/

இங்கிலாந்துக்கு இந்தியா பதிலடி - 391/4

இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது

News image

ஆட்டமிழந்த விரக்தியில் ராகுல்.

Updated On :18 டிசம்பர் 2016, 7:08 pm

ஏ.வி. பெருமாள்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 108 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் குவித்துள்ளது.
இதன்மூலம் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இன்னும் 86 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் ஒரு ரன்னில் இரட்டைச் சதத்தை நழுவவிட்டார். 311 பந்துகளை எதிர்கொண்ட அவர், 3 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 199 ரன்கள் குவித்தார். முதல் விக்கெட்டுக்கு படேலுடன் இணைந்து 152 ரன்களும், 4-ஆவது விக்கெட்டுக்கு கருண் நாயருடன் இணைந்து 161 ரன்களும் சேர்த்தார் ராகுல்.
சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 157.2 ஓவர்களில் 477 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 146, ஜோ ரூட் 88, லியாம் டாசன் ஆட்டமிழக்காமல் 66, ஆதில் ரஷித் 60 ரன்கள் எடுத்தனர்.
இந்தியத் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 30, பார்த்திவ் படேல் 28 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
படேல் 71: 3-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் தொடங்கியதுமே டாசன் பந்துவீச்சில் இரு சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தினார் ராகுல். தொடர்ந்து அசத்தலாக ஆடிய ராகுல் 96 பந்துகளிலும், படேல் 84 பந்துகளிலும் அரை சதத்தை எட்ட, "டிரிங்க்ஸ்' இடைவேளையின்போது இந்தியா 33 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய ராகுல்-படேல் ஜோடி, இந்தியா 152 ரன்களை எட்டியபோது பிரிந்தது. 112 பந்துகளைச் சந்தித்த படேல் 7 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் சேர்த்து மொயீன் அலி பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் ஆனார்.
ராகுல் சதம்: பின்னர் களம் கண்ட புஜாரா 16 ரன்களில் நடையைக் கட்ட, கேப்டன் கோலி களம்புகுந்தார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ராகுல், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 171 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 4-ஆவது சதம் இது. அதேநேரத்தில் சொந்த மண்ணில் அவர் அடித்த முதல் சதம் இது.
 கடந்த போட்டிகளைப் போல் இந்தப் போட்டியிலும் அசத்தலாக ஆடி இந்திய ரசிகர்களுக்கு விருந்து படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி 15 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் பிராட் பந்துவீச்சில் ஜென்னிங்ஸிடம் கேட்ச் ஆனார். கோலி ஆட்டமிழந்ததால் இந்தியாவை விரைவாக வீழ்த்திவிடலாம் என இங்கிலாந்து வீரர்கள் நினைத்தனர். ஆனால் 5-ஆவது வீரராக களமிறங்கிய கருண் நாயர், இங்கிலாந்து வீரர்களின் கனவைத் தகர்த்தார்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு ராகுல் 150 ரன்களை (253 பந்துகளில்) எட்ட, 87-ஆவது ஓவரில் 300 ரன்களைக் கடந்தது இந்தியா. நிதானமாக ஆடிய கருண் நாயர் 98 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் அரை சதம் இது.
மறுமுனையில் அசத்தலாக ஆடிய ராகுல், மொயீன் அலி வீசிய 100-ஆவது ஓவரில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸரை விளாசி 193 ரன்களை எட்டினார். ரஷித் வீசிய 103-ஆவது ஓவரில் மற்றொரு பவுண்டரியை விரட்டிய ராகுல், 199 ரன்களை எட்டினார்.
இதனால் அவர் இரட்டைச் சதமடித்துவிடுவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் சென்ற அந்த பந்தை ராகுல் அடித்து ஆட முயன்றார். ஆனால் பேட்டின் விளிம்பில் பட்ட அந்தப் பந்து, கவர் பாயிண்டில் நின்ற பட்லரின் கையில் தஞ்சம்புகுந்தது. இதை சற்றும் எதிர்பாராத ராகுல் அப்படியே ஸ்டெம்புக்கு முன்னால் தலையில் கைவைத்தபடி சரிந்தார். 311 பந்துகளில் 199 ரன்கள் குவித்த ராகுல், முதல் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பை இழந்த ஏமாற்றத்தோடு வெளியேறினார்.
கருண் நாயர் 71: இதையடுத்து கருண் நாயருடன் இணைந்தார் முரளி விஜய். நிதானமாக ஆடிய இந்த ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக்கொண்டது. 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 108 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் குவித்துள்ளது. கருண் நாயர் 136 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 71, முரளி விஜய் 31 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ஆதில் ரஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

