சென்னை ஓபன் டென்னிஸ்: லோபஸை வெளியேற்றினார் பெடேன்
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் உலகின் 70-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்ஸியா லோபஸை வீழ்த்தினார் 101-ஆம் நிலை வீரரான பிரிட்டனின் அல்ஜாஸ் பெடேன்.

லோபஸுக்கு பந்தை விரட்டும் பெடேன்.

லோபஸுக்கு பந்தை விரட்டும் பெடேன்.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் உலகின் 70-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்ஸியா லோபஸை வீழ்த்தினார் 101-ஆம் நிலை வீரரான பிரிட்டனின் அல்ஜாஸ் பெடேன்.
அதேநேரத்தில் தமிழக வீரரான ராம்குமார் முதல் சுற்றிலேயே பாம்ப்ரியிடம் படுதோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
22-ஆவது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பிரதான கோர்ட்டில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் பிரிட்டனின் அல்ஜாஸ் பெடேன் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கார்ஸியா லோபஸை தோற்கடித்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 4-ஆவது கேமில் 40-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார் லோபஸ். இதனால் அவர் பெடேனின் சர்வீஸை எளிதாக முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆக்ரோஷமாக ஆடிய பெடேன் 3 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்டதோடு, தனது சர்வீஸையும் காப்பாற்றினார். இந்த கேம், பெடேனுக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதன்பிறகு அசத்தலாக ஆடிய பெடேன், 7 மற்றும் 9-ஆவது கேம்களில் லோபஸின் சர்வீஸை முறியடித்தார். இதனால் முதல் செட்டை 37 நிமிடங்களில் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார் பெடேன்.
முதல் செட்டை கைப்பற்றியதால் 2-ஆவது செட்டை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொண்டார் பெடேன். இதனால் 4-ஆவது கேமில் லோபஸின் சர்வீஸை முறியடித்தார். இந்த முறை தனது சர்வீஸை காப்பாற்ற லோபஸ் கடுமையாகப் போராடியபோதும், அதற்கு பலன் கிடைக்கவில்லை.
லோபஸுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்த பெடேன், 7-ஆவது கேமில் அவரை நிலைகுலைய வைத்தார். 9-ஆவது கேமில் லோபஸ் ஆக்ரோஷமாக ஆட, அந்த கேம் டியூஸ் வரை சென்றது. ஆனால் விடாப்பிடியாக போராடிய பெடேன், கேமை தன்வசமாக்கினார். இதனால் 2-ஆவது செட்டும் 6-3 என்ற கணக்கில் அவர் வசமானது. இதுவரை லோபஸுடன் 3 முறை மோதியுள்ள பெடேன், அவையனைத்திலும் வெற்றி கண்டுள்ளார். சென்னை ஓபனில் இதுவரை 17 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெடேனுக்கு இது 13-ஆவது வெற்றியாகும்.
ராம்குமார் தோல்வி: பிரதான கோர்ட்டில் நடைபெற்ற 2-ஆவது முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி 6-1, 6-1 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான ராம்குமார் ராமநாதனை தோற்கடித்தார்.
53 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே யூகி பாம்ப்ரி ஆதிக்கம் செலுத்த, அப்போதே ராம்குமார் தோற்பது உறுதியாகிவிட்டது. முதல் செட்டின் முதல் கேமிலேயே ராம்குமாரின் சர்வீஸை முறியடித்த யூகி பாம்ப்ரி, 3-ஆவது கேமில் 2-ஆவது முறையாக ராம்குமாரின் சர்வீஸை தகர்த்தார். இதனால் முதல் 4 கேம்களின் முடிவிலேயே 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற யூகி பாம்ப்ரி, முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதாக வென்றார். இந்த செட் 25 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
முதல் செட்டைப் போலவே இரண்டாவது செட்டிலும் ராம்குமாரின் முதல் இரு சர்வீஸ்களை முறியடித்த பாம்ப்ரி, இந்த செட்டையும் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.
ராம்குமார், யூகி பாம்ப்ரியின் அசத்தலான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட யூகி பாம்ப்ரி, ராம்குமாரை தொடர்ச்சியாக களத்தில் ஓடவிட்டு கடைசியில் வீழ்த்தினார்.
பெனாய்ட் பேருடன் மோதல்: யூகி பாம்ப்ரி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் பெனாய்ட் பேரை சந்திக்கிறார். முன்னதாக பெனாய்ட் பேர் தனது முதல் சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ரஷியாவின் கான்ஸ்டான்டின் கிராவ்சுக்கை தோற்கடித்தார்.
மற்ற ஒற்றையர் முதல் சுற்று ஆட்டங்களில் சீன தைபேவின் யென்-சன் லூ 6-2, 6-1 என்ற நேர் செட்களில் மால்டோவாவின் ராடு அல்பாட்டையும், ஆர்ஜென்டீனாவின் ரென்úஸா ஆலிவோ 7-6 (3), 6-2 என்ற நேர் செட்களில் நார்வேயின் இளம் வீரரான காஸ்பெர் ரூட்டையும் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
"நிறைய மேம்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது'
தோல்வி குறித்துப் பேசிய ராம்குமார், "இந்த ஆட்டத்திற்காக போதுமான அளவில் தயாராகவில்லை என்று கூற முடியாது. யூகி பாம்ப்ரி சாதுர்யமாகவும், ஆக்ரோஷமாகவும் ஆடினார். அவருக்கு எனது வாழ்த்துகள். இந்த நாள் என்னுடையதாக இல்லை. அடுத்த சில தினங்களில் நிறைய விஷயங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. ஏடிபி சேலஞ்சர் போட்டிகளில் நிறைய விளையாடியிருக்கிறேன். எனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு இன்னும் நிறைய ஏடிபி சேலஞ்சர் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது' என்றார்.
மைனேனி தோல்வி
பிரதான கோர்ட்டில் நடைபெற்ற 3-ஆவது ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாகேத் மைனேனி 4-6, 3-6 என்ற நேர் செட்களில் ரஷியாவின் மிகைல் யூஸ்னியிடம் தோல்வி கண்டார். ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் இந்தியாவின் சார்பில் ராம்குமார், சாகேத் மைனேனி, யூகி பாம்ப்ரி ஆகியோர் பங்கேற்றனர். இதில் பாம்ப்ரி மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
"பிரேக் பாயிண்டை காப்பாற்றியது திருப்புமுனை'
வெற்றி குறித்துப் பேசிய அல்ஜாஸ் பெடேன், "கடந்த சீசனின் கடைசிக் கட்டத்தில் அதிக நாள்கள் ஓய்வில் இருந்தேன். நீண்ட நாள்களுக்குப் பிறகு விளையாடுவது எளிதல்ல. அதனால் ஆரம்பத்தில் சற்று பதற்றத்துடன் இருந்தேன். முதல் செட்டின் 4-ஆவது கேமில் மிக மோசமான நிலையில் இருந்தபோது பிரேக் பாயின்டை காப்பாற்றியது எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு நம்பிக்கை பெற்ற நான் இறுதியில் வெற்றி கண்டேன். சிறப்பாக ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
கின்னஸ் சாதனை
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது நாளில் இளம் வீரர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. அப்போது டென்னிஸ் குறித்த பல்வேறு யோசனைகள் வழங்கப்பட்டன. சிலருக்கு தொழில்முறை வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த முகாமில் 950 பேர் கலந்துகொண்டனர். இதன்மூலம் புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. முன்னதாக 850 பேர் பங்கேற்றதே சாதனையாக இருந்தது.
துளிகள்...
*பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களின் பதவியில் ஒட்டுமொத்தமாக 9 ஆண்டுகளுக்கு மேலாக நீடிப்போர் அத்தகைய பொறுப்புகளில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவர் என்று லோதா குழு பரிந்துரை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
*இந்திய ஆடவர் குத்துச்சண்டை வரலாற்றில் முதல் முறையாக, 2 தலைமை பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் எஸ்.ஆர்.சிங், பாட்டியாலா முகாமிற்கும், ஷிவ் சிங், ஒளரங்காபாத் முகாமிற்கும் பொறுப்பு வகிக்க உள்ளனர்.
*சரிதா தேவியைத் தொடர்ந்து, இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பிங்கி ஜங்ரா தொழில்முறை குத்துச்சண்டையில் களமிறங்கவுள்ளார்.
*ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கு, மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
*மகளிருக்கான தேசிய சப்-ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ராமநாதபுரத்தில் புதன்கிழமை தொடங்குகிறது.
*தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் சார்பிலான மகளிர் சாம்பியன்ஷிப்பில் புதன்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான இந்தியா, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தியா, முந்தைய 3 சீசன்களிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
*இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் 116 ஓவர்களில் 392 ரன்கள் எடுத்தது தென்னாப்பிரிக்கா. அடுத்து ஆடிய இலங்கை 43 ஓவர்களில் 110 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 282 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்கா, 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...