டு பிளெஸ்ஸியை பஞ்சாப் அணியால் கடைசி வரை கட்டுப்படுத்த முடியவில்லை.
முந்தைய ஆட்டங்களின்போது பேட்டிங்கில் இந்த நேர்மறையான எண்ணம் பெரிதளவில் தேவைப்பட்டது. அது இல்லாததால், பேட்டிங்கில் சரிவு ஏற்பட்டன. மும்பையுடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றபோதும் இந்த நேர்மறையான எண்ணத்தை தனது பேட்டிங் உடல்மொழி மூலம் ராயுடு அளித்தார்.
அணியில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றங்கள் வாட்சன் கூறியதுபோல் சென்னைக்கு நேர்த்தியான ஒரு ஆட்டமாக அமைந்துள்ளது.
பீல்டிங்கில் மட்டும் லேசான சிக்கல் உள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் அது அனைத்து அணியிலும் உள்ள பிரச்னை தான். எனினும், வரும் ஆட்டங்களில் இது சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டம் என்பதால் சென்னை அணிக்கு இது நேர்த்தியான ஆட்டம்.
இந்த ஆட்டம் மூலம், வெற்றியைத் தாண்டி பேட்டிங் செய்த விதமும், பந்துவீசிய விதமும் சென்னை அணியில் மிகப் பெரிய நேர்மறை உணர்வை விதைத்திருக்கும். நேற்றைய ஆட்டத்தில் நடுவரிசை பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையெனிலும், இது நிச்சயம் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதை சென்னை அணி அடுத்தடுத்த ஆட்டங்களில் எவ்வாறு கொண்டு செல்லவுள்ளது என்பதைப் பொறுத்தே வரவிருக்கும் ஆட்டங்களின் வெற்றி தோல்விகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.