காட்ரெல் நீக்கப்படுவாரா? 30 ரன் ஓவர் வரலாறு என்ன சொல்கிறது?

​நடப்பு ஐபிஎல்-இல் ஒரு ஓவரில் 30 ரன்களைக் கொடுத்த 2 பந்துவீச்சாளர்கள், அடுத்தடுத்த ஆட்டங்களிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த வரிசையில் நேற்று ஒரே ஓவரில் 30 ரன்களைக் கொடுத்த காட்ரெல்லும் இடம்பெறுகிறாரா?
காட்ரெல் நீக்கப்படுவாரா? 30 ரன் ஓவர் வரலாறு என்ன சொல்கிறது?
Updated on
3 min read


நடப்பு ஐபிஎல் சீசனில் ஒரு ஓவரில் 30 ரன்களை விட்டுக்கொடுத்த 2 பந்துவீச்சாளர்கள், அடுத்தடுத்த ஆட்டங்களிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த வரிசையில் நேற்று 30 ரன்களை வாரி வழங்கிய காட்ரெலும் இடம்பெறுவாரா என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டத்தில் தெவாதியாவின் மிரட்டல் ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 224 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டி ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்தது.

பஞ்சாப் அணியில் சதமடித்த அகர்வால் மற்றும் 42 பந்துகளில் 7 சிக்ஸர்கள் உள்பட 85 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சனைக் காட்டிலும் தற்போது வரை அதிகம் பேசப்பட்டு வருவது ராஜஸ்தானின் ராகுல் தெவாதியா.

காரணம், காட்ரெல் வீசிய 18-வது ஓவரில் தெவாதியா 5 சிக்ஸர்கள் அடித்தார். இந்த 5 சிக்ஸர்களுக்காக மட்டும் அவர் பாராட்டப்படவில்லை. முன்கூட்டியே களமிறங்கி சரியான டைமிங் கிடைக்காமல் திணறிய அவர், ஒரு கட்டத்தில் ராஜஸ்தானின் தோல்விக்குக் காரணமாகக் கூடிய நிலையில் இருந்தார். 224 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி நல்ல ரன் ரேட்டில் விளையாடி வரும்போது, 19 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 8 ரன்கள் எடுத்திருந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட மோசமான நிலையில்தான் தெவாதியாவும் இருந்தார்.

அதன்பிறகு, காட்ரெல் வீசிய ஓவர்தான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் 30 ரன்கள் கிடைத்தன.

ஒரு ஓவரில் 30 ரன்கள் என்றால், நிச்சயம் அதுதான் ஆட்டத்தை மாற்றக்கூடிய ஓவராக இருக்க முடியும். அப்படித்தான் இருந்தது. ஆனால், இது முதன்முறையல்ல. அதாவது நடப்பு ஐபிஎல் சீசனிலேயே இது முதன்முறையல்ல.

ஒரு ஓவரில் 30 ரன்கள் அடிப்பது இந்த சீசனில் ஏதோ பவுண்டரி, சிக்ஸர் அடிப்பது போன்று தோற்றமளிக்கிறது. ஒரு ஓவரில் 30 ரன்கள் என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால், இந்த சீசனில் மட்டும் ஒன்றுக்கு மூன்று முறை ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்த சம்பவம் அரங்கேறியுள்ளன.

தில்லி கேபிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப், துபை:

இந்த சீசனின் 2-வது ஆட்டத்தில் தில்லி, பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் பந்துவீச்சில் திணறிய தில்லி அணி 17 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், 130 ரன்களைக் கடந்தால், சவாலானதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், 18, 19-வது ஓவர்களில் ஸ்டாய்னிஸ் அதிரடி காட்ட 27 ரன்கள் கிடைத்தன. 

இந்த நிலையில், கிறிஸ் ஜோர்டன் 20-வது ஓவரை வீசினார். ஸ்டிரைக்கில் ஸ்டாய்னிஸ். முதல் பந்து சிக்ஸர், 2-வது வைட், அடுத்து ஹாட்ரிக் பவுண்டரி, 5-வது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் என ஸ்டாய்னிஸ் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுபோதாது என்று கடைசி பந்தை நோ-பாலாக வீச 2-வது ரன் எடுக்கும்போது ஸ்டாய்னிஸ் ரன் அவுட் ஆனார்.

இதனால், கூடுதலாக ஒரு பந்தை வீச நேரிட்டது. கடைசி பந்தில் நார்ஜே 3 ரன்கள் எடுக்க அந்த ஒரு ஓவரில் மட்டும் 30 ரன்கள் கிடைத்தன. 130 ரன்களைக் கடக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 157 ரன்களை எட்டியது தில்லி. கடைசியில் தில்லியே சூப்பர் ஓவர் வரை சென்று ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 

இந்த ஆட்டத்துக்குப் பிறகு, ஜோர்டன் அணியிலிருந்து நீக்கப்பட்டார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ், சார்ஜா:

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் அடித்தால் சிக்ஸர் மட்டுமே அடிப்பேன் என்ற வகையில் விளையாடி வந்தார். இதனால், 220 ரன்கள் வரை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், என்கிடி பந்தில் சாம்சன் ஆட்டமிழக்க சென்னை அணி ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 200 ரன்களுக்குள் ராஜஸ்தானைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று சென்னை அணி நினைத்திருக்கும்.

19 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 186 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை என்கிடி வீசினார். களத்தில் ஆர்ச்சர் இருந்தார். முதல் 2 பந்துகளை ஆர்ச்சர் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். ஆனால், என்கிடி அடுத்த 2 பந்துகளை நோபாலாக வீசினார். ஆனால், அந்த 2 பந்துகளும் சிக்ஸருக்குப் பறக்க 2 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் 26 ரன்கள் கிடைத்தன. அடுத்த பந்து வைடாக வீசப்பட 2 பந்துகளில் 27 ரன்கள் கிடைத்தன. இதன்பிறகு, சுதாரித்துக்கொண்ட என்கிடி அடுத்த 4 பந்துகளில் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

200 ரன்களுக்குள் கட்டுப்படுத்திவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் 216 ரன்கள் குவித்தது. விளைவு சென்னை அணியால் 200 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஒருவேளை கடைசி ஓவரில் 30 ரன்கள் கொடுக்காமல், 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தால் சென்னை வெற்றி பெற்றிருக்கலாம்.

இந்த ஆட்டத்துக்குப் பிறகு, என்கிடி அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த வரிசையில் நேற்று தெவாதியா ஒரே ஓவரில் 30 ரன்கள் அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியிருக்கிறார். ஒரே ஓவரில் 30 ரன்கள் கொடுத்த காட்ரெல் அடுத்த ஆட்டத்தில் சேர்க்கப்படுவாரா..?

காலம்தான் பதில் சொல்லும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com