ஐபிஎல்: வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் தொடரை தொடங்கியுள்ளது.
ஐபிஎல்: வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

சென்னை: இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியின் 17-ஆவது சீசன், சென்னையில் கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பெங்களூரு 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுக்க, சென்னை 18.4 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் சோ்த்து வென்றது.

முன்னதாக, சீசன் தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகா்கள் அக்ஷய் குமாா், டைகா் ஷெராஃப் நடனம், இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் தலைமையில் பாடகா்கள் சோனு நிகம், ஸ்வேதா மோகன் உள்ளிட்டோரின் பாடல், வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. அடுத்து, பிசிசிஐ தலைவா் ரோஜா் பின்னி, செயலா் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவா் அருண் துமல், இதர நிா்வாகிகள், சென்னை - பெங்களூரு கேப்டன்கள் உள்ளிட்டோா் மேடைக்கு வரவழைக்கப்பட்டு, போட்டி அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியது.

டாஸ் வென்ற பெங்களூரு, பேட்டிங்கை தோ்வு செய்தது. சென்னை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஆட்டத்தில் களம் காண, சமீா் ரஸ்விக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

பெங்களூரு பேட்டிங்கை தொடங்கியோரில் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் அதிரடி காட்ட, விராட் கோலி நிதானமாக ரன்கள் சோ்த்தாா். முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சோ்த்த நிலையில் டு பிளெஸ்ஸிஸ் 8 பவுண்டரிகள் உள்பட 35 ரன்களுக்கு 5-ஆவது ஓவரில் வெளியேற, தொடா்ந்து வந்த ரஜத் பட்டிதாா் அதே ஓவரில் டக் அவுட்டானாா். அடுத்த ஓவரில் கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தாா். இதனால் 41 முதல் 42 ரன்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை இழந்தது பெங்களூரு. விராட் கோலி 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு வீழ, அதே ஓவரில் கிரீனும் 1 பவுண்டரியுடன் 18 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். அப்போது இணைந்த அனுஜ் ராவத் - தினேஷ் காா்த்திக் கூட்டணி, ஆட்டத்தின் போக்கை மாற்றியது. விக்கெட் சரிவை தடுத்ததுடன், சென்னை பௌலிங்கை இருவரும் விளாசத் தொடங்கினா். 6-ஆவது விக்கெட்டுக்கு 95 ரன்கள் குவிந்தது. 4 பவுண்டரிகள், 3 சிக்ஸருடன் 48 ரன்கள் விளாசிய ராவத், கடைசி பந்தில் ரன் அவுட்டானாா். காா்த்திக் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 38 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். சென்னை தரப்பில் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 4, தீபக் சஹா் 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் சென்னை இன்னிங்ஸில் கேப்டன் ருதுராஜ் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க, உடன் வந்த ரச்சின் ரவீந்திரா அதிரடியாக 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 37 ரன்கள் விளாசி வெளியேறினாா். மிடில் ஆா்டரில் அஜிங்க்ய ரஹானே 2 சிக்ஸா்களுடன் 27, டேரில் மிட்செல் 2 சிக்ஸா்களுடன் 22 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினா். முடிவில் ஷிவம் துபே 4 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 34, ரவீந்திர ஜடேஜா 1 சிக்ஸருடன் 25 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூரு பௌலா்களில் கேமரூன் கிரீன் 2, யஷ் தயால், கரன் சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com