ஆர்சிபிக்கு ஆபத்தா, கூப்பிடு சஹாலை!

கடைசி மூன்று வெற்றிகளிலும் சஹாலின் பங்கு அதிகமாக உள்ளது.
ஆர்சிபிக்கு ஆபத்தா, கூப்பிடு சஹாலை!


ஆர்சிபி அணி ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு மீண்டும் தகுதி பெற்றுள்ளது. ஆனால் இதை அவ்வளவு எளிதாக அடையவில்லை.

ஐபிஎல் 2021 போட்டியின் நடுவில் திடீரென தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் தோற்றது ஆர்சிபி. 

9 ஆட்டங்களின் முடிவில் 5 வெற்றிகளைப் பெற்றிருந்த ஆர்சிபி, இன்னும் சில ஆட்டங்களில் தோற்றால் பிளேஆஃப்புக்கு முன்னேறுவது கடினம் என்கிற நிலைமையில் இருந்தது. 

சிஎஸ்கேவுக்கு எதிராகத் தோற்ற ஆர்சிபி அதற்குப் பிறகு அபாரமாக விளையாடி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக பிளேஆஃப்புக்குத் தகுதியடைந்துள்ளது. அதுவும் லீக் சுற்றில் இன்னும் 2 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் கால்குலேட்டர் உதவியின்றி இலக்கை எட்டியுள்ளது.

இதற்கு முக்கியக் காரணமாக மேக்ஸ்வெல், ஹர்ஷல் படேல் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆர்சிபியின் சிறப்பான ஆட்டத்துக்கு இன்னொருவரையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

சுழற்பந்து வீச்சாளர் சஹால்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வாகாத நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அற்புதமாகப் பந்துவீசி வருகிறார் சஹால். 5 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். ஆர்சிபியின் கடைசி மூன்று வெற்றிகளிலும் சஹாலின் பங்கு அதிகமாக உள்ளது. நடு ஓவர்களில் எதிரணிக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளார் சஹால். 

* மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 165/6 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த மும்பைக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. 56 ரன்கள் எடுத்த நிலையில் 7-வது ஓவர் வீச வந்த சஹால், டி காக்கை வீழ்த்தி ஒரு வழியை ஏற்படுத்தினார். 111 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோற்றது மும்பை. சஹால் 11 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

* அடுத்ததாக ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 91/1 என எடுத்து ஒரு பெரிய ஸ்கோருக்குக் காத்திருந்தது. ஆனால் 18 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை சஹால் எடுத்ததால் அந்த அணி 149/9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆர்சிபி.

* பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆர்சிபி 164/7 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த பஞ்சாப், 49/0 என இருந்தது. அந்த ஆட்டத்தில் சஹால் 3/29 என அற்புதமாகப் பந்துவீசி ஆர்சிபி வெற்றி பெற மீண்டும் உதவினார். 

ஆர்சிபி அணி ஐபிஎல் போட்டியில் சாதிக்க வேண்டுமென்றால் அதற்கு சஹால் பெரிதளவில் பங்களிக்க வேண்டும். அதற்கான நல்ல தருணங்கள் காத்திருப்பதாகவே தோன்றுகிறது. 

சமீபகாலமாக இந்திய அணியில் விளையாடக்கூடிய வாய்ப்புகள் மங்கினாலும் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காகத் தனது முயற்சியை அவர் கைவிட்டதே இல்லை. இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். அவருடைய திறமைக்கும் பங்களிப்புக்கும் கை மேல் நல்ல பலன் கிடைக்கும் என்றுதான் தெரிகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com