துளிகள்...
*சர்வதேச அளவில் ஒரு ரன்னில் இரட்டைச் சதமடிக்கும் வாய்ப்பை இழந்த 9-ஆவது வீரர் கே.எல்.ராகுல். அதேநேரத்தில் இந்தியர்களில் அவர் 2-ஆவது வீரர் ஆவார். முதல் இந்தியர் அசாருதீன். அவர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கான்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 199 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். டெஸ்ட் போட்டியில் தனியொரு வீரரால் 11 முறை 199 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் இலங்கையின் சங்ககாரரா, ஜிம்பாப்வேயின் ஆன்டி ஃபிளவர் ஆகியோர் 199 ரன்கள் குவித்து ஆட்டமிழக்கவில்லை.
*இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த இந்திய தொடக்க வீரர்கள் வரிசையில் கே.எல்.ராகுல் (199 ரன்கள்) 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய தொடக்க வீரர்களில் கவாஸ்கர் மட்டுமே இங்கிலாந்துக்கு எதிராக இரட்டைச் சதம் (1979-இல் நடைபெற் ஓவல் டெஸ்டில் 221 ரன்கள்) அடித்துள்ளார். ராகுல், இன்னும் ஓர் ரன் எடுத்திருந்தால் இங்கிலாந்துக்கு எதிராக இரட்டைச் சதமடித்த 8-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார். இதுதவிர சென்னை டெஸ்டில் இரட்டைச் சதமடித்த 9-ஆவது வீரர், 2003-க்குப் பிறகு (தென் ஆப்பிரிக்காவின் கிரீம் ஸ்மித்) இங்கிலாந்துக்கு எதிராக இரட்டைச் சதமடித்த முதல் தொடக்க வீரர் என்ற சாதனைகளையும் ராகுல் படைத்திருப்பார்.
*டெஸ்ட் போட்டியில் 31 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் (ராகுல்-படேல் ஜோடி குவித்த 152) குவித்துள்ளது. இதற்கு முன்னர் 2015 ஜூனில் ஃபதுல்லாவில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் முரளி விஜய்-தவன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 283 ரன்கள் குவித்திருந்து. மேற்கண்ட இரு டெஸ்ட் போட்டிகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் தொடக்க ஜோடிகள் ஒட்டுமொத்தமாக 717 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தன.  
*டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக ஜோடி சேர்ந்து விளையாடும்போது 100 ரன்களுக்கு மேல் குவித்த 6-ஆவது இந்திய தொடக்க ஜோடி என்ற பெருமையைப் பெற்றுள்ளது ராகுல்-படேல் ஜோடி. இதற்கு முன்னர் தவன்-விஜய், தினேஷ் கார்த்திக்-வாசிம் ஜாபர், சேவாக்-திராவிட், அருண் லால்-கவாஸ்கர், ஃபரூக் இன்ஜினியர்-அசோக் மன்கட் ஆகிய ஜோடிகள் மேற்கண்ட சாதனையை செய்துள்ளன.

ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து- 477 (மொயீன் அலி 146, ஜோ ரூட் 88, லியாம் டாசன் 66*, ஆதில் ரஷித் 60; ஜடேஜா-3வி/106)
இந்தியா
கே.எல்.ராகுல்    (சி) பட்லர் (பி) ரஷித்    199    (311)
பார்த்திவ் படேல்    (சி) பட்லர் (பி) அலி    71    (112)
புஜாரா    (சி) குக் (பி) ஸ்டோக்ஸ்    16    (29)
விராட் கோலி    (சி) ஜென்னிங்ஸ் (பி) பிராட்    15    (29)
கருண் நாயர்    நாட் அவுட்    71    (136)
முரளி விஜய்    நாட் அவுட்    17    (31)
உதிரிகள்        2    
மொத்தம் (108 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு) 391
விக்கெட் வீழ்ச்சி: 1-152 (படேல்), 2-181 (புஜாரா), 3-211 (கோலி), 4-372 (ராகுல்).  

பந்துவீச்சு: ஸ்டூவர்ட் பிராட் 18-4-46-1,
ஜேக் பால் 15-1-50-0, மொயீன் அலி 24-1-96-1,
பென் ஸ்டோக்ஸ் 9-1-37-1, ஆதில் ரஷித் 17-0-76-1,  லியாம் டாசன் 23-3-72-0, ஜோ ரூட் 2-0-12-0.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.