வந்தனா வீட்டில் நடந்தது வெட்கக்கேடு: மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி கண்டனம்

இந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனை வந்தனா கடாரியா குடும்பத்தினரை சாதி ரீதியிலாக இழிவுபடுத்தியதற்கு கேப்டன் ராணி ராம்பால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வந்தனா வீட்டில் நடந்தது வெட்கக்கேடு: மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி கண்டனம்


இந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா குடும்பத்தினரை சாதி ரீதியிலாக இழிவுபடுத்தியதற்கு கேப்டன் ராணி ராம்பால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி முதன்முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தது. அதில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடியது. அதில் தோல்வியடைந்த இந்திய அணி 4-ம் இடத்தைப் பிடித்தது.

பதக்கம் வெல்லாதபோதும் வீராங்கனைகள் ஒவ்வொரும் தங்கம் என அவர்களது சாதனைகளை நாடே கொண்டாடி வருகிறது. இதையொட்டி, இணையவழி செய்தியாளர் சந்திப்புக்கு ஹாக்கி இந்தியா சனிக்கிழமை ஏற்பாடு செய்தது.

அப்போது இந்திய மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் கூறியது:

"வந்தனா குடும்பத்தினரை சாதி ரீதியில் இழிவுபடுத்தியது தவறான செயல். நாட்டுக்காக விளையாட எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு வீராங்கனைகளும் நிறைய தியாகங்களைச் செய்துள்ளனர். வந்தனா குடும்பத்தினருக்கு நடந்தது வெட்கக்கேடானது.

இதுபோன்ற செயல்கள் அனைத்தையும் நிறுத்தி, மக்கள் சாதியைக் கடந்து வர வேண்டும். நாங்கள் இவையனைத்தையும் கடந்து வந்துள்ளோம். எங்களுடைய மதம் வெவ்வேறானது, நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ளோம். ஆனால், விளையாடும்போது நாங்கள் தேசியக் கொடிக்காக விளையாடுவோம். நாட்டை பெருமையடையச் செய்ய நாங்கள் ஒவ்வொரு நாளும் கடுமையான உழைப்பைப் போடுகிறோம். 

நாட்டில் நிறைய நல்ல மனிதர்களும் உள்ளனர். நாங்கள் பதக்கம் வெல்லாதபோதிலும், மக்களிடமிருந்து இதுபோன்ற மரியாதையைப் பார்த்ததே இல்லை. விளையாட்டில் நம் நாடு ஆதிக்கம் செலுத்த வேண்டுமானால், அனைவரும் பங்களிக்க வேண்டும். வீரர், வீராங்கனைகளால் மட்டும் அதைச் செய்ய முடியாது. வந்தனா குடும்பத்தினருக்கு நடந்தது தவறான செயல். இதுபோன்ற செயல்கள் நடக்கக் கூடாது என்பதற்கு இதுவொரு பாடமாக இருக்கும் என நம்புகிறேன்."

முன்னதாக, ஒலிம்பிக் அரையிறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வியடைந்ததையடுத்து, வந்தனா கட்டாரியா வீட்டின் வெளியே ஆதிக்க சாதியினர் இருவர் பட்டாசு வெடித்து தோல்வியைக் கொண்டாடினர். தலித்துகள் அதிகம் இருந்ததே இந்திய அணியின் தோல்விக்கான காரணம் என்பது அவர்களது பார்வையாக இருந்துள்ளது. இதுகுறித்து, வந்தனா கட்டாரியா சகோதரர் சந்திரசேகர் கட்டாரியா காவல் துறையினரிடம் புகாரளித்தார்.

இதன்பிறகு, பட்டாசு வெடித்த நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com