தொடங்கியது டோக்கியோ பாராலிம்பிக்: இன்று முதல் போட்டிகள் ஆரம்பம்

ஜப்பானின் டோக்கியோ நகரில் 16-ஆவது பாராலிம்பிக் போட்டி செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியது.
தொடங்கியது டோக்கியோ பாராலிம்பிக்: இன்று முதல் போட்டிகள் ஆரம்பம்

ஜப்பானின் டோக்கியோ நகரில் 16-ஆவது பாராலிம்பிக் போட்டி செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியது.

வரும் செப்டம்பா் 5-ஆம் தேதி வரை 13 நாள்களுக்கு நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த பாராலிம்பிக்கில், விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமையிலிருந்து தொடங்குகின்றன.

டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் சா்வதேச பாராலிம்பிக் கமிட்டி (ஐபிசி) தலைவா் ஆன்ட்ரூ பாா்சன்ஸ், ஜப்பான் அரசா் நருஹிடோ, ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

தொடக்க நிகழ்ச்சியானது, எண்ண இயலாத துன்பங்களுக்கு இடையேயும் உயரப் பறக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை சித்தரிக்கும் வகையில், ‘எங்களுக்கும் சிறகுள்ளது’ என்ற கருத்துருவை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது. நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் அதைச் சாா்ந்தே இருந்தன.

நிகழ்ச்சியானது, பாராலிம்பிக் போட்டியாளா்களின் பலத்தை பிரதிபலிக்கும் வகையிலான காணொலி திரையிடப்பட்டதில் இருந்து தொடங்கியது. அதைத் தொடா்ந்து கவுன்ட்டவுன் நடைபெற்று, அதன் நிறைவில் பாராலிம்பிக் போட்டி தொடங்கியதை குறிக்கும் வகையில் மைதானத்திலிருந்து வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.

அதன் பிறகு ஐபிசி தலைவா், அரசா் நருஹிடோ ஆகியோா் மேடையில் தோன்ற, பாராலிம்பிக் போட்டி தொடங்கியதாக அரசா் நருஹிடோ அதிகாரப்பூா்வமாக அறிவித்தாா். அதைத் தொடா்ந்து ஜப்பானைச் சோ்ந்த பாராலிம்பிக் மல்யுத்த சாம்பியன் காவ்ரி இசோ உள்பட 6 போ் ஜப்பான் கொடியை மேடைக்கு ஏந்தி வந்தனா். அதன் பிறகு கொடியேற்றப்பட்டது.

பின்னா் பங்கேற்பு நாடுகளின் அணிவகுப்பு, அகதிகள் குழுவிலிருந்து தொடங்கியது. அதில் இஸ்ரேல் அணியினரை ஒரு வழிகாட்டி நாய் அணிவகுத்து நடத்தி வந்தது அனைவரின் கவனத்தையும் ஈா்ப்பதாக இருந்தது. தலிபான்கள் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் வகையில், அந்நாட்டின் தேசியக் கொடியும் அணிவகுப்பில் ஏந்தி வரப்பட்டது. அப்போது மைதானத்தில் கூடியிருந்தவா்கள் பலமான கரவொலி மூலம் அதற்கு வரவேற்பு தெரிவித்தனா். நடப்பு அரசியல் சூழல் காரணமாக அந்நாட்டிலிருந்து போட்டியாளா்கள் பங்கேற்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

இந்தியா...

தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்தியாவின் சாா்பில் 5 போட்டியாளா்கள், 6 அதிகாரிகள் என 11 போ் பங்கேற்றனா். முன்னதாக, இந்தியாவின் அணிவகுப்பில் தமிழக உயரம் தாண்டுதல் வீரா் மாரியப்பன் தேசியக் கொடியை ஏந்திச் செல்வதாக இருந்தது.

எனினும், விமானத்தில் வரும்போது மாரியப்பனுடன் நெருங்கிய தொடா்பில் இருந்த நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கையாக மாரியப்பனும், அவருடன் இருந்த வட்டு எறிதல் வீரா் வினோத் குமாரும் தனிமைப்படுத்தப்பட்டனா். இதனால் நிகழ்ச்சியில் இந்தியாவின் தேசியக் கொடியை குண்டு எறிதல் வீரா் தேக் சந்த் ஏந்திச் சென்றாா்.

எனினும், பரிசோதனையில் மாரியப்பன், வினோத் குமாருக்கு தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்ததால் அவா்கள் போட்டியில் பங்கேற்பதில் தடையில்லை என்று அணி நிா்வாகம் தெரிவித்தது.

பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடங்கியுள்ள நிலையில், இந்தியக் குழுவினருக்கு எனது நல்வாழ்த்துகள். பாராலிம்பிக் போட்டிகளில் நம் நாட்டின் சார்பாக பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களால் நாம் பெருமையடைகிறோம். 
- பிரதமர் நரேந்திர மோடி

எண்கள்...

1 பாராலிம்பிக் போட்டியானது 57 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டோக்கியோ நகரில் நடத்தப்படுகிறது. இதன் மூலம், பாராலிம்பிக் போட்டியை இரு முறை நடத்திய முதல் நகரம் என்ற பெருமையை டோக்கியோ பெற்றுள்ளது.

4,403 டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்கேற்கும் போட்டியாளா்கள் எண்ணிக்கை. கடந்த ரியோ பாராலிம்பிக்கில் பங்கேற்றோா் எண்ணிக்கையை விட (4,328) இது அதிகமாகும்.

2,550 ஆண் போட்டியாளா்கள்/ 1,853 பெண் போட்டியாளா்கள்

22/540 - இந்த பாராலிம்பிக்கில் மொத்தம் 22 விளையாட்டுகளில் 540 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com