
சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது.
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக முதல் முறையாக சேப்பாக்கம் திடலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகள் இதுவரை சேப்பாக்கத்தில் 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 5 போட்டிகளில் சிஎஸ்கேவும், ஒரு போட்டியில் ஹைதராபாதும் வெற்றி பெற்றுள்ளது.
சிஎஸ்கேவை வீழ்த்தியது எப்படி?
பேட்டிங் வரிசைக்கு அதிக கவனம் கொடுத்தது சேப்பாக்கம் திடலில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்த உதவியதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: சவாலான ஆடுகளங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நன்றாக செயல்படவில்லை. சொந்த ஆடுகளங்களிலும், வெளியிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இந்த மாதிரியான சவாலான ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.
சேப்பாக்கம் ஆடுகளத்துக்கு ஏற்றவாறு பேட்டிங் வரிசையில் சில மாற்றங்களை செய்தோம். கிளாசனை முன்கூட்டியே களமிறக்கினோம். நிதீஷ் குமார் ரெட்டி அதன் பின் களமிறங்கினார். மிடில் ஓவர்களில் ரவீந்திர ஜடேஜா மற்றும் நூர் அகமது இருவரும் சவாலளிப்பார்கள் எனத் தெரியும். அதன் காரணமாகவே கமிந்து மெண்டிஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். அவர் இதுபோன்ற ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடக் கூடியவர் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.