இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வென்றது.
இத்துடன் 8 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை 5 வெற்றி, 2 தோல்விகளை அடைந்ததுடன், ஒரு ஆட்டத்தை டிரா செய்து புள்ளிகள் பட்டியலின் முதலிடத்தில் உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் இரு அணிகளுக்கு இடையே வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது சென்னை அணி. இருப்பினும், சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டம் என்பதால் சற்றும் சளைக்காமல் ஜாம்ஷெட்பூர் எதிராட்டம் ஆடியது.
இதனால் ஆட்டம் கோல் இன்றி நீண்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல் பாதி முடியும் நிலையில் கோலடித்தார் சென்னை வீரர் ஜிஜி. ஆட்டத்தின் 41-ஆவது நிமிடத்தில் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில், ஜாம்ஷெட்பூர் கோல் கீப்பர் சுப்ரதா பாலை எளிதாக ஏமாற்றி ஜிஜி கோலடித்தார்.
இதனால் முதல் பாதியிலேயே சென்னை 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் கோல் வாய்ப்பு கிடைக்காததால், சென்னை அணி வெற்றி பெற்றது.
தடை: இதனிடையே கடந்த 23-ஆம் தேதி எஃப்சி புணே சிட்டி-எஃப்சி கோவா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின்போது, போட்டி அதிகாரிகளை தவறாக விமர்சித்ததாக எஃப்சி புணே அணி பயிற்சியாளர் ரேங்கோ போபோவிச்சுக்கு 4 ஆட்டங்களில் தடையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.