லோதா பரிந்துரைகளை நிபந்தனையின்றி அமல்படுத்த உத்தரவாதம் அளிக்கவேண்டும். மறுத்தால் நாளை இறுதி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கின் ஒரு பகுதியாக பிசிசிஐயை சீரமைப்பதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, முன்னாள் நீதிபதிகள் அசோக் பான், ஆர்வி ரவீந்திரன் ஆகிய 3 பேரைக் கொண்ட கமிட்டி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி பல்வேறு பரிந்துரைகளை அளித்தது.
அதில், கிரிக்கெட் வாரியத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு இருத்தல் கூடாது, கிரிக்கெட் வாரியத்தில் பதவி வகிப்போருக்கு வயது வரம்பு, பதவிக் காலம் நிர்ணயிக்கப்பட வேண்டும், கிரிக்கெட் சூதாட்டத்துக்கு (பெட்டிங்) சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வேண்டும், கிரிக்கெட் வாரியத்துக்கு ஒரு மாநிலத்தில் இருந்து ஒருவரே பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட வேண்டும், கிரிக்கெட் வாரியத்தில் நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு இருக்கும் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.
ஆனால், அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் பிசிசிஐ தாமதப்படுத்தி வந்தது. பிசிசிஐயை சீரமைக்கும் வகையிலான லோதா குழுவின் பரிந்துரைகளை எதிர்த்து பிசிசிஐ மற்றும் பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்குரிமை என்ற லோதா கமிட்டியின் பரிந்துரையால் மும்பை, பரோடா போன்ற முக்கிய கிரிக்கெட் சங்கங்கள் வாக்குரிமையை இழக்க நேரிடும். இதுதவிர 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிசிசிஐ பதவியில் இருக்கக்கூடாது, ஒருவர் இரு முறை பதவி வகித்தால் அதற்கிடையே 3 ஆண்டு இடைவெளி இருக்க வேண்டும், ஒரே நேரத்தில் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் இரட்டை பதவி வகிக்கக்கூடாது போன்றவற்றில் முரண்பாடு உள்ளது. கிரிக்கெட் போட்டிகளின்போது உணவு இடைவேளை, தேநீர், குடிநீர் இடைவேளையின்போது மட்டுமே விளம்பரம் இடம்பெற வேண்டும் என்ற பரிந்துரையால் பிசிசிஐக்கு ரூ.1,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். கிரிக்கெட் மைதானத்தில் மற்ற போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட தனது விளக்கத்தை பிசிசிஐ அளித்தது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் வாரிய அமைப்பில் (பிசிசிஐ) சீர்திருத்தங்கள் செய்யக்கோரும் லோதா குழுவின் பரிந்துரைகளை எதிர்த்து பிசிசிஐ மற்றும் பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.
அப்போது, லோதா கமிட்டியின் முக்கியப் பரிந்துரைகளை ஏற்று நீதிபதிகள் கூறியதாவது: பிசிசிஐ அமைப்பில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் 70 வயதுக்கு அதிகமானோர் உறுப்பினர்களாக கூடாது. பிசிசிஐயில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு வாக்குரிமை மட்டுமே அளிக்கப்பட வேண்டும். பிசிசிஐ நிர்வாகத்தில் ஒருவர், ஒரேயொரு பொறுப்பை மட்டுமே வகிக்க வேண்டும். மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) பிரதிநிதி, பிசிசிஐயில் நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு சிஏஜியின் பிரதிநிதி நியமிக்கப்பட்ட பிறகு, பிசிசிஐயில் இருக்கும் பிற நிர்வாகக் குழுக்கள் அனைத்தையும் நீக்கிவிட வேண்டும் ஆகிய பரிந்துரைகள் ஏற்கப்படுகின்றன.
