மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

லோதா பரிந்துரைகளைக் கட்டாயமாக அமல்படுத்தவேண்டும்: பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!

லோதா பரிந்துரைகளை பிசிசிஐ அமல்படுத்தவேண்டும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்கவேண்டும் என்று பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

News image
Updated On :29 செப்டம்பர் 2016, 2:01 am

லோதா பரிந்துரைகளை பிசிசிஐ அமல்படுத்தவேண்டும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்கவேண்டும் என்று பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கின் ஒரு பகுதியாக பிசிசிஐயை சீரமைப்பதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, முன்னாள் நீதிபதிகள் அசோக் பான், ஆர்வி ரவீந்திரன் ஆகிய 3 பேரைக் கொண்ட கமிட்டி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. அதில், கிரிக்கெட் வாரியத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு இருத்தல் கூடாது, கிரிக்கெட் வாரியத்தில் பதவி வகிப்போருக்கு வயது வரம்பு, பதவிக் காலம் நிர்ணயிக்கப்பட வேண்டும், கிரிக்கெட் சூதாட்டத்துக்கு (பெட்டிங்) சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வேண்டும், கிரிக்கெட் வாரியத்துக்கு ஒரு மாநிலத்தில் இருந்து ஒருவரே பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட வேண்டும், கிரிக்கெட் வாரியத்தில் நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு இருக்கும் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.

ஆனால், அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் பிசிசிஐ தாமதப்படுத்தி வந்தது. பிசிசிஐயை சீரமைக்கும் வகையிலான லோதா குழுவின் பரிந்துரைகளை எதிர்த்து பிசிசிஐ மற்றும் பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்குரிமை என்ற லோதா கமிட்டியின் பரிந்துரையால் மும்பை, பரோடா போன்ற முக்கிய கிரிக்கெட் சங்கங்கள் வாக்குரிமையை இழக்க நேரிடும். இதுதவிர 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிசிசிஐ பதவியில் இருக்கக்கூடாது, ஒருவர் இரு முறை பதவி வகித்தால் அதற்கிடையே 3 ஆண்டு இடைவெளி இருக்க வேண்டும், ஒரே நேரத்தில் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் இரட்டை பதவி வகிக்கக்கூடாது போன்றவற்றில் முரண்பாடு உள்ளது. கிரிக்கெட் போட்டிகளின்போது உணவு இடைவேளை, தேநீர், குடிநீர் இடைவேளையின்போது மட்டுமே விளம்பரம் இடம்பெற வேண்டும் என்ற பரிந்துரையால் பிசிசிஐக்கு ரூ.1,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். கிரிக்கெட் மைதானத்தில் மற்ற போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட தனது விளக்கத்தை பிசிசிஐ அளித்தது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் வாரிய அமைப்பில் (பிசிசிஐ) சீர்திருத்தங்கள் செய்யக்கோரும் லோதா குழுவின் பரிந்துரைகளை எதிர்த்து பிசிசிஐ மற்றும் பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

அப்போது, லோதா கமிட்டியின் முக்கியப் பரிந்துரைகளை ஏற்று நீதிபதிகள் கூறியதாவது: பிசிசிஐ அமைப்பில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் 70 வயதுக்கு அதிகமானோர் உறுப்பினர்களாக கூடாது. பிசிசிஐயில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு வாக்குரிமை மட்டுமே அளிக்கப்பட வேண்டும். பிசிசிஐ நிர்வாகத்தில் ஒருவர், ஒரேயொரு பொறுப்பை மட்டுமே வகிக்க வேண்டும். மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) பிரதிநிதி, பிசிசிஐயில் நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு சிஏஜியின் பிரதிநிதி நியமிக்கப்பட்ட பிறகு, பிசிசிஐயில் இருக்கும் பிற நிர்வாகக் குழுக்கள் அனைத்தையும் நீக்கிவிட வேண்டும் ஆகிய பரிந்துரைகள் ஏற்கப்படுகின்றன.

அதேசமயம், கிரிக்கெட் சூதாட்டத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து அளிப்பது குறித்தும், தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) வரம்புக்குள் பிசிசிஐ-யை கொண்டு வருவது குறித்தும் நாடாளுமன்றத்தின் முடிவுக்கே விட்டு விடுகிறோம். இதேபோல், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் திருத்தம் செய்ய வேண்டுமா? என்பது குறித்தும், விளம்பரதாரரின் பிரதிநிதி, பிசிசிஐயில் இடம்பெற வேண்டுமா? என்பது குறித்தும் பிசிசிஐதான் முடிவெடுக்க வேண்டும்.

பிசிசிஐ அமைப்பில் நிர்வாக ரீதியில் அடுத்த 6 மாதங்களுக்குள் செய்யப்படவிருக்கும் சீர்திருத்தங்களை ஆர்.எம்.லோதா கமிட்டி கண்காணிக்க வேண்டும் என்றனர் நீதிபதிகள். முன்னதாக, ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஓரு வாக்குரிமை மட்டுமே அளிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு பிசிசிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 2-க்கும் மேற்பட்ட சங்கங்களைக் கொண்டுள்ள மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு சுழற்சி முறையில் மாற்றுச் சங்கங்களுக்கு வாக்குரிமை அளிக்கலாம் என்று தெரிவித்தனர்.

கட்ஜூ எதிர்ப்பு

லோதா கமிட்டியின் பரிந்துரைகள் தொடர்பாக தில்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தை ஒத்திவைக்குமாறு பிசிசிஐ விடுத்த கோரிக்கையை அந்தக் கமிட்டி நிராகரித்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட லோதா குழு, பிசிசிஐ மறுசீரமைப்புக்காக அளித்த பரிந்துரைகள் சட்டவிரோதமானவை என்று பிசிசிஐக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் தலைவரான மார்க்கண்டேய கட்ஜு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பிசிசிஐ மறுசீரமைப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மேற்கொண்ட முடிவுகள் சட்டவிரோதமானவை. அதில் அரசமைப்பின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. நமது அரசமைப்புச் சட்டத்தின்படிதான், சட்டப்பேரவை, நிர்வாகம், நீதிமன்றம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. சட்டத்தை உருவாக்குதல் என்பது, சட்டப்பேரவையின் தனியுரிமை. ஒருவேளை நீதித்துறை சட்டத்தை உருவாக்கத் தொடங்கினால், அதுவொரு அபாயகரமான முன்னுதாரணமாகிவிடும்.

லோதா குழு பரிந்துரைகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தின் 4 அல்லது 5 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்விடம் மேல்முறையீடு செய்யுமாறும், வரும் 9-ஆம் தேதி லோதா குழுவுடனான சந்திப்பை மேற்கொள்ள வேண்டியதில்லை எனவும் பிசிசிஐக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். இந்த விவகாரத்தில் பிசிசிஐக்கான தண்டனையை முடிவு செய்ய, அயல்பணி குழு (லோதா குழு) ஒன்றை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், பிசிசிஐயில் மறுசீரமைப்பு தேவைப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை என்று கட்ஜு கூறினார். இது தொடர்பாக பிசிசிஐ செயலர் அஜய் ஷிர்கே கூறுகையில், "கட்ஜுவின் இடைக்கால அறிக்கையை ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கப்படும்' என்றார்.

இந்நிலையில் பரிந்துரைகளை அமல்படுத்த பிசிசிஐக்கு கெடு விதித்தது லோதா குழு. அக்டோபர் 15-ம் தேதிக்குள் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும் என்று பிசிசிஐக்குக் கட்டளை பிறப்பித்தது.

தலைமை நீதிபதி கண்டிப்பு

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்விடம் லோதா குழு தனது இடைக்கால அறிக்கையை அளித்தது. அதில், பிசிசிஐயும், அதன் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களும் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று செயல்படுவது இல்லை. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், லோதா குழு உறுப்பினர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருகின்றனர். இ-மெயில் உள்பட பல்வேறு வழிகளில் பிசிசிஐ அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோதிலும், அவர்கள் உரிய பதிலை அளிப்பது இல்லை. எனவே, அதன் தலைவர் அனுராக் தாக்குர், செயலாளர் அஜய் ஷிர்கே உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

அந்த மனுவின் மீது இன்று விசாரணை நடைபெற்றது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், பிசிசிஐ நிறுவனம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்படவேண்டும். நாங்கள் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த என்ன செய்யவேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். கடவுள் போல தன்னை எண்ணுகிறது பிசிசிஐ. அதன் நடவடிக்கைகள் சரியாக இல்லை. லோதா பரிந்துரைத்த உத்தரவுகளை அமல்படுத்தாதது குறித்து அக்டோபர் 6-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று பிசிசிஐக்கு  உத்தரவிட்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.