ஜடேஜா இயல்பான கேப்டன் இல்லை: ரவி சாஸ்திரி

சிஎஸ்கே அணியின் கேப்டனாகி பிறகு விலகியது பற்றி இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜடேஜா - தோனி
ஜடேஜா - தோனி

ஆல்ரவுண்டர் ஜடேஜா, சிஎஸ்கே அணியின் கேப்டனாகி பிறகு விலகியது பற்றி இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டி தொடங்குவதற்கு முன்பு சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகினார். இதையடுத்து ஜடேஜா, சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றதால் திடீரென கேப்டன் பதவியிலிருந்து அவர் விலகினார். இந்த நெருக்கடியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மீண்டும் தேர்வானார். அதற்குப் பிறகு சிஎஸ்கே விளையாடிய 3 ஆட்டங்களில் 2-ல் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் கிரிக்இன்ஃபோவுக்கு அளித்த பேட்டியில் ஜடேஜா பற்றி இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியதாவது:

ஜடேஜா இயல்பான கேப்டன் இல்லை. இதற்கு முன்பு உள்ளூர் போட்டிகள் உள்பட எவ்வித அளவிலும் அவர் கேப்டனாகப் பதவி வகித்ததில்லை. எனவே அவருக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டது கூடுதல் சுமையாகவே இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். ஜடேஜாவின் தலைமைப் பண்பு குறித்து மதிப்பிட மக்கள் விரும்புவார்கள். ஆனால் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டது அவருடைய தவறல்ல. அவர் எப்போதும் கேப்டனாக இருந்ததில்லை. தண்ணீருக்கு வெளியே மீன் இருந்தது போலவே அப்பதவிக்குத் தொடர்பில்லாமல் இருந்தார். அதைவிடவும் ஒரு வீரராக அவரால் சிறப்பாகச் செயலாற்ற முடியும். சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். எனவே அவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவேண்டும். அவரை கேப்டனாக்கியதால் சிஎஸ்கே சில ஆட்டங்களை இழந்தது. இப்போது அவர்கள் விளையாடியதைப் போல முன்பே விளையாடியிருந்தால் புள்ளிகள் பட்டியலில் முன்னணியில் இருந்திருப்பார்கள் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com