அதேசமயம், கிரிக்கெட் சூதாட்டத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து அளிப்பது குறித்தும், தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) வரம்புக்குள் பிசிசிஐ-யை கொண்டு வருவது குறித்தும் நாடாளுமன்றத்தின் முடிவுக்கே விட்டு விடுகிறோம். இதேபோல், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் திருத்தம் செய்ய வேண்டுமா? என்பது குறித்தும், விளம்பரதாரரின் பிரதிநிதி, பிசிசிஐயில் இடம்பெற வேண்டுமா? என்பது குறித்தும் பிசிசிஐதான் முடிவெடுக்க வேண்டும்.
பிசிசிஐ அமைப்பில் நிர்வாக ரீதியில் அடுத்த 6 மாதங்களுக்குள் செய்யப்படவிருக்கும் சீர்திருத்தங்களை ஆர்.எம்.லோதா கமிட்டி கண்காணிக்க வேண்டும் என்றனர் நீதிபதிகள்.
முன்னதாக, ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஓரு வாக்குரிமை மட்டுமே அளிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு பிசிசிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 2-க்கும் மேற்பட்ட சங்கங்களைக் கொண்டுள்ள மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு சுழற்சி முறையில் மாற்றுச் சங்கங்களுக்கு வாக்குரிமை அளிக்கலாம் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்விடம் லோதா குழு தனது இடைக்கால அறிக்கையைச் சமீபத்தில் அளித்தது. அதில், பிசிசிஐயும், அதன் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களும் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று செயல்படுவது இல்லை. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், லோதா குழு உறுப்பினர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருகின்றனர். இ-மெயில் உள்பட பல்வேறு வழிகளில் பிசிசிஐ அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோதிலும், அவர்கள் உரிய பதிலை அளிப்பது இல்லை. எனவே, அதன் தலைவர் அனுராக் தாக்குர், செயலாளர் அஜய் ஷிர்கே உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதாவது: தாங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பிசிசிஐ நினைத்தால் அது தவறு. பிசிசிஐ பிரபுக்களைப் போன்று நடந்து கொள்கிறது. நீதிமன்ற உத்தரவை மதித்து நடக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அவ்வாறு நடக்க வைப்போம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து பிசிசிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அரவிந்த் தாதர் கூறியதாவது: நீதிமன்றத்தின் உத்தரவுகள் பெரும்பாலானவற்றை பின்பற்றியே நடந்து வருகிறோம். இதுவரை நிறைவேற்றாத உத்தரவுகளை அடுத்தகட்டமாக நிறைவேற்றுவோம் என்றார்.
எனினும், இந்த பதிலில் நீதிபதிகள் திருப்தியடையவில்லை. "பிசிசிஐ கண்டிப்பாக சட்டப்படி நடக்க வேண்டும். இப்போது பிசிசிஐயின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. நீதிமன்றத்தின் உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும்' என்று கூறிய நீதிபதிகள், அடுத்தக்கட்ட விசாரணையை அக்டோபர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையடுத்து, லோதா கமிட்டியின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது பிசிசிஐ. அதில் குறிப்பிட்டுள்ளதாவது: லோதா கமிட்டி அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு பிசிசிஐ பதில் அனுப்பவில்லை என்பது தவறு. லோதா குழுவுக்கு பிசிசிஐ அனுப்பிய 40 மின்னஞ்சல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேலும் லோதா குழுவின் பரிந்துரைகளை பிசிசிஐ அமல்படுத்தவில்லை என்று கூறுவதும் தவறு. பிசிசிஐ உறுப்பினர் கூட்டத்தில் லோதா குழுவின் பல பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன. எனவே அவர்கள் பிசிசிஐ மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று பதிலளித்தது.
இதுகுறித்த விசாரணையில், தலைமை நீதிபதி டிஎஸ் தாக்குர் கூறியதாவது: எங்கள் நேரத்தை வீணடிக்கவேண்டாம். லோதா பரிந்துரைகளை நிபந்தனையின்றி அமல்படுத்த உத்தரவாதம் அளிக்கவேண்டும். மறுத்தால் நாளை இறுதி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். அதேபோல லோதா பரிந்துரைகளை ஏற்காத மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதியுதவி அளிக்கவேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் பிசிசிஐக்குக் கட்டளையிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


