
ஹைதராபாத்: ஓவருக்கு 11 ரன்ரேட் என்கிற விகிதத்தில் அதிரடியாக விளையாடி நடப்பு ஐபிஎல் தொடரின் 7-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த 191 ரன்கள் இலக்கை லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 16.1 ஓவர்களில் எட்டி முதல் வெற்றியை ருசித்தது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சில் ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் வந்த இஷன் கிஷன் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47 ரன்கள் விளாசினார். அவரைத் தவிர்த்து நிதிஷ் குமார் ரெட்டி 32 ரன்களிலும், 5 சிக்ஸர்களுடன் அனிகேத் வர்மா 36 ரன்களும், தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் 3 சிக்ஸர்கள் விளாசிய பேட் கம்மின்ஸ் 18 ரன்களிலும் வெளியேறினர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. லக்னௌ தரப்பில் அசத்தலாக பந்துவீசிய ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவேஷ், திக்வேஷ், பிஷ்னோய், பிரின்ஸ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, அடுத்து களமிறங்கிய லக்னௌ அணி 191 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடியது.
லக்னௌ அணியில் நிகோலஸ் பூரன் அதிரடி காட்டினார். அவர் 26 பந்துகளில் 70 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.
லக்னௌ அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் அரைசதம் கடந்தார். அவர் 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதன்பின், கேப்டன் ரிஷப் பந்த் 15 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.
நடுவரிசையில் களமிறங்கிய அப்துல் சமாத் 8 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 22 எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
மேற்கண்ட வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 16.1 ஓவர்களில் 193 திரட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷர்துல் தாக்குர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடுத்ததாக, சென்னையில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.