சென்னை டெஸ்ட்: முதல் நாளில் இங்கிலாந்து -284/4
இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது.


இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது.
மொயீன் அலி 222 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். ஜோ ரூட் 144 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் குவித்தார். ஜோ ரூட்டுடன் இணைந்து 3-ஆவது விக்கெட்டுக்கு 146 ரன்கள் குவித்த மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவுடன் இணைந்து 4-ஆவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் குவித்தார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில், இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. புவனேஸ்வர் குமார், ஜெயந்த் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த போட்டியில் 9-ஆவது வீரராக களமிறங்கி சதமடித்த ஜெயந்த் யாதவ், கடைசி நேரத்தில் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.
இங்கிலாந்து அணியில், காயமடைந்த ஜேம்ஸ் ஆண்டர்சனுக்குப் பதிலாக லியாம் டெளசன் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் காயத்திலிருந்து குணமடைந்ததைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் களமிறங்கினார். இதனால் கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டார். டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் கேப்டன் அலாஸ்டர் குக்கும், ஜென்னிங்ஸும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் சதமடித்த ஜென்னிங்ஸ், இதில் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலிடம் கேட்ச் ஆனார். இதையடுத்து ஜோ ரூட் களமிறங்க, கேப்டன் குக் 10 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்ற கேப்டன் கோலியிடம் கேட்ச் ஆனார். அப்போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது.
ஜோ ரூட் 89: இதன்பிறகு ஜோ ரூட்டுடன் இணைந்தார் மொயீன் அலி. இந்த ஜோடி அசத்தலாக ஆட, இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 91 பந்துகளில் அரை சதமடிக்க, 38-ஆவது ஓவரில் 100 ரன்களை எட்டியது இங்கிலாந்து. ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய மொயீன் அலி, பின்னர் வேகமாக ரன் சேர்க்க ஆரம்பித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய மொயீன் அலி, "டிரிங்க்ஸ்' இடைவேளைக்குப் பிறகு 111 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இóந்திய பெளலர்களை தொடர்ந்து சோதித்த இந்த ஜோடி, இங்கிலாந்து அணி 167 ரன்களை எட்டியபோது பிரிந்தது.
சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் பார்த்திவ் படேலிடம் கேட்ச் ஆனார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இதையடுத்து டிஆர்எஸ் மூலம் மூன்றாவது நடுவரை அணுகினார் கோலி. டி.வி. ரீபிளேயில் ஜோ ரூட் அவுட்டா, இல்லையா என்பதை கண்டறிவது கடினமாக இருந்தது. எனினும் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் விரக்தியோடு வெளியேறினார் ஜோ ரூட். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 146 ரன்கள் குவித்தது.
மொயீன் அலி சதம்: இதையடுத்து மொயீன் அலியுடன் ஜோடி சேர்ந்தார் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவ். இந்த ஜோடியும் சிறப்பாக ஆட, 68 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது இங்கிலாந்து. அசத்தலாக ஆடிய பேர்ஸ்டோவ், ஜடேஜா ஓவரில் இரு சிக்ஸர்களையும், அஸ்வின் ஓவரில் ஒரு சிக்ஸரையும் விளாசி, ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோவ், ஒரு ரன்னில் அரை சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். 90 பந்துகளைச் சந்தித்த அவர் 3 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் எடுத்த நிலையில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் ஆனார். இதையடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் தடுப்பாட்டம் ஆட, மறுமுனையில் அசத்தலாக ஆடிய மொயீன் அலி 203 பந்துகளில் சதத்தை எட்டினார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 5-ஆவது சதம்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. மொயீன் அலி 120, பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியத் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
உள்ளூர் நாயகனான அஸ்வினுக்கு முதல் நாளில் விக்கெட்டுகள் கிடைக்காதது ஏமாற்றமாக அமைந்தது. முதல் நாளில் பந்துகள் அபாரமாக சுழன்றபோதும், ஆடுகளம் மெதுவாக இருந்ததால் பந்து வேகமாக செல்லவில்லை. இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நெருக்கடியின்றி விளையாடினர். அதேநேரத்தில் ஜடேஜா தனது பந்துவீச்சில் வேகத்தை அதிகரித்ததால் அவருக்கு விக்கெட் கிடைத்தது.
குக் 11 ஆயிரம்

சென்னை டெஸ்ட் போட்டியில் வீசப்பட்ட முதல் பந்தே சாதனையாக அமைந்தது. உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை கவர் திசையில் விரட்டி இரு ரன்களை எடுத்த குக், டெஸ்ட் போட்டியில் 11 ஆயிரம் ரன்களை எட்டினார். சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 10-ஆவது வீரர் குக் ஆவார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு நாகபுரியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுக வீரராக களம் கண்ட குக், இப்போது அதே இந்திய மண்ணில் தனது 140-ஆவது டெஸ்டில் 11 ஆயிரம் ரன்கள் என்ற அரிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
மறைந்த முதல்வருக்கு மெளன அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெளன அஞ்சலி செலுத்தும் இரு அணி வீரர்கள்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-ஆவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல் நாளில் இரு அணி வீரர்களும் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.
துளிகள்...
* இந்தத் தொடரில் 5-ஆவது முறையாக ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் குக். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிகமுறை குக்கை வீழ்த்திய பெளலர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜடேஜா. இந்தத் தொடருக்கு முன்னர் குக்கிற்கு 117 பந்துகளை வீசியிருந்த ஜடேஜா, அப்போது ஒரு முறை மட்டுமே அவரை வீழ்த்தியிருந்தார்.
* இங்கிலாந்து வீரர் மொயீன் அலி, இந்த ஆண்டில் மட்டும் 4 சதங்களை விளாசியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான தற்போதைய தொடரில் இரு சதங்களை விளாசியுள்ள மொயீன் அலி, முன்னதாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தலா ஒரு சதத்தை அடித்துள்ளார். இந்திய மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் இரு சதங்களை விளாசிய 6-ஆவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமை மொயீன் அலிக்கு கிடைத்துள்ளது. அலாஸ்டர் குக், கென் பேரிங்டன், காலின் கோவ்டிரே, மைக் கேட்டிங், ஆண்ட்ரூ ஸ்டிராஸ் ஆகியோர் மேற்கண்ட சாதனையை செய்த மற்ற ஐந்து இங்கிலாந்து வீரர்கள் ஆவர்.
* இந்தப் போட்டியில் ஜோ ரூட்-மொயீன் அலி ஜோடி 146 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்திய மண்ணில் 3-ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த இங்கிலாந்து ஜோடிகளின் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்தது. குக்-கெவின் பீட்டர்சன் ஜோடி 2012-இல் மும்பையில் 206 ரன்கள் குவித்ததே இந்திய மண்ணில் இங்கிலாந்து ஜோடி ஒன்றின் அதிகபட்ச ரன் சாதனையாக உள்ளது.
* இந்தியாவுக்கு எதிராக இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், அவையனைத்திலும் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை விளாசியுள்ளார்.
ஓர் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக முறை 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை விளாசியவர்கள் வரிசையில் ஜோ ரூட் 2-ஆவது இடத்தில் உள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனான டான் பிராட்மேன், இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 14 போட்டிகளில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்ததே இன்றளவும் சாதனையாக உள்ளது.
* இந்த ஆண்டில் 1000 ரன்கள் குவித்த 4-ஆவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மொயீன் அலி. முன்னதாக குக், ஜோ ரூட், பேர்ஸ்டோவ் ஆகியோர் இந்த ஆண்டில் 1000 ரன்கள் குவித்தனர். ஓர் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் 1000 ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் மொயீன் அலிக்கு 20-ஆவது இடம் கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...