/

இன்னிங்ஸ் தோல்வியைச் சந்திக்கவுள்ளதா மும்பை? கர்நாடகா 397 ரன்கள் முன்னிலை!

News image
Updated On :9 டிசம்பர் 2017, 9:13 am

எழில்

நாகபுரியில் நடைபெற்று வரும் ரஞ்சிப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி மும்பைக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 397 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் வியாழக்கிழமை தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகம் பந்துவீச தீர்மானித்தது. மும்பை தனது முதல் இன்னிங்ஸில் 56 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் தவல் குல்கர்னி அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். கர்நாடக தரப்பில் வினய் குமார் 6 விக்கெட் எடுத்தார். பிறகு முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த கர்நாடக அணி, 2-ம் நாள் முடிவில் 122 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 395 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் கோபால் 80, வினய் குமார் 31 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் 163.3 ஓவர்களில் 570 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது கர்நாடக அணி. 24 வயது ஷ்ரேயஸ் கோபால் பிரமாதமாக விளையாடி 150 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி விக்கெட்டுக்கு கோபாலும் அரவிந்த் ஸ்ரீநாத்தும் 92 ரன்கள் எடுத்தார்கள். அரவிந்த் 41 பந்துகளில் 1 சிக்ஸர் 9 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து மும்பை அணியை மேலும் வெறுப்பேற்றினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் கர்நாடக அணி 397 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது மும்பை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 2 ரன்கள் எடுத்த பிருத்வி ஷா, இரண்டாவது இன்னிங்ஸிலும் ஏமாற்றினார். 14 ரன்களில் அரவிந்த் பந்துவீச்சில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் பிஸ்டாவும் 20 ரன்களில் கெளதம் பந்துவீச்சில் வீழ்ந்தார். 357 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்னும் மும்பை வசம் 8 விக்கெட்டுகள் உள்ளன. இதனால் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.