முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 477 ரன்கள் குவிப்பு
இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 157.2 ஓவர்களில் 477 ரன்கள் குவித்தது.


இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 157.2 ஓவர்களில் 477 ரன்கள் குவித்தது.
2-ஆவது நாளான சனிக்கிழமை காலையில் இங்கிலாந்து அணி 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தபோதும், பின்வரிசை பேட்ஸ்மேன்களான லியாம் டாசன்-ஆதில் ரஷித் ஜோடி 8-ஆவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்ததால், அந்த அணி வலுவான ஸ்கோரை குவித்தது.
சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்திருந்தது. மொயீன் அலி 120, பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
2-ஆவது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 6 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலிடம் கேட்ச் ஆனார். இதன்பிறகு களம் கண்ட ஜோஸ் பட்லர் 5 ரன்கள் மட்டுமே சேர்த்து இஷாந்த் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அறிமுக வீரரான லியாம் டாசன் களம்புகுந்தார். ஆரம்பத்தில் தடுமாறிய டாசன், பின்னர் நிதானமாக ரன் சேர்த்தார். ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகள் விழுந்ததால் மொயீன் அலி சற்று வேகமாக ரன் சேர்க்க ஆரம்பித்தார். உமேஷ் யாதவ் வீசிய 104-ஆவது ஓவரின் 4-ஆவது பந்தை மொயீன் அலி லெக் திசையில் தூக்கியடிக்க, அது ஜடேஜாவின் கையில் தஞ்சம்புகுந்தது. மொயீன் அலி 262 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 146 ரன்கள் குவித்தார்.
டாசன்-ரஷித் ஜோடி 108: இதன்பிறகு இங்கிலாந்து அணி விரைவாக ஆட்டமிழந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 8-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த டாசன்-ஆதில் ரஷித் ஜோடி அசத்தலாக ஆட, இந்திய பெளலர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த ஜோடி தொடர்ந்து சிறப்பாக ஆட, 138 ஓவர்களில் 400 ரன்களை எட்டியது இங்கிலாந்து. தொடர்ந்து தடுப்பாட்டம் ஆடிய ஆதில் ரஷித் 141 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இங்கிலாந்து அணி 429 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியைப் பிரித்தார் உமேஷ் யாதவ். ரஷித் 155 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சேர்த்து பார்த்திவ் படேலிடம் கேட்ச் ஆனார். இந்த ஜோடி 8-ஆவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் குவித்தது.
இதையடுத்து ஸ்டூவர்ட் பிராட் களமிறங்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய டாசன் 121 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஸ்டூவர்ட் பிராட் 19 ரன்களில் ரன் அவுட்டாக, பின்னர் வந்த ஜேக் பாலை 12 ரன்களில் வீழ்த்தினார் அமித் மிஸ்ரா. இதனால் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் 157.2 ஓவர்களில் 477 ரன்களோடு முடிவுக்கு வந்தது. டாசன் 148 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியத் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அஸ்வின், மிஸ்ரா ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் மட்டுமே கிடைத்தன.
இந்தியா-60: இதையடுத்து கே.எல்.ராகுலும், பார்த்திவ் படேலும் இந்தியாவின் முதல் இன்னிங்ûஸ தொடங்கினர். முரளி விஜய்க்கு பீல்டிங்கின்போது இடது தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டதால் அவர் தொடக்க வீரராக களமிறங்கவில்லை.
ராகுல்-படேல் ஜோடி மிகுந்த எச்சரிக்கையோடு ஆடியது. அதேநேரத்தில் இருவரும் ரன் சேர்க்கவும் தவறவில்லை. 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 30, படேல் 29 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இந்தியா இன்னும் 417 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
ஹெல்மெட்டை பதம்பார்த்த பந்து: காயமின்றி தப்பினார் டாசன்
இங்கிலாந்து அணியின் அறிமுக வீரரான லியாம் டாசன், தான் சந்தித்த 2-ஆவது பந்திலேயே ஹெல்மெட்டில் அடி வாங்கினார். 98-ஆவது ஓவரை வீசிய இஷாந்த் சர்மா அதில் 2-ஆவது பந்தை "ஷார்ட் பிச்'சில் வீசினார். அப்போது அதைத் தவிர்ப்பதற்காக டாசன் விலகினார். ஆனால் அவரின் கணிப்பு தவறாகவே, அந்தப் பந்து டாசனுடைய ஹெல்மெட்டின் முன்பகுதியில் தாக்கி மேல் நோக்கி எகிறியது.
இதனால் டாசன் நிலைகுலைந்தார். இதையடுத்து முடநீக்கியல் நிபுணர்கள் விரைந்து வந்து அவரை சோதித்தனர். பந்து பலமாகத் தாக்கியபோதும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து தொடர்ந்து விளையாடிய அவர், அரை சதமடித்து அசத்தினார்.
எனினும் டாசனின் ஹெல்மெட்டில் பந்து தாக்கிய தருணம், வீரர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் பிலிப் ஹியூஸின் மரணத்தை நினைவூட்டியது. முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான பிலிப் ஹியூஸ், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பவுன்சர் தாக்கியதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
துளிகள்...
1998
இந்திய மண்ணில் அறிமுகப் போட்டியில் 8 அல்லது அதற்கு கீழ் நிலைகளில் களமிறங்கிய ஒருவர் அரை சதமடிப்பது 1998-க்குப் பிறகு இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் கெவின் ராபர்ட்சன் இதே சென்னை மைதானத்தில் மேற்கண்ட சாதனையை படைத்துள்ளார்.
3
இந்திய மண்ணில் 8-ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு ஜோடிகளின் வரிசையில் டாசன்-ரஷித் ஜோடிக்கு (108 ரன்கள்) 3-ஆவது இடம் கிடைத்துள்ளது. 1974-இல் தில்லியில் நடைபெற்ற டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகளின் கெய்த் பாய்ஸ்-விவியன் ரிச்சர்ட்ஸ் ஜோடி 8-ஆவது விக்கெட்டுக்கு 124 ரன்கள் குவித்ததே இன்றளவும் சாதனையாக உள்ளது. அதற்கடுத்தபடியாக 1986-87-இல் சென்னையில் நடைபெற்ற டெஸ்டில் பாகிஸ்தானின் இம்ரான் கான்-வாசிம் அக்ரம் ஜோடி 112 ரன்கள் குவித்துள்ளது.
65
சென்னை டெஸ்டில் லியாம் டாசன் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் குவித்ததன் மூலம் அறிமுகப் போட்டியில் 8 அல்லது அதற்கு கீழ் நிலைகளில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அறிமுகப் போட்டியில் 8-ஆவது வீரராக களமிறங்கி அரை சதம் கண்ட 8-ஆவது இங்கிலாந்து வீரர் டாசன்.
2
இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்டில் ஒரே இன்னிங்ஸில் 8 மற்றும் அதற்கு கீழ் நிலைகளில் களமிறங்கிய இருவர் அரை சதமடிப்பது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன்னர் பாகிஸ்தானின் இம்ரான் கான், அக்ரம் ஆகியோர் 8, 9 ஆகிய நிலைகளில் களமிறங்கி முறையே 135 மற்றும் 62 ரன்கள் எடுத்துள்ளனர்.
0
இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்டில் ஒரே இன்னிங்ஸில் 8 மற்றும் அதற்கு கீழ் நிலைகளில் களமிறங்கிய இருவர் அரை சதமடிப்பது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன்னர் பாகிஸ்தானின் இம்ரான் கான், அக்ரம் ஆகியோர் 8, 9 ஆகிய நிலைகளில் களமிறங்கி முறையே 135 மற்றும் 62 ரன்கள் எடுத்துள்ளனர்.
ஸ்கோர் போர்டு
இங்கிலாந்து
விக்கெட் வீழ்ச்சி: 1-7 (ஜென்னிங்ஸ்), 2-21 (குக்),
3-167 (ரூட்), 4-253 (பேர்ஸ்டோவ்), 5-287 (ஸ்டோக்ஸ்), 6-300 (பட்லர்), 7-321 (அலி), 8-429 (ரஷித்),
9-455 (பிராட்), 10-477 (பால்).
பந்துவீச்சு: உமேஷ் யாதவ் 21-3-73-2,
இஷாந்த் சர்மா 21-6-42-2, ஜடேஜா 45-9-106-3,
அஸ்வின் 44-3-151-1, அமித் மிஸ்ரா 25.2-5-87-1, கருண் நாயர் 1-0-4-0.
இந்தியா
பந்துவீச்சு: ஸ்டூவர்ட் பிராட் 5-2-6-0, ஜேக் பால் 3-0-9-0, மொயீன் அலி 7-1-18-0, பென் ஸ்டோக்ஸ் 2-0-12-0, ஆதில் ரஷித் 2-0-13-0, லியாம் டாசன் 1-0-1-0.